தவழும் குழந்தைகளும் பாலர்பள்ளிப் பிள்ளைகளும் நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 180 நிமிடங்கள் பலதரப்பட்ட அங்க அசைவுகளில் ஈடுபட வேண்டும்.
குழந்தைகள் தன் உடல் பகுதிகளை அசைத்து செய்யும் ஒவ்வொரு செயலுமே முக்கியமானவை.
கேகே மாதர், சிறார் மருத்துவமனை 2021ல் ஆய்வு ஒன்றை நடத்தியது.
சிங்கப்பூரில் ஏழு வயதுக்குக் கீழ் உள்ள சிறாரில் பத்தில் நான்கு பேர் மட்டுமே வார நாளில் நாள் ஒன்றுக்கு வெறும் 90 நிமிட அங்க அசைவுகளில் ஈடுபடுகிறார்கள் என்பது அந்த ஆய்வு மூலம் தெரியவந்தது.
பாலர்களுக்கான 24 மணி நேர அங்க அசைவுகளுக்கான ஒருங்கிணைந்த வழிகாட்டி நெறிமுறைகளின் முதல் தொகுப்பில் பல பரிந்துரைகள் இடம்பெற்று இருக்கின்றன. அவற்றுக்கு அந்த ஆய்வு காரணம். அந்த வழிகாட்டி நெறிமுறை தொகுப்பு ஆகஸ்ட்டில் வெளியிடப்பட்டது.
இளம் பிள்ளைகளுக்குப் போதிக்கும் போதனையாளர்களைக் கருத்தில்கொண்டு அந்தத் தொகுப்பு உருவாகி இருக்கிறது.
‘ஃபன் ஸ்டார்ட் மூவ் ஸ்மார்ட்’ என்னும் அந்த வழிகாட்டித் தொகுப்பு, 500க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள், பாடத்திட்ட சிறப்பு நிபுணர்கள் மற்றும் பாலர் பள்ளி நிலையத் தலைவர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.
அங்க அசைவுத் திறன்களுடன் விளையாட்டு அடிப்படையிலான நடவடிக்கைகளும் குழந்தைகளின் படைப்பாற்றல் மற்றும் கற்பனைத் திறன்களை அதிகரிக்க உதவும்.