தீவு முழுவதும் நடத்தப்பட்ட இரண்டு வார அதிரடிச் சோதனையில் 329 சந்தேகப் பேர்வழிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 1,300க்கும் மேற்பட்ட மோசடி குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. அந்த மோசடிகள் மூலம் 9.4 மில்லியன் வெள்ளிக்கு மேல் இழப்பு ஏற்பட்டதாக அதிகாரிகள் நம்புகின்றனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 236 பேர் ஆண்கள், 93 பேர் பெண்கள். அவர்களின் வயது 15க்கும் 70க்கும் இடைப்பட்டது என்று காவல்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தகவல் வெளியிட்டனர்.
அதிரடிச் சோதனை ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நடந்தது.
தற்போது சந்தேகப் பேர்வழிகள் விசாரிக்கப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்தது.
அவர்கள் இணையம் மூலம் காதல், மின்வணிகம், வீட்டை வாடகைக்கு விடுதல், முதலீடு, வேலைவாய்ப்பு, அரசாங்க அதிகாரி போல் பேசுவது போன்றவற்றின்மூலம் மோசடி செய்திருக்கலாம் என்று அதிகாரிகள் கூறினர்.
கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றுவது, தகுந்த உரிமம் இல்லாமல் பண சேவையில் ஈடுபட்ட குற்றங்களுக்காகவும் சந்தேகப் பேர்வழிகள் விசாரிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு 10 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை, 500,000 வெள்ளி வரையிலான அபராதம் விதிக்கப்படலாம்.
தொடர்புடைய செய்திகள்
பொதுமக்கள், மோசடி குற்றங்களுக்கு துணை போவதைத் தவிர்க்குமாறும், தங்களது வங்கிக் கணக்குகள் தொடர்பான தகவல்களை மோசடியாளர்களிடம் தர வேண்டாம் என்றும் காவல்துறை கேட்டுக்கொண்டது.
பொதுமக்கள், மோசடி தொடர்பான மேல்விரவரங்களை www.scamalert.sg என்ற இணையத்தளம் வழியாகத் தெரிந்துகொள்ளலாம் அல்லது 1800-722-6688 என்ற எண்ணிற்கு அழைக்கலாம்.