உட்லண்ட்ஸ் மார்ட் பாலர் பள்ளியில் குழந்தை தவறாக நடத்தப்பட்ட சம்பவத்தைக் கையாண்டதில் குறைபாடு இருந்ததை பாலர்பருவ மேம்பாட்டு அமைப்பு ஒப்புக்கொண்டு உள்ளது.
இதுதொடர்பாக நடப்பில் உள்ள நடமுறைகளை மறுஆய்வு செய்து வருவதாகவும் அது தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பு திங்கட்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
இச்சம்பவம் தொடர்பான விசாரணையை, காணொளி ஆதாரத்துடன் தகவல் கிடைத்த மறுநாள், அதாவது ஆகஸ்ட் 11ஆம் தேதி தொடங்கியதாக பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு தனது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.
சமூக ஊடகங்களிலும் தகவல் தளங்களிலும் காணொளிகள் பரவலாகப் பகிரப்பட்ட பின்னர் ஆகஸ்ட் 28ஆம் தேதி இச்சம்பவம் பொதுமக்களின் கவனத்துக்கு வந்தது.
கிண்டர்லேண்ட் நிறுவனத்தின் உட்லண்ட்ஸ் மார்ட் பாலர் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர், தண்ணீர் குடிக்குமாறு குழந்தை ஒன்றை பலவந்தப்படுத்தியதும் மற்றொரு குழந்தையின் பிட்டத்தில் அடித்ததும் அந்தக் காணாளிகளில் பதிவாகி இருந்தன.
விசாரணை நடத்தப்பட்ட வேளையில், அந்தப் பாலர் பள்ளியில் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அபாயங்கள் இல்லாத வகையில் போதுமான கண்காணிப்பு நடவடிக்கைகள் நடப்பில் உள்ளனவா என்பதை தனது அதிகாரி ஒருவர் ஆராய்ந்ததாக பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு தெரிவித்து உள்ளது.
இருப்பினும், சம்பந்தப்பட்ட ஆசிரியரை உடனடியாக வகுப்பறைப் பணிகளில் இருந்து நீக்க அந்த அதிகாரி தவறியதாக அமைப்பு கூறியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
குழந்தைகளின் பாதுகாப்புக்குக் குந்தகம் ஏற்பட்டிருப்பதாக தெளிவான ஆதாரம் கிடைத்த பிறகு ஆசிரியரை நீக்கவேண்டும் என்பது நடப்பில் உள்ள வரைமுறை என்று அமைப்பு விளக்கி உள்ளது.
குழந்தைகளை நடத்தும் முறை தொடர்பாக கிண்டர்லேண்ட் நிர்வாகத்தின்கீழ் உள்ள எல்லா பாலர் பள்ளிகளிலும் சுயேச்சையான மறுஆய்வு செய்யுமாறு அந்நிறுவனம் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.
மேலும் மறுஆய்வில் கண்டறிந்த விவரங்களையும் அவை தொடர்பான பரிந்துரைகளையும் மூன்று மாதங்களுக்குள் சமர்ப்பிக்குமாறும் கிண்டர்லேண்டுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
இந்த மறுஆய்வு காலகட்டத்தின்போது கிண்டர்லேண்டின் எல்லா பாலர் பள்ளிகளிலும் பாலர்பருவ மேம்பாட்டு அமைப்பின் அதிகாரிகள் அடிக்கடி திடீர் சோதனைகளை மேற்கொள்வார்கள் என்றும் அணுக்கமாகக் கண்காணிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வகுப்பறைகளை நிர்வகிக்கும் நடைமுறைகள் சரியாக உள்ளனவா என்பதை அப்போது அவர்கள் உறுதிசெய்வார்கள்.
இதற்கிடையே, அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியான டான் சீ வீ, பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு இன்னும் நன்றாகச் செயல்பட்டு இருக்க வேண்டும் என்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.
“விசாரணை செய்தபோதே, சம்பந்தப்பட்ட ஆசிரியரை வகுப்பறைப் பணியிலிருந்து நீக்குமாறு கிண்டர்லேண்டிடம் தெரிவிக்காததற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம்,” என்றார் அவர்.

