சிங்கப்பூரில் 185 நிறுவனங்களின் இயக்குநர், செயலாளர், பங்குதாரர் என்று சிங்கப்பூர்வாசி ஒருவர் பெயர் குறிப்பிடப்பட்டு இருக்கிறார்.
அந்த நிறுவனங்களில் பலவற்றுக்கும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கைதான 10 பேரில் மூன்று பேருக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இதனால் கவலை தலைதூக்கி இருக்கிறது.
$1 பில்லியன் சட்டவிரோத பணப்புழக்கம் தொடர்பில் அந்த 10 பேரும் கைது செய்யப்பட்டனர்.
தனி ஒருவர் இந்த அளவுக்குப் பல நிறுவனங்களுடன் சம்பந்தப்பட்டு இருப்பது சாத்தியமற்றது என்று வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
இத்தகைய நியமனங்கள் சந்தேகத்திற்கு இடமானவை என்றும் அவர்கள் கூறினர்.
சிங்பாஸ் கணக்கு இல்லாத வெளிநாட்டினர், நிறுவனங்களைப் பட்டியலிடுவதற்கான விண்ணப்பங்களைத் தங்கள் சார்பில் தாக்கல் செய்ய வேண்டுமானால் சட்ட நிறுவனம், கணக்கு நடைமுறை அல்லது நிறுவனச் செயலக நிறுவனம் போன்ற பதிவுபெற்ற முகவையை நியமித்துக் கொள்ள வேண்டிய தேவை இருக்கும்.
அந்த முகவர்கள் தங்கள் வாடிக்கையாளருக்குப் பணமும் சொத்துகளும் வந்ததற்கான வழிகளைப் பரிசோதிக்க வேண்டிய தேவை இருக்கிறது.
ஜேஜே என்ற பிடோக்வாசி, செயலகச் சேவை வழங்கும் ஒரு நிறுவனத்தை நடத்துகிறார். முதலீடு, தொழில்நுட்பம், ஆலோசனை, மருந்து வர்த்தகம் ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்ட 224 நிறுவனங்களின் இயக்குநராக, செயலாளராக அல்லது பங்குதாரராக அவர் முன்பு நியமிக்கப்பட்டார்.
தொடர்புடைய செய்திகள்
அந்த நிறுவனங்களில் மூன்றில் ஒரு பங்கு நிறுவனங்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன. 185 நிறுவனங்கள் இன்னமும் செயல்படுகின்றன.
அவற்றில் ஒன்பது நிறுவனங்களின் இயக்குநர்கள், பங்குதாரர்கள் என்று குறிப்பிடப்படும் மூன்று வெளிநாட்டினரும் சீனாவைச் சேர்ந்தவர்கள்.
அவர்கள் மீது நீதிமன்றத்தில் பல்வேறு குற்றங்கள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது. ஆகஸ்ட் 15ஆம் தேதி அதிகாரிகள் எடுத்த நடவடிக்கையில் அவர்கள் சிக்கினர்.
அந்த ஒன்பது நிறுவனங்களின் இயக்குராக, செயலாளராக அல்லது பங்குதாரராக ஜேஜே நியமிக்கப்பட்டது, கணக்குத் தணிக்கை நிறுவன ஒழுங்குமுறை ஆணையத்தின் ஆவணங்கள் மூலம் தெரியவருகிறது.
ஜேஜே, 41, பிடோக்கில் வீவக வீட்டில் வசிக்கிறார். கைதாகி இருக்கும் சந்தேகப் பேர்வழிகளில் ஒருவருடன் தனக்குத் தொழில் தொடர்பு உண்டு என்று ஜேஜே கூறினார்.
“அந்த நபர் அவரின் நிறுவனத்தில் முதலீடு செய்யும்படி என்னைக் கேட்டுக்கொண்டார். தனது நிறுவனத்தைக் கவனித்துக் கொள்ளும்படி அவர் என்னைக் கேட்டுக்கொண்டார்.
“ஆனால் நான் ஒரு காசுகூட பெற்றதில்லை. பங்குகளையும் பெற்றதில்லை,” என்று அவர் கூறினார். தான் எதையுமே பெறவில்லை என்பதால் காவல்துறையில் புகார் செய்யப்போவதாக ஜேஜே மேலும் தெரிவித்தார்.