தேசியக் கலை மன்றம் சிங்கப்பூரின் கலைத்துறை வளர்ச்சியை புதிய உயரத்திற்குக் கொண்டுசெல்லும் நோக்கில் ‘அவர் எஸ்ஜி ஆர்ட்ஸ் பிளான் (2023 - 2027)‘ எனும் ஐந்தாண்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
கலைத்துறையில் பல்வேறு புதிய திறன்களை உருவாக்குதல், கலைப்படைப்புகளை உருவாக்கும் முயற்சிகளை மேம்படுத்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல், கலைத் துறையில் ஆராய்ச்சி வாய்ப்புகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட கொள்கைகளோடு 2018 - 2022 திட்டம் சிறப்பாக நிறைவடைந்துள்ள நிலையில், மூன்று முக்கிய குறிக்கோள்களோடு தொடங்கப்பட்டுள்ளது ‘அவர் எஸ்ஜி ஆர்ட்ஸ் பிளான்’ திட்டம்.
சிங்கப்பூரர்களின் கலைக் கண்ணோட்டத்தை ஊக்குவிக்கவும், சிங்கப்பூரை கலைகளுக்கான தனித்துவமான நகரமாக மாற்றவும், ஆக்கபூர்வமான பொருளியலை ஆதரிக்க, வலுவான திறமையான கலைப் பணியாளர்களை உருவாக்குவதோடு, உலகளாவிய கலை ஆர்வலர்களை வியக்க வைக்கும் வகையில் சிங்கப்பூரின் கலை, கலாசாரச் சின்னங்களையும் படைப்புகளையும் உருவாக்கவும் இந்த ஐந்தாண்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கேட்ச்:
தேசிய மரபுடைமைக் கழகம், ஆர்ட் ஹவுஸ் லிமிடெட், சிங்கப்பூர் தேசியக் கலைக்கூடம், எஸ்பிளனேட் உள்ளிட்டவற்றுடன் இணைந்து, ‘கேட்ச்’ எனும் மின்னிலக்கத் தளத்தை தேசியக் கலை மன்றம் அறிமுகப்படுத்த உள்ளது.
இது, கலை, கலாசார நிகழ்வுகளுக்கான ஒன்றிணைந்த மின்னிலக்கத் தளமாக அறிமுகமாக உள்ளது. இதன்மூலம் அனைவரும் சிங்கப்பூரில் நடக்கும் கலை நிகழ்வுகளின் விவரங்களை அறிந்துகொள்ளலாம் என்பதோடு நுழைவுச்சீட்டுகளையும் வாங்க முடியும்.
மாணவர்களுக்கு கலை, கலாச்சார அனுபவங்கள்:
தேசியக் கலை மன்றம், கல்வி அமைச்சுடன் இணைந்து மாணவர்களுக்காக அருங்காட்சியகங்கள், கச்சேரி அரங்குகள் உள்ளிட்ட தொழில்முறை கலை அரங்குகளில் உரிய கலைஞர்களின் தலைமையிலான நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளது.
தீவு முழுதும் கலைநயம்:
தீவு முழுவதும் உள்ள இடங்களை அழகிய கலை அம்சங்களால் நிரப்பி, சிங்கப்பூரை ஒரு தனித்துவமான நகராகவும் மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனை நகர மறுசீரமைப்பு ஆணையத்துடனும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்துடனும் இணைந்து மேற்கொள்ள இருப்பதாக தேசியக் கலை மன்றம் அறிவித்துள்ளது.
இந்த முயற்சி பொது இடங்களுக்கு உயிர்ப்பூட்டவும், கலைப் படைப்புகளை மக்கள் வசிக்கும் இடங்களுக்கு நெருக்கமாக கொண்டுசெல்லவும், சமூகப் பிணைப்பை வலுப்படுத்தவும் இது ஒரு பெருவாய்ப்பாக அமையும்.
தொடர்புடைய செய்திகள்
புதிய வகை பரிசோதனை முயற்சிகள்:
கலைகளிலும் தொழில்நுட்பத்தின் பங்கு அதிகமாகியுள்ளது என்பது மறுக்க முடியாதது. இதனை தொடர்ந்து வலுப்படுத்தவும், ஊக்குவிக்கவும் தேசியக் கலை மன்றம், எஸ்பிளனேடுடன் இணைந்து புதிய வகை பரிசோதனை முயற்சிகளிலும் ஈடுபட உள்ளது.
