ஆசியான் எந்தவொரு பெரிய போட்டி சக்திகளுக்கும் அடிபணிந்துவிடக்கூடாது என்று இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ அறைகூவல் விடுத்துள்ளார்.
ஆசியான் தலைவர்கள் அதிகரித்து வரும் உலகச் சவால்களைச் சமாளிக்கும் வகையில் துணிச்சலுடன் நீண்டகால உத்திகளை வகுத்துச் செயல்பட வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.
ஆசியானை ஒரு மாபெரும் கப்பலுடன் ஒப்பிட்ட விடோடோ, அதில் பயணம் செய்யும் மில்லியன் கணக்கான மக்களைப் பாதுகாக்கும் முக்கிய பொறுப்பு தலைவர்களுக்கு உண்டு என்றார்.
ஜகார்த்தாவில் தொடங்கிய ஆசியான் உச்சநிலை மாநாட்டில் பேசிய அவர், ஆசியான் எனும் நமது சொந்தக் கப்பலுக்கு நாமே தலைவராக இருந்து செலுத்த வேண்டும் என்றார்.
ஒரு சூறாவளியில் பயணம் செய்ய வேண்டியிருந்தாலும் இந்தக் கப்பல் தொடர்ந்து பயணிக்க முடியும் என்பதைத் தலைவர்களாகிய நாம் உறுதி செய்ய வேண்டும். அமைதி, நிலைத்தன்மையுடன் ஒன்றாகச் சேர்ந்து செழிப்படைய சொந்தக் கப்பலுக்கு நாமே தலைவராக இருக்க வேண்டும் என்று திரு விடோடோ கூறினார்.
ஜகார்த்தாவில் நேற்று 43வது ஆசியான் உச்சநிலை மாநாடு தொடங்கியது. ஜோக்கோ அதில் தொடக்கவுரையாற்றினார்.
ஆசியான் அமைப்பில் புதிதாகச் சேர்ந்துள்ள கம்போடிய பிரதமர் ஹுன் மானெட் உட்பட ஒன்பது தென்கிழக்கு ஆசியத் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர். ஆசியான் அமைப்பின் உத்தேச உறுப்பினரான திமோர் லெஸ்ட்லியின் பிரதமர் ஸனானா குஸ்மாவோவும் இதில் பங்கேற்றார்.
ஆனால் தாய்லாந்தில் புதிய பிரதமராக பொறுப்பு ஏற்றுள்ள ஸ்ரேத்தா தவிசின் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. உள்நாட்டில் முக்கிய அலுவல் காரணமாக ஆசியான் உச்சநிலை மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என்று முன்னதாக அவர் கூறியிருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
அவருக்கு பதிலாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சின் நிரந்தரச் செயலாளர் சருன் சரோன்சுவான் கலந்துகொண்டார்.
மியன்மாரின் ராணுவத் தலைவர்கள், ஆசியான் முன்வைத்த அமைதித் திட்டத்தில் எந்தவித முன்னேற்றத்தையும் காட்டாததால் ஆசியான் உயர்மட்டக் கூட்டங்களில் பங்கேற்க அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அவர்களது சார்பில் யாரும் கலந்துகொள்ளவில்லை.
செவ்வாய் முதல் வியாழன் வரையிலான மூன்று நாள் உச்சநிலை மாநாட்டின் தொடக்க நாளில் உரையாற்றிய திரு ஜோக்கோ விடோடோ, எந்தவொரு சக்திக்கும் ஆசியான் அடிபணிந்துவிடக் கூடாது என்றார்.
அதே சமயத்தில் அமைதி, வளப்பத்துக்கு ஆசியான் முழு ஒத்துழைப்பு வழங்கும் என்றார் அவர்.
“எங்கள் ஆசியான் கப்பலை ஒருவரையொருவர் அழிக்கும் போட்டிக் களமாக மாற்றாதீர்கள், இதே ஆசியான் கப்பலை இவ்வட்டாரத்திற்கு மட்டுமல்லாமல் உலகிற்கே அமைதி, நிலைத்தன்மை, வளப்பத்தை உருவாக்கும் இடமாக மாற்றுங்கள் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
பத்து நாடுகளைக் கொண்ட ஆசியான் அமைப்பின் உச்சநிலை கூட்டத்துக்கு சுழற்சி முறையில் இந்தோனீசியா இம்முறை தலைமை ஏற்றுள்ளது.
2021ல் ராணுவப் புரட்சியைத் தொடர்ந்து வன்முறையில் மூழ்கியுள்ள மியன்மார் விவகாரம், சர்ச்சைக்குரிய தென்சீனக் கடல் விவகாரத்தில் நடத்தை கோட்பாடுகளுக்கான பேச்சுவார்த்தையை விரைவுப்படுத்துவது ஆகியவற்றுக்கு இடையே இந்த உச்சநிலை மாநாடு நடைபெறுகிறது.
“எதிர்காலச் சவால்களை சமாளிப்பது மிகவும் சிரமமாக இருக்கும். பெரிய நாடுகளின் செல்வாக்கிற்கு இடையே போராட வேண்டியிருக்கும்,” என்று ஆசியான் தலைவர்களிடம் கூறிய திரு விடோடோ, ஆசியானின் ஒற்றுமையால் இவற்றைச் சமாளிக்க முடியும் என்றார்.
“உலகின் பெருங்கடல்கள் தனியாக செல்ல முடியாத அளவுக்கு அகலமாக உள்ளன. வழியில், மற்ற கப்பல்கள், ஆசியான் கப்பல் இருக்கும். நாம் அனைவரும் பரஸ்பர நன்மையைக் கருதி, ஒருவருக்கு ஒருவர் ஒத்துழைப்பு நல்கி ஒன்றாக வளர்ச்சியை நோக்கி பயணம் செய்வோம்,” என்று இந்தோனீசிய அதிபர் குறிப்பிட்டார்.