சிங்கப்பூர், ஆசியானில் வெளிநாட்டு நிறுவனங்கள் அதிக நாட்டம்

2 mins read
9612f733-aba9-44e6-a039-d59aec29f090
தேர்ச்சிமிக்க ஊழியர் அணி, மேம்பட்ட உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவை வெளிநாட்டு நிறுவனங்கள் சிங்கப்பூரை நாடுவதற்கான முக்கியமான காரணங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப்படம்

தென்கிழக்கு ஆசியாவின் வளர்ச்சி வாய்ப்புகளில் அனைத்துலக நிறுவனங்கள் இப்போது அதிக நம்பிக்கை வைத்துள்ளன.

நிறுவனங்களை இணைப்பதன் மூலம், கொள்முதல் செய்வதன் மூலம் தங்கள் தொழில்களைப் பெருக்குவது பற்றி அவை ஆராய்ந்து வருகின்றன.

எச்எஸ்பிசி வர்த்தக வங்கி ஆணை பிறப்பித்து நடத்தப்பட்ட ஓர் ஆய்வு இவ்வாறு தெரிவிக்கிறது.

இதற்கு முன்னதாக சென்ற ஆண்டில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

அடுத்த 12 மாதங்களில் வர்த்தகம் 20.1% அதிகரிக்கும் என்று சென்ற ஆண்டின் ஆய்வில் வெளிநாட்டு நிறுவனங்கள் தெரிவித்து இருந்தன.

இந்த ஆண்டு ஆய்வில் இந்த விகிதம் 23.2% ஆகக் கூடி இருக்கிறது.

இந்த ஆண்டில் நிறுவனங்களை இணைப்பதன் மூலம் கொள்முதல் செய்வதன் மூலம் வளர்ச்சியை கணிசமான அளவுக்கு அதிகமாக்கப்போவதாக கிட்டத்தட்ட கால்வாசி வெளிநாட்டு நிறுவனங்கள் தெரவித்தன.

அடுத்த ஆண்டில் இப்படிச் செய்யப் போவதாகக் கூறிய நிறுவனங்களின் அளவு 10ல் மூன்றாக இருந்தது.

ஆசிய பசிபிக்கில் தளம் கொண்டு செயல்படுகின்ற நிறுவனங்கள், இதர நிறுவனங்களைக் கொள்முதல் செய்ய திட்டமிடும் வாய்ப்புகள் அதிகம் என்று ஆய்வு கூறுகிறது.

ஆய்வில் கலந்துகொண்ட சீனாவைச் சேர்ந்த நிறுவனங்களில் ஏறக்குறைய 65% நிறுவனங்கள், தாங்கள் 2024ல் இணைப்பு, கொள்முதல் மூலம் வட்டார வளர்ச்சியைக் கணிசமாக அதிகரிக்கப்போவதாக தெரிவித்தன.

பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களில் இந்த அளவு 50%க்கும் குறைவாக இருந்தது.

இந்த வட்டாரத்தில் ஏற்கெனவே செயல்படுகின்ற நிறுவனங்கள், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற தங்களுக்கு ஏற்கெனவே பழக்கமான சந்தைகளில் ஒருமித்த கவனம் செலுத்த திட்டம் போடுகின்றன.

இணையம் வழி ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 2 வரை நடத்தப்பட்ட அந்த ஆய்வில் 3,500க்கும் மேற்பட்ட நிறுவனங்களைச் சேர்ந்த முக்கியமான பிரமுகர்களிடம் இருந்து கருத்து திரட்டப்பட்டது.

சீனா, இந்தியா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மத்திய கிழக்கு ஆகியவற்றில் தளம் கொண்டு அவர்கள் செயல்படுபவர்கள்.

தேர்ச்சிமிக்க ஊழியர் அணி, வளர்ச்சி காணும் மின்னிலக்கப் பொருளியல், ஆதரவளிக்கும் அரசாங்கம், ஒழங்குமுறை சட்டதிட்டங்கள், மிகவும் மேம்பட்ட தகவல்தொடர்ப்பு கட்டமைப்புகள், பொருள், சேவை விநியோகத் தொடர்புகள், மேம்பட்ட உள்கட்டமைப்பபு வசதிகள் ஆகியவை வெளிநாட்டு நிறுவனங்கள் சிங்கப்பூரை நாடுவதற்கான முக்கியமான காரணங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்