ஜகார்த்தா: அமெரிக்காவும் சீனாவும் பலதரப்பட்ட உலகப் பிரச்சினைகளைக் கையாளுவதில் தங்கள் தலைமைத்துவத்தைப் புலப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது.
அந்த இரண்டு வல்லரசுகளும் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து நடத்தி அனைத்து நிலைகளிலும் நம்பிக்கையைப் பலப்படுத்தி அதிக ஒத்துழைப்புக்குப் பாடுபட வேண்டும் என்று பிரதமர் லீ சியன் லூங் புதன்கிழமை தெரிவித்தார்.
ஆசியானுக்கும் சீனப் பிரதமர் லி கியாங்கிற்கும் இடையில் நடந்த உச்சநிலைக் கூட்டத்தில் பிரதமர் லீ உரையாற்றினார்.
அமெரிக்க-சீன உறவில் ஏற்படக்கூடிய பதற்றங்களை இந்த வட்டாரம் மிகவும் கவலையுடன் கண்காணித்து வருவதாகவும் திரு லீ குறிப்பிட்டார்.
அந்த இரு நாடுகளுக்கும் இடைப்பட்ட பதற்றம் எளிதாக முற்றி இந்த வட்டாரத்தின் அமைதியையும் செழிப்பையும் நிலைப்பாட்டையும் கீழறுத்துவிடக்கூடும் என்பதால் இந்த விவகாரத்தில் ஆசியான் நேரடியாக அக்கறை கொண்டிருக்கிறது என்று திரு லீ தெரிவித்தார்.
ஆசியானும் சீனாவும் கடந்த 30 ஆண்டுகளில் அணுக்க நட்புறவைப் பேணிப் பலப்படுத்தி வந்துள்ளதாகக் கூறிய பிரதமர், இரு தரப்புகளுக்கும் இடைப்பட்ட பரந்த உத்திபூர்வ பங்காளித்துவ உறவின் அடுத்த கட்டமாக, பரஸ்பர மரியாதை, நம்பிக்கையுடன் கூடிய இன்னும் பலமான ஆசியான்-சீன உறவைச் சாதிப்போம் என்றார்.
இணைப்பு, மின்னிலக்கப் பொருளியல் ஆகிய இரண்டு துறைகளில் இரு தரப்புகளும் மேலும் அணுக்கமாகப் பாடுபடலாம் என்றும் அவர் யோசனை கூறினார்.
அந்தக் கூட்டத்தில் பேசிய சீனப் பிரதமர், ஆசியானும் சீனாவும் அமைதிக்கான இடைவிடா முயற்சிகளைப் பகிர்ந்துகொள்வதாகத் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
‘‘மேம்பாடு கண்டு முன்னேற வேண்டும் என்று ஆசியானும் சீனாவும் வலுவாக விரும்புகின்றன. இதனைக் கருத்தில்கொண்டு வட்டார நிலைப்பாட்டைக் கட்டிக்காக்க அவை பலன்தரக்கூடிய செயல்களில் ஈடுபடுகின்றன,’’ என்று சீனப் பிரதமர் குறிப்பிட்டார்.
பத்து நாடுகளைக் கொண்ட ஆசியான் அமைப்பு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு பங்காளித் தரப்புகளை உள்ளடக்கி பல கூட்டங்களை நடத்துகிறது.
அமெரிக்கா சார்பில் அந்தக் கூட்டத்தில் அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் கலந்துகொள்கிறார்.
தென்சீனக் கடல் விவகாரம் பற்றி கருத்துரைத்த சிங்கப்பூர் பிரதமர், அனைத்துலக விதிகளுக்கு ஏற்ப நடத்தை நியதியை உருவாக்குவதற்கான முயற்சிகளை ஆசியானும் சீனாவும் முடுக்கிவிட வேண்டும் என்றும் அனைத்து தரப்புகளின் உரிமைகளையும் நலன்களையும் பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கூறினார்.
