அதிகரிக்கும் டெங்கி; உடனடி நடவடிக்கைக்கு அழைப்பு

அதிகரிக்கும் டெங்கி; உடனடி நடவடிக்கைக்கு அழைப்பு

படம்: எஸ்பிஎச்

06 Sep 2023 - 3:29 pm

2 mins read

சிங்கப்பூரில் டெங்கிச் சம்பவங்கள் அதிகரிக்கும் ஆபத்து ஏற்பட்டு இருப்பதாக தேசிய சுற்றுப்புற வாரியம் (என்இஏ) தெரிவித்து உள்ளது. அதனால் பொதுமக்கள் கொசுப் பெருக்கத்தை ஒழிக்க உடனடி நடவடிக்கைகளில் இறங்குமாறு அந்த அமைப்பு வலியுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக அது புதன்கிழமை (செப்டம்பர் 6) அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

“டெங்கி கிருமிப் பரவல் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. குறைந்து வந்த வாராந்தர டெங்கிச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

“பல்வேறு இடங்களில் டெங்கிப் பரவல் குழுமங்கள் காணப்படுகின்றன. அத்துடன் ஏடிஸ் கொசுக்கள் பல இடங்களில் பல்கிப் பெருகி உள்ளன,” என்று என்இஏ குறிப்பிட்டது.

மேலும் அது தெரிவிக்கையில், “டெங்கிப் பரவல் வேகத்தைக் கட்டுப்படுத்த எல்லாரும் உடனடியாக நடவடிக்கையில் இறங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது.

“DENV-1 எனப்படும் டெங்கி கிருமி வகை கடந்த இரு மாதங்களாக அதிகமாகப் பரவி வருகிறது. இதற்கு முன்னர் பல இடங்களில் பரவிய DENV-3 வகைக் கிருமியை அது முந்திவிட்டது.

“ஜூலை மாதம் DENV-1 வகைக் கிருமிப் பரவல் சம்பவங்கள் மாதாந்தர விகித அடிப்படையில் 55 விழுக்காடாக இருந்தது. அதேநேரம் DENV-3 கிருமிப் பரவல் சம்பவங்களின் விகிதம் 17 விழுக்காடாக இருந்தது.

“செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 5) வரையிலான கணக்கெடுப்பின்படி, இவ்வாண்டு 6,200 டெங்கிச் சம்பவங்கள் சிங்கப்பூரில் பதிவாகி உள்ளன.

“தீவு முழுவதும் 48 டெங்கிப் பரவல் குழுமங்கள் உள்ளன. அவற்றில் 13 பெரிய குழுமங்கள். இந்தப் பெரிய குழுமம் ஒவ்வொன்றிலும் 10க்கும் மேற்பட்ட டெங்கி சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

“319 டெங்கிச் சம்பவங்கள் பதிவான தோ பாயோ லோரோங் 1 மற்றும் லோரோங் 2 ஆகியனவும் 177 டெங்கிச் சம்பவங்கள் பதிவான தோ பாயோ லோரோங் 1ஏ-வும் இந்தப் பெரிய குழுமங்களில் அடங்கும்.

“இவற்றுடன், 66 டெங்கிச் சம்பவங்கள் பதிவான அங்லோங் லேனும் (சின் மிங்) 44 சம்பவங்கள் பதிவான எங் கோங் ரோடும் (புக்கிட் தீமா) பெரிய குழுமங்களாக உள்ளன.

“சைன்ஸ் பார்க் டிரைவில் 29 சம்பவங்களும் லெண்டோர் லூப்பில் 24 சம்பவங்கள் பதிவான நிலையில் இந்த வட்டாரங்களில் டெங்கிப் பரவல் வேகம் அதிகமாக உள்ளது,” என்று என்இஏ தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்
டெங்கி