பாரபட்சமற்ற நிலை: அமைச்சர் விளக்கம்

பாரபட்சமற்ற நிலை: அமைச்சர் விளக்கம்

3 mins read
22397d5f-7d31-47cd-9d78-3cb71f25be6f
பாரபட்சம், இனவாதம், சமய பாரபட்சம் ஆகியவற்றை முற்றிலும் சகித்துக்கொள்ளாத வகையில் உள்துறை அமைச்சு நிர்வாக முறை செயல்படுவதாக திரு சண்முகம் கூறினார்.  - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பாரபட்சம், இனவாதம், சமய பாரபட்சம் ஆகியவற்றை முற்றிலும் சகித்துக்கொள்ளாத வகையில் உள்துறை அமைச்சு நிர்வாக முறை செயல்படுவதாக சட்ட, உள்துறை அமைச்சர் கா சண்முகம் தெரிவித்தார்.

அமைச்சர், ஆகஸ்ட் 21ஆம் தேதி பெரித்தா ஹரியான் வலையொளி நிகழ்ச்சிக்கு (#NoTapis) பேட்டி அளித்தார்.

சிங்கப்பூர் காவல்துறையில் வேலை பார்த்த யுவராஜா கோபால் என்பவர் 2023 ஜூலை பிற்பகுதியில் ஈசூனில் புளோக் ஒன்றின் அடிவாரத்தில் இறந்து கிடந்தார். வேலையிடத்தில் சட்டாம்பிள்ளைத்தனம், இன பாரபட்சம், குடும்ப பிரச்சினைகள் ஆகியவற்றுக்குத் தான் ஆளானது பற்றி சமூக ