ஒப்பந்தம் நீட்டிப்பு; உட்லண்ட்ஸ், சூவா சூ காங்-புக்கிட் பாஞ்சாங்கில் எஸ்எம்ஆர்டி பேருந்து சேவை தொடரும்

ஒப்பந்தம் நீட்டிப்பு; உட்லண்ட்ஸ், சூவா சூ காங்-புக்கிட் பாஞ்சாங்கில் எஸ்எம்ஆர்டி பேருந்து சேவை தொடரும்

2 mins read
2c9524be-0660-4ef1-b2cc-282114e923fd
எஸ்எம்ஆர்டி, பேருந்துச் சேவை வழங்குவதில் 2வது பெரிய நிறுவனமாக உருவாகியுள்ளது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பொதுப் போக்குவரத்து நிறுவனமான எஸ்எம்ஆர்டியின் இரண்டு பேருந்துச் சேவை ஒப்பந்தங்கள் 2026 வரை மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளன. இதனால் உட்லண்ட்ஸ், சூவா சூ காங், புக்கிட் பாஞ்சாங்கில் உள்ள 48 பேருந்து தடங்களில் அதன் சேவை தொடர்கிறது.

இவ்வாண்டு ஒப்பந்தம் காலவதியாகவிருந்த நிலையில் சந்தை நிலவரம், தளவாட வசதிகள், நிலையான சேவை போன்ற அம்சங்களை பரிசீலித்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்ட கேள்வி ஒன்றுக்கு எஸ்எம்ஆர்டி பதிலளித்தது.

ஒப்பந்தங்களை போட்டி நிறுவனங்களுக்குவிடாமல் நீட்டிப்பதே மிகவும் பொருத்தமான ஏற்பாடாக இருக்கும் என்று நிலப்போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.

இரண்டு பேருந்து தொகுப்பு சேவைகளும் போட்டிமிக்க கட்டணத்துடன் நீட்டிக்கப்பட்டது. எஸ்எம்ஆர்டி பூர்த்தி செய்ய வேண்டிய தரத்தில் மாற்றமில்லை என்று ஆணையம் கூறியது.

சிங்கப்பூரில் குறித்த நேரத்தில் நம்பகமான சேவை வழங்குவது உள்ளிட்ட முக்கிய செயல்திறன்களை பேருந்துச் சேவை வழங்கும் நிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டும்..

உட்லண்ட்ஸ் பேருந்துச் சேவையில் 20 வழித்தடங்கள் உள்ளன. அவற்றில் எல்லைத் தாண்டிய 950 சேவையும் அடங்கும். பேருந்து பணிமனை, உட்லண்ட்ஸ் ஒருங்கிணைக்கப்பட்ட போக்குவரத்து மையம், உட்லண்ட்ஸ் தற்காலிக பேருந்து சந்திப்பு நிலையம் ஆகியவற்றை இச்சேவை உள்ளடக்கியிருக்கிறது.

சூவா சூ காங்-புக்கிட் பாஞ்சாங் தொகுப்பில் 28 வழித்தடங்கள் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் கிராஞ்சி பேருந்து பணிமனை, சூவா சூ காங், புக்கிட் பாஞ்சாங் பேருந்து நிலையம் உள்ளிட்டவற்றுக்கு சேவை வழங்கப்படும்.

கடந்த ஆகஸ்ட் மாதம் ஜூரோங் வெஸ்ட்டில் 26 பேருந்து வழித் தடங்களுக்கான ஐந்து ஆண்டு ஒப்பந்தத்தை எஸ்எம்ஆர்டி கைப்பற்றியது. இவ்வாண்டு செப்டம்பர் 1ஆம் தேதி இச்சேவைகள் தொடங்கப்பட்டன.

இந்த வழித்தடங்களில் முன்பு எஸ்பிஎஸ் டிரான்சிட் சேவைகளை வழங்கியது. கடந்த 2022 நவம்பர் மாதம் இவற்றுடன் புக்கிட் மேராவில் உள்ள 17 பேருந்து தடங்களுக்கு ஒப்பந்தக் குத்தகை வெளியிடப்பட்டது. இதில் புக்கிட் மேராவின் 17 வழித் தடங்களை எஸ்பிஎஸ் டிரான்சிட் தக்க வைத்துக் கொண்டது.

ஏற்கெனவே இருந்த இரு ஒப்பந்தங்கள் நீட்டிக்கப்பட்டதுடன் மேலும் ஒரு ஒப்பந்தத்தை எஸ்எம்ஆர்டி கைப்பற்றியிருப்பதால் சிங்கப்பூரின் இரண்டாவது ஆகப்பெரிய பேருந்து நடத்துநராக அது உருவாகியுள்ளது.

குறிப்புச் சொற்கள்