ஆசியான், சீனாவுக்கு இடைப்பட்ட ஒத்துழைப்பு இரண்டு தரப்புகளுக்குமே எப்படி உதவ முடியும், அதன்மூலம் நம்பிக்கை ஆழமாகி தென்சீனக் கடல் விவகாரம் போன்ற சவால்களுக்கு எப்படி தீர்வு காண முடியும் என்பதை விளக்கிய சிங்கப்பூர் பிரதமர், மின்னிலக்கம், பசுமைப் பொருளியல் போன்ற துறைகளை உள்ளடக்கும் வகையில் ஆசியான்-சீனா தாராள வர்த்தகத் துறைகள் ஏற்பாட்டை விரிவுபடுத்துவதன் தொடர்பில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை தொடங்கி இருப்பதைச் சுட்டிக்காட்டினார்.
ஆசியானும் சீனாவும் தங்களுடைய விமானப் போக்குவரத்து உடன்பாட்டை மேலும் தாராளமயப்படுத்தி இரு தரப்புகளின் மக்களுக்கு இடையில் மேலும் பரஸ்பர பயணங்களுக்கு ஊக்குவிக்கலாம் என்றும் அவர் யோசனை தெரிவித்தார்.
மின்னிலக்கப் பொருளியல் தொடர்பில் இரண்டு தரப்புகளும் ஒத்துழைத்து தங்குதடையில்லாத, கட்டிக்காக்கக்கூடிய எல்லை கடந்த வர்த்தகத் தொடர்புகளைச் சாதிக்கலாம் என்றும் சிங்கப்பூர் பிரதமர் குறிப்பிட்டார்.
அந்தக் கூட்டத்தில் பேசிய சீனப் பிரதமர், ஆசியானுக்கும் சீனாவுக்கும் இடையில் நிலவும் சகோதரத்துவ உறவுகளையும் மேம்பட்ட வர்த்தக உறவுகளையும் குறிப்பிட்டுப் பேசினார்.
‘‘அனைத்துலக சூழ்நிலை எப்படி பரிணமித்தாலும் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் சீனாவும் ஆசியானும் அணுக்க பரிவர்த்தனைகளையும் தகவல் தொடர்புகளையும் நிலைநாட்டி வந்திருக்கின்றன.
‘‘ஒன்று மற்றொன்றின் மேம்பாட்டு வழிகளை அங்கீகரித்து மதித்து நடந்து வந்திருக்கின்றன.
‘‘ஒன்று மற்றொன்றின் பெரும் கவலைகளைத் தீர்த்துவைக்கவும் முயற்சிகளை மேற்கொண்டு இருக்கின்றன,’’ என்று சீனப் பிரதமர் குறிப்பிட்டார்.
கொரிய தீபகற்ப சூழ்நிலை பற்றி கருத்துரைத்த சிங்கப்பூர் பிரதமர், அந்தச் சூழ்நிலை கவலை தருவதாக இருக்கிறது என்றார்.
கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஏவுகணைகளை வடகொரியா பாய்ச்சி இருப்பதை சிங்கப்பூர் தொடர்ந்து இடைவிடாமல் வலுவாக கண்டித்து வருகிறது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
சிங்கப்பூர் அனைத்துலக சமூகத்துடன் தொடர்ந்து பாடுபட்டு கொரிய தீபகற்பத்தில் அமைதியையும் நிலைப்பாட்டையும் மேம்படுத்தும் என்றும் சிங்கப்பூர் பிரதமர் உறுதி கூறினார்.
தென்கொரியா, ஜப்பானுடன் மின்னிலக்கப் பொருளியலிலும் இணையப் பாதுகாப்பிலும் ஆசியான் மேலும் அணுக்கமாகச் செயல்பட வேண்டும் என்று சிங்கப்பூர் பிரதமர் அழைப்பு விடுத்தார்.
ஆசியானும் ஜப்பானும் தொடர்ந்து செயல்பட்டு ஒளிவுமறைவு இல்லாத, எல்லா தரப்புகளையும் உள்ளடக்குகின்ற, கலந்து செயல்படக்கூடிய மின்னிலக்கப் பொருளியலைச் சாதிக்க வேண்டும் என்றும் பிரதமர் திரு லீ அறைகூவல் விடுத்தார்.

