தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

செங்காங் ஆலயத்தில் சீரடி சாய்பாபா சன்னிதி

2 mins read
8d9f7c67-5ad7-4e3d-800c-233d16194eea
சீரடி சாய்பாபா சன்னிதி திறப்புப் பூசையில் பக்தர்கள். - படம்: கி.ஜனார்த்தனன்

செங்காங் வட்டாரத்திலுள்ள அருள்மிகு வேல்முருகன் ஞானமுனீஸ்வரர் ஆலயத்தில் சீரடி சாய்பாபாவின் திருவுருவச் சன்னிதி ஞாயிற்றுக்கிழமையன்று (செப்டம்பர் 3) புதிதாகத் திறக்கப்பட்டது. இந்த விழாவில் 8,000க்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்றனர்.

காலை முதல் வேள்விகள் நடத்தப்பட்டு பின்னர், கோயிலின் தரைத்தளத்திலுள்ள ஓர் அறையில் அமைக்கப்பட்டுள்ள சன்னிதியில் வழிபாட்டுச் சடங்குகள் நடந்தேறின. பூசைகள் கோயிலுக்கு வெளியே அமைக்கப்பட்ட ஒளித்திரை நேரலையில் ஒளிபரப்பானது.

இந்தியாவிலுள்ள மூல சீரடி சாய்பாபா கோயிலின் தலைமைக் குருக்களான திகம்பர பாலாசாகிப் குல்கர்னி, சந்திர சேகர் பாலாசாகிப் குல்கர்னி ஆகியோர் இவ்விழாவை வழிநடத்தினர். மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று விழாவைச் சிறப்பித்தார்.

தலைப்பாகை அணிந்துள்ள மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன்.
தலைப்பாகை அணிந்துள்ள மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன். - படம்: கி.ஜனார்த்தனன்

ஓராண்டாக நீடித்த ஏற்பாடுகளுக்குப் பின், ஜெய்ப்பூரில் உருவாக்கப்பட்ட சீரடி சாய்பாபாவின் பளிங்குத் திருவுருவம் இவ்வாண்டு ஏப்ரல் மாதம் சிங்கப்பூருக்கு வரவழைக்கப்பட்டது. இந்திரன் குழுவினரும் பாபா சேவா குழுவினரும் இணைந்து பக்தர்களுக்காக உணவு சமைத்து விநியோகம் செய்தனர்.

எட்டு மாதங்களாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் 600 தொண்டூழியர்கள் பங்கேற்றனர். இவர்களில் 150 பேர் ஆலயத்தைச் சேர்ந்தவர்கள். ஆலயத்திற்கு அருகிலுள்ள சோங் ஹுவா தோங் தூ தெக் ஹுவீ சீனக் கோயிலின் தொண்டூழியர்கள் உதவியதுடன் நிகழ்ச்சிக்கு வந்திருந்த 500 விருந்தாளிகளை உபசரிப்பதற்கு பலபயன் அறையும் கொடுத்து உதவினர்.

19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மகானான சீரடி சாய்பாபாவுக்கு சன்னிதி அமைக்கும் கனவு நனவானதாக நெகிழ்ச்சியுடன் கூறினார் ஆலயத்தின் துணைத் தலைவர் கே. ரவீந்திரன். “காலஞ்சென்ற ஆலயத் தலைவர் ஏஜே பால், தற்போதைய தலைவர் எஸ். தியாகராஜன் ஆகியோரின் ஊக்குவிப்பும் பக்தர்களின் தனிப்பட்ட நிதியாதரவும் இக்கனவை நனவாக்கின,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்
கோயில்