குடிபோதையில் 12 வயது சிறுமியை மானபங்கப்படுத்தியவருக்கு செவ்வாய்க் கிழமை தண்டனை விதிக்கப்பட்டது.
இந்திய நாட்டவரும் சிங்கப்பூர் நிரந்தரவாசியுமான தனிக்கோடி ஷண்முகம், 51, தம் மீது சுமத்தப்பட்ட மானபங்கக் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதால் அவருக்கு ஐந்து மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
2022 ஜூலை 17ஆம் தேதி பிற்பகல் 12.30 மணியளவில் செம்பவாங்கில் உள்ள பேரங்காடியில் சிறுமியுடன் தாயார் இருந்தார். அப்போது குடிபோதையில் இருந்த ஷண்முகம், சிறுமியிடம் சென்று தகாத இடத்தில் கைவைத்துத் தொட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி அலற, ஷண்முகம் நழுவ முயன்றார்.
தனது தாயாரிடம் சிறுமி நடந்தது பற்றி தெரிவித்ததும் மானபங்கப்படுத்தியவரை மாது துரத்திப் பிடிக்க முயற்சி செய்தார். இது, அங்கிருந்த கண்காணிப்புக் கேமராவிலும் பதிவானது.
ஒரு புளோக்கில் மின்தூக்கியில் ஏறிச் சென்ற ஷண்முகம், பின்னர் சைக்கிளில் தப்பிக்க முயற்சி செய்தார். மாது அவரை விடாமல் கத்திக்கொண்டே துரத்தினார். ஒரு கட்டத்தில் அவரது காலணி அறுந்தது. இதற்கிடையே வழிப்போக்கர்கள் ஷண்முகத்தை மடக்கிப் பிடித்தனர். பின்னர் சிறுமியின் தாயார் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்க அவர் கைது செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவத்தினால் சிறுமிக்கு நடுக்கம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவரை அமைதிப்படுத்தினர்.
சிறுமியின் தாயாரும் ஒரு மாத காலம் வீட்டிலிருந்து வேலை செய்ய நேரிட்டது என்று நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.