தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

$2.7 டிரில்லியன் மின்னிலக்கப் பொருளியல்; ஆசியான் பேச்சுவார்த்தை தொடக்கம்

2 mins read
e0fde2cc-b593-4488-9af2-31a99e1237ab
ஆசியான் நாடுகளுக்கு இடையில் மின்னிலக்க வர்த்தகம் மேலும் தடையில்லாமல் இடம்பெறுவதற்கு வசதியாக ‘ஆசியான் மின்னிலக்கப் பொருளியல் ஏற்பாட்டு உடன்பாடு’ தொடர்பில் ஜகார்த்தாவில் பேச்சுவார்த்தை தொடங்கி இருக்கிறது. - படம்: ராய்ட்டர்ஸ் 

தென்கிழக்கு ஆசியாவில் உள்ள சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு இடையே விரைவில் இணைய வர்த்தகம் மிகவும் வசதியாக, மேலும் வேகமாக நடக்கவிருக்கிறது.

ஒரு புதிய ஏற்பாடு தொடர்பில் ஆசியான் பேச்சுவார்த்தையைத் தொடங்கி இருப்பதே இதற்கான காரணம்.

ஆசியானின் மின்னிலக்கப் பொருளியலின் மதிப்பு 2030ஆம் ஆண்டுவாக்கில் US$2 டிரில்லியனாக (S$2.7 டிரில்லியன்) இருக்கும் என்று கணக்கிடப்பட்டு இருக்கிறது.

‘ஆசியான் மின்னிலக்கப் பொருளியல் ஏற்பாட்டு உடன்பாடு’ (டெஃபா) பற்றிய பேச்சுவார்த்தையை ஞாயிற்றுக்கிழமை ஆசியான் தொடங்கியது.

அந்த உடன்பாட்டின் மூலம் ஆசியான் நாடுகளுக்கு இடையில் எல்லை கடந்த மின்னிலக்க வர்த்தகம் மேலும் தங்குதடையில்லாமல் நடக்கும்.

மின்னிலக்க வர்த்தக ஏற்பாடுகள், பணப்பட்டுவாடாக்கள் போன்ற முக்கியமான துறைகள் தொடர்பான விதிமுறைகள் அந்த உடன்பாடு காரணமாக மேம்படும்.

இதனால் இந்த வட்டாரத்தில் தொழில் நடத்துவது எளிதாகும் என்று சிங்கப்பூரின் வர்த்தக, தொழில் அமைச்சு ஞாயிற்றுக்கிழமை கூறியது.

இயந்திர மனிதத் தொழில்நுட்பம் போன்ற மேம்பாடுகள், புதிதாக தலையெடுக்கும் போக்குகள் ஆகியவற்றைக் கையாளுவதும் அந்த உடன்பாட்டின் நோக்கம் என்று அது மேலும் கூறியது.

இந்தோனீசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் 23வது ஆசியான் பொருளியல் சமூக மன்றக் கூட்டம் நடந்தது.

அதில் சிங்கப்பூரின் வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் கலந்துகொண்டார். அந்தக் கூட்டத்தில் ஆசியான் டெஃபா பேச்சுவார்த்தை தொடங்கியது.

மத்திய ஜாவாவில் உள்ள செமராங்கில் ஆகஸ்ட் மாதம் கூடி டெஃபா பற்றி ஆய்வு ஒன்றை நடத்த ஆசியான் இணங்கியது. அதையடுத்து புதிய உடன்பாட்டுப் பேச்சுவார்த்தை தொடங்கி இருக்கிறது.

டெஃபா உடன்பாட்டின் விளைவாக இந்த வட்டாரத்தின் மின்னிலக்கப் பொருளியலின் மதிப்பு US$1 டிரில்லியனிலிருந்து 2030வாக்கில் US$2 டிரில்லியனாக மேம்படும் என்று போஸ்டன் கன்சல்டன்சி குரூப் என்ற நிறுவனம் நடத்திய அந்த ஆய்வு கூறுகிறது.

டெஃபா தொடர்பான பேச்சுவார்த்தைகளை 2025ஆம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

இதனிடையே, புதிய பேச்சுவார்த்தை பற்றி கருத்து கூறிய சிங்கப்பூரின் வர்த்தக, தொழில் அமைச்சர் கான், ஆசியான் சாதித்து இருக்கும் நல்ல பணியை மேலும் பலப்படுத்துவதாக அந்தப் பேச்சுவார்த்தை இடம்பெறுகிறது என்று தெரிவித்தார்.

‘‘அந்த உடன்பாடு காரணமாக இந்த வட்டாரம் மின்னிலக்க ரீதியில் இணையும், இன்னும் அணுக்கமாகும். அதன்மூலம் திறந்த, பாதுகாப்பான, போட்டித்திறன்மிக்க வட்டார மின்னிலக்கப் பொருளியல் சாதிக்கப்படும்,’’ என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஆசியான் நாடுகளுடன் சேர்ந்து செயல்பட்டு பேச்சுவார்த்தையை விரைந்து முடித்து, நம்முடைய நிறுவனங்கள் புதிய வளர்ச்சி வாய்ப்புகளைப் பற்றிக்கொள்ள உதவி கிடைப்பதைக் காண சிங்கப்பூர் விரும்புகிறது என்று அவர் தெரிவித்தார்.

சிங்கப்பூரின் ஆகப் பெரிய வர்த்தகப் பங்காளியாக ஆசியான் திகழ்கிறது. ஆசியானில் சிங்கப்பூர் ஆக அதிகமாக முதலீடு செய்து இருக்கிறது.

ஜகார்த்தாவில் செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரை நடைபெறவிருக்கும் 43வது ஆசியான் உச்சநிலைக் கூட்டத்தில் மின்னிலக்கப் பொருளியல் பற்றியும் இதர விவகாரங்கள் குறித்தும் ஆசியான் தலைவர்கள் விவாதிப்பார்கள்.

குறிப்புச் சொற்கள்