சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி, ஜூன் மாத முன்னுரைப்புடன் ஒப்பிடுகையில் மேலும் பலவீனமடையும் என்று தனியார் துறை பொருளியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
வர்த்தகம் மேலும் சரிவடையும் என எதிர்பார்க்கப்படுவதும் அதற்கு ஒரு காரணம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும், இரண்டாம் காலாண்டின் 0.5 விழுக்காட்டு வளர்ச்சியுடன் ஒப்புநோக்க, ஒரு விழுக்காட்டு முன்னுரைப்பு ஓரளவு சாத்தியமானதாகத் தெரிகிறது.
சிங்கப்பூர் நாணய ஆணையம் புதன்கிழமை வெளியிட்ட காலாண்டு கணக்கெடுப்பின்படி, கணிப்பாளர்களின் அண்மைய எதிர்பார்ப்பு ஆண்டு அடிப்படையிலான பொருளியல் வளர்ச்சி, ஜூன் மாத 1.4 விழுக்காட்டு எனும் கணிப்பைவிட குறைவாக உள்ளது.
ஆண்டு அடிப்படையில் 2024ஆம் ஆண்டிற்கான பொருளியல் முன்னுரைப்பு 2.5% ஆக ஜூன், செப்டம்பர் இரண்டிலும் மாறாமல் இருந்தது.
முக்கிய குறிகாட்டிகளின்படி, எண்ணெய் சாராத உள்நாட்டு ஏற்றுமதிகள் எதிர்பார்க்கப்பட்ட சரிவைக் கண்டுள்ளன. தற்போதைய முன்னுரைப்பில் 10.5 விழுக்காடு வரை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஜூன் மாத 5.5 விழுக்காடு சரிவு எனும் கணிப்பைவிடக் குறைவு.
சிங்கப்பூர் பொருளியலில் ஐந்தில் ஒரு பங்கிற்கு மேல் பங்கு வகிக்கும் தயாரிப்புத் துறையின் தரவுகளிலும் இது பிரதிபலிக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
ஜூன் மாதத்தில் 1.3 விழுக்காடு சரிவு எனும் கணிப்பிலிருந்து ஆண்டு அடிப்படையில் 4.4 விழுக்காடு சரிவை பதிவு செய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதத்தில் வளர்ச்சி பதிவாகவில்லை.
இதேபோல், நிதி, காப்பீடு ஆகிய துறைகளுக்கான ஜூன் மாத கணிப்பு 1.3% கணிப்பிலிருந்து குறைந்து ஆண்டு அடிப்படையில் 0.7 விழுக்காடாக மிகச் சிறிய வளர்ச்சியைப் பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டைப் பொறுத்தவரை, மொத்த மற்றும் சில்லறை வணிகம் ஆண்டு அடிப்படையில் 0.8 விழுக்காட்டில் இருந்து 1.3% உயர்ந்தது. இரண்டாவது காலாண்டில் 10 விழுக்காட்டை எட்டிய தங்குமிடம், உணவு சேவைகள் துறை, குறிப்பிடத்தக்க வகையில் 8.8 விழுக்காடாகக் குறைந்தது.
தனியார் பயன்பாடு 3.5 விழுக்காட்டில் இருந்து ஆண்டுக்கு 3.3 விழுக்காடாகக் குறைந்துள்ளது.
பணவீக்கம் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பயனீட்டாளர் விலைக் குறியீடு ஆண்டு அடிப்படையில் 5 விழுக்காட்டிலிருந்து 4.7 விழுக்காடாகக் குறைந்துள்ளது. எனினும், மூலாதாரப் பணவீக்கம் 4.1 விழுக்காடாக மாற்றமின்றி உள்ளது.
இதற்கிடையில், முன்னுரைப்பில் ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் 2.1 விழுக்காட்டிலிருந்து 2 விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் வங்கிக் கடன்கள் எதிர்மறையான 2.6 விழுக்காடு சரிவைக் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது முந்தைய கணிப்பில் 0.5 விழுக்காடு அதிகரிப்பாக இருந்தது.
உள்ளூர் பொருளியலைக் கண்காணிக்கும் மொத்தம் 22 பொருளியல் வல்லுநர்களும் ஆய்வாளர்களும் ஆகஸ்ட் 15 அன்று அனுப்பப்பட்ட ஆணையத்தின் ஆய்வுக்குப் பதிலளித்தனர்.