தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வரி வசூல் $7.9 பில்லியன் கூடியது; மொத்த வசூல் $68.6 பில்லியனாகியது

3 mins read
4cf1c5a2-a94a-4666-bc8d-6c8ba8b73dc2
2022 ஏப்ரல் முதல் 2023 மார்ச் வரைப்பட்ட நிதி ஆண்டில் மொத்த வரி வசூல் $68.6 பில்லியனாக இருந்தது. இது முந்தைய நிதி ஆண்டைவிட 13.1% அதிகம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் 

சிங்கப்பூரில் வரி வசூல், முந்தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த கடைசி நிதி ஆண்டில் $7.9 பில்லியன் கூடியது.

ஜிஎஸ்டி வரி வருவாய் அதிகமானதும் கொவிட்-19 தொற்றுக்குப் பிறகு பொருளியல் மீட்சி கண்டு நிறுவனங்களின் வருவாய் அதிகரித்ததும் இதற்கான காரணங்கள்.

மொத்த வரி வசூல் 2021-2022 ஆம் நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2022 ஏப்ரல் முதல் 2023 மார்ச் வரைப்பட்ட நிதி ஆண்டில் 13.1% கூடி $68.6 பில்லியனாகியது.

சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் இந்த விவரங்களைத் தெரிவித்தது.

மொத்த வரி வசூல், சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10.7% ஆகும். அரசாங்கத்தின் நடைமுறை வருவாயில் அது 75.4% என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசி நிதியாண்டில், நிலுவையில் இருந்த வருவான வரி, ஜிஎஸ்டி வரி, சொத்து வரி ஆகியவற்றின் அளவு 0.59% குறைந்து $363.1 மில்லியனாக இருந்தது.

இந்தக் குறைவு, முந்தைய நிதியாண்டில் 0.64%. வரி வசூலைப் பகுத்துப் பார்க்கையில் நிறுவன வருமான வரி $4.9 பில்லியன் கூடி $23.1 பில்லியனாக இருந்தது.

மொத்த வரிவசூலில் இதுதான் ஆக அதிகம். அதாவது 33.7% ஆகும்.

தொடர்புடைய செய்திகள்

தனிநபர் வருமான வரி $1.3 பில்லியன் கூடி $15.5 பில்லியனாக அதிகரித்தது. தனிநபர்களின் வருமானம் அதிகமானதே இதற்கான காரணம்.

மொத்த வரி வசூலில் தனிநபர் வருமான வரி 22.6% ஆகும். ஆண்டுக்கு $150,000க்கும் மேற்பட்ட வருவாய் உள்ளவர்கள் செலுத்திய வரி மொத்த தனிநபர் வரியில் 83% ஆகும்.

ஜிஎஸ்டி வருமானம் $1.5 பில்லியன் அதிகமாகி $14.1 பில்லியனாக இருந்தது. மொத்த வரி வசூலில் இது 20.5 விழுக்காட்டிற்குச் சமம்.

என்றாலும்கூட முத்திரை தீர்வை வசூல் $800 மில்லியன் அல்லது 12% குறைந்தது. இந்த வரி, மொத்த வரி வசூலில் 8.7%க்குச் சமம். மொத்த முத்திரை தீர்வை வசூல் $6 பில்லியனாக இருந்தது.

மொத்த சொத்து வரி $5.1 பில்லியன். இது 7.4% அதிகரித்தது.

இதனிடையே, வரி செலுத்துவோரில் 9,019 பேரின் கணக்குகளை ஆணையம் தணிக்கை செய்து புலன்விசாரணை நடத்தியது.

வரியாகவும் தண்டனையாகவும் $499 மில்லியனுக்கும் மேற்பட்ட தொகையை அது மீட்டது.

இந்த அளவு, முந்தைய ஆண்டைவிட அதிகம் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆணையம் தன்னுடைய தணிக்கை முறைகளை மேம்படுத்தவும் தில்லுமுல்லுகளைக் கண்டுபிடிக்கவும் புதிய இயந்திர மனிதச் செயலிகளை உருவாக்கி இருக்கிறது என்று ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான இங் வாய் சூங், ஆணையத்தின் ஆகப் புதிய வருடாந்திர அறிக்கையில் தெரிவித்தார்.

சுய உதவிச் சேவைகள், புதிய இயந்திர மனிதச் செயலிகள் போன்றவற்றைப் பயன்படுத்த ஆணையம் முயற்சிகளை முடுக்கிவிட்டு உள்ளது.

இவற்றின் விளைவாக வரி விவரங்களைத் தாக்கல் செய்ய உதவி நாடுவோரின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

அனைத்துலக ஈடுபாட்டு முயற்சிகளையும் ஆணையம் முடுக்கிவிடும். நிதி அமைச்சுடன் சேர்ந்து செயல்பட்டு சிங்கப்பூரின் நிதி ஏற்பாட்டு முறைகளை ஆணையம் பலப்படுத்தும் என்றும் திரு இங் தெரிவித்து உள்ளார்.

சிங்கப்பூரர்கள் வேலை பெறுவதற்கு ஆதரவாகவும் அவர்களின் சம்பள உயர்வுக்கு உறுதுணையாகவும் ஆணையம் பல்வேறு செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்தி மொத்தம் $4.6 பில்லியன் மானியம் வழங்கி இருக்கிறது.

குறிப்புச் சொற்கள்