வாக்களிப்பு நாளில் வீடுபுகுந்து திருடியதாகக் கூறப்படும் ஆடவர் கைது

2 mins read
ccd9e921-dbb4-44d6-a092-cdf78de1bb76
வாக்களிப்பு நாளில் திருடியதாகக் கூறப்படும் ஆடவர் மறுநாள் நாட்டை விட்டுத் தப்பியோட முயன்றார். ஆனால் சாங்கி விமான நிலைய நான்காம் முனையத்தில் அவர் பிடிபட்டார். - படம்: சிங்கப்பூர் காவல்துறை

சிங்கப்பூரில் அதிபர் தேர்தலுக்கான வாக்களிப்பு நடைபெற்ற செப்டம்பர் 1ஆம் தேதி, நான்கு வீடுகளுக்குள் புகுந்து திருடியதாகக் கூறப்படும் 35 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாசிர் ரிஸ் வட்டாரத்தில் அமைந்திருக்கும் தரை வீடுகளுக்குள் புகுந்து கைவரிசை காட்டிய அவர், $3,500க்கு மேற்பட்ட பணத்தைத் திருடியதாகக் கூறப்பட்டது.

செப்டம்பர் 2ஆம் தேதி அவர் சிங்கப்பூரை விட்டுத் தப்பியோட முயன்றார். ஆனால் சாங்கி விமான நிலையத்தின் நான்காம் முனையத்தில் பிடிபட்டார்.

திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் முதல் புகார் பெறப்பட்டதில் இருந்து 19 மணி நேரத்திற்குள் அந்த ஆடவர் கைது செய்யப்பட்டதாக சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்தது.

திங்கட்கிழமை பின்னேரம் அவர்மீது குற்றம் சாட்டப்படும் எனக் கூறப்பட்டது.

முன்னதாக, செப்டம்பர் 1ஆம் தேதி காலை 9 மணியளவில் முதல் புகார் பெறப்பட்டதாகவும் பின்னர் இரவு 11.10 மணிக்கும் மறுநாள் பிற்பகல் 2.20 மணிக்கும் மேலும் இரு திருட்டுகள் குறித்துப் புகார் அளிக்கப்பட்டதாகவும் காவல்துறை கூறியது.

நான்காவது திருட்டுச் சம்பவம் குறித்துப் புகார் அளிக்கப்படவில்லை.

சந்தேகப் பேர்வழி செப்டம்பர் 1ஆம் தேதி இரவு 9 மணியளவில் ஒரு வீட்டிலிருந்து தப்பியோட முயன்றதைக் கண்ட பொதுமக்கள் நால்வர் அவரைப் பிடிக்க முயன்று தோற்றதாகக் கூறப்பட்டது.

ஆடவர் சன்னல் வழியே குதித்துத் தப்பினார். ஆனால் அவரிடமிருந்து பறித்த பையில் ரொக்கம், வெளிநாட்டு ரொக்கம், உடைகள், விலை உயர்ந்த பொருள்கள், வீட்டுக் கதவை உடைத்துத் திறக்க உதவும் கருவிகள் போன்றவை காணப்பட்டன.

ஏறத்தாழ $1,600 ரொக்கமும் $1,900 மதிப்புள்ள வெளிநாட்டுப் பணமும் கைப்பற்றப்பட்டதாகக் காவல்துறை கூறியது.

குறிப்புச் சொற்கள்