தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தோ பாயோவில் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு கொண்டோமினியம் வீடுகள் கட்ட நிலம் விற்பனை

2 mins read
ca33e493-621e-4d92-bf1b-7a29ef41c83b
தோ பாயோவில் கொண்டோமினிய வீடுகள் கட்டுவதற்கான புதிய நிலம் விற்கப்படுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தோ பாயோவில் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக கொண்டோமினிய வீடுகள் கட்டுவதற்கான நிலத்தை அரசாங்கம் விற்பனைக்கு விட்டுள்ளது.

லோரோங் 1ல் பிராடல் எம்ஆர்டிக்கு அருகே இந்த நிலப்பகுதி இடம்பெற்றுள்ளது.

அரசாங்க நில விற்பனைத் திட்டத்தின்கீழ் இது விற்பனைக்கு வந்துள்ளது. வழக்கம்போல இதுவும் 99 ஆண்டு குத்தகைக்கு விற்கப்படும். இதன் பரப்பளவு 5,160 சதுர மீட்டர். இங்கு 775 வீடுகள் கட்ட முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசாங்கம், இவ்வாண்டின் 2வது பாதியில் கட்டத் திட்டமிட்டுள்ள 5,160 வீடுகளில் இது ஒரு பகுதியாகும்.

நகர மறுசீரமைப்பு ஆணையம் செவ்வாய்க்கிழமை இந்த விவரங்களை வெளியிட்டது.

கடைசியாக 2015ஆம் ஆண்டில் தோ பாயோவில் தனியார் வீடுகளுக்கான நிலம் விற்கப்பட்டது. லோரோங் 6-லோரோங் 4ல் உள்ள அந்த நிலப்பகுதி 345.86 மில்லியன் வெள்ளிக்கு விற்கப்பட்டது. அதாவது ஒரு சதுர அடியின் விலை 755 வெள்ளியாகும். இங்கு 2016 மே மாதம் ஜெம் ரெசிடன்சஸ் வீடுகள் விற்பனைக்கு வந்தன. அப்போதே 578 வீடுகளில் ஐம்பது விழுக்காடு வீடுகள் விற்கப்பட்டன. 2019 அக்டோபரில் அனைத்து வீடுகளும் விற்று முடிந்தன.

ஜெம் ரெசிடன்சஸில் விற்கப்பட்ட 50 விழுக்காடு வீடுகளை வீவக வீடுகளில் குடியிருந்தவர்கள் வாங்கியதாக தரவுகளை மேற்கோள்காட்டி புரோப்நெக்ஸ் ரியாலிட்டியின் ஆய்வு, உள்ளடக்கப் பிரிவின் தலைவரான வோங் சியவ் யிங் தெரிவித்தார்.

முதிர்ச்சியடைந்த பேட்டைகளில் வீட்டை மேம்படுத்த குடியிருப்பாளர்கள் விரும்புவதை இது காட்டுவதாக அவர் கூறினார்.

2016ஆம் ஆண்டுக்குப் பிறகு தனியார் வீடுகளுக்கான நிலப்பகுதி தோ பாயோவில் விற்கப்படாததால் அதிக கட்டுமான நிறுவனங்கள் இதனை வாங்க போட்டிபோடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புகழ்பெற்ற ராஃபிள்ஸ் பள்ளி, சிஎச்ஐஜே தொடக்கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி (தோ பாயோ) இவ்வட்டாரத்தில் இருப்பதால் புதிய தனியார் வீடுகளை குடியிருப்பாளர்கள் விரும்புவார்கள் எனவும் சொல்லப்படுகிறது.

ஹட்டன்ஸ் ஏஷியாவின் தரவுப் பகுப்பாய்வுப் பிரிவின் மூத்த இயக்குநரான லீ சே டெக், ‘த பீக்@தோ பாயோவி’ல் உள்ள ஐந்தறை வீடுகள் ஒரு மில்லியன் வெள்ளிக்கு மேல் கைமாறுவதைச் சுட்டிக்காட்டினார். நான்கு அறை வீடுகள் இங்கு 800,000 வெள்ளிக்கு விற்பனையாகின்றன.

கிளமெண்டி அவென்யூ 1, உலு பாண்டானில் உள்ள பைன் குரோவ் ஆகிய இரண்டு இடங்களுடன் சேர்த்து ஒப்பந்தக் குத்தகை நவம்பர் 7ஆம் தேதி நண்பகல் முடிவடையும்.