தேசியக் கலை மன்றம், கலை, கலாசாரங்களைக் கொண்டாடவும் அவற்றின்மீதான ஈடுபாட்டைக் கூட்டவும் ‘மீடியாகார்ப்’ உடன் இணைந்து, உள்ளூர்க் கலைஞர்கள், கலைக் குழுக்களுக்கு அதிக ஆதரவு வழங்கத் திட்டமிட்டுள்ளது.
மரினா பே சாண்ட்சுடன் இணைந்து உள்நாட்டுக் கலைஞர்களின் பதிவு நிகழ்ச்சிகளையும், நேரடி இசை நிகழ்ச்சிகளையும் பார்வைக்கு வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ‘அவர் எஸ்ஜி ஆர்ட்ஸ் பிளான்’ திட்டத்தில் பல்வேறு கலைத்துறைகளைச் சேர்ந்தவர்கள் பங்களித்து வருகின்றனர்.
அந்த வகையில், ஆலோசனை அமர்வுகளில் பங்கேற்பாளராக பல்வேறு கட்டங்களில் ஈடுபட்ட காமினி ராமச்சந்திரன் கூறுகையில், “கலைகளுக்கான திறன் கட்டமைப்பின் வளர்ச்சியில் ஒரு கலைஞராகவும் பயிற்சியாளராகவும் எனது அனுபவத்தையும் நிபுணத்துவத்தையும் பகிர்ந்து கொள்ள முடிந்தது,” எனத் தெரிவித்தார்.
முழுநேர கதைசொல்லியும், படைப்பாளருமான இவர், “குறிப்பாக என்னைப் போன்ற தன்னுரிமைக் கலைத் தொழிலர்களுக்கு இந்தக் கட்டமைப்பு பொருத்தமானதாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருப்பதையும், இந்தத் துறையில் நாம் எவ்வாறு சிறப்பாகச் முன்னோக்கிச் செல்லலாம் என்பதையும் உறுதிப்படுத்தும் விதத்திலான பரிந்துரைகளை நான் செய்துள்ளேன்” என்றார்.
இருபதாண்டுகளுக்கும் மேலாக கலைப் பயிற்றுவிப்பாளராக இருக்கும் காமினி, வளரும் கலைஞர்கள் தங்கள் முன்னேற்றப் பாதைகளை வரைபடமாக்குவதற்கும், தொழில்முறை வளர்ச்சிப் பாதையை நோக்கி அவர்களை வழிநடத்துவதற்கும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் உதவும் இந்தக் கட்டமைப்பிற்கு இயன்ற அளவில் பங்களிக்க எண்ணுவதாவும் தெரிவித்தார்.
மேலும் இவர், இவ்வகை கட்டமைப்பானது சிங்கப்பூரின் ஆக்கபூர்வமான பொருளியலை வலுப்படுத்த உதவும் என்றும் குறிப்பிட்டார்.
“பெருந்தொற்றுக் காலத்திற்குப் பிறகு, கலைத் துறையை ஆராய்ந்து, பரிசோதனை செய்து, விரிவுபடுத்துகிறது இந்த முன்னெடுப்பு. வாழ்நாள் முழுவதும் கற்றலில் நம்பிக்கை கொண்ட நான், புதிய திறன்களைப் பெறுவதற்கான கலைப் பயணத்தில் இந்த திட்டம் துணைபுரியும் என்று நம்புகிறேன்,” என்றும் அவர் சொன்னார்.
கலை, அதன் பல்வேறு வடிவங்களில், சிந்தனையைத் தூண்டுகிறது. அது எளிதில் மக்களை சென்றடைவதை நாம் உறுதிசெய்ய வேண்டும் என்கிறார் ‘கல்ட் ஸ்டுடியோ & கேலரி’ இயக்குநர் வி. நடராஜன்.
‘அவர் எஸ்ஜி ஆர்ட்ஸ் பிளான்’ திட்டத்திற்குப் பரிந்துரைகளை வழங்கிய இவர், “‘கேட்ச்’ திட்டம் பல்வேறு யோசனைகளை உள்ளடக்கிய திட்டமாகத் தெரிகிறது. சவால்களைக் கடந்து குறிக்கோள்களை நோக்கிய அர்ப்பணிப்பு தொடர்ந்து அதிகரிப்பதே இந்த திட்டத்தின் வெற்றிக்கான திறவுகோலாக இருக்கும்,” எனத் தெரிவித்தார்.
பரந்த, ஆக்கபூர்வமான முயற்சிகளுக்கு நிதி உதவியை அதிகரிப்பதோடு, படைப்பாளிகளுக்கான சுதந்திரமும் கிட்டுமென எதிர்பார்ப்பதாகவும் அவர் சொன்னார்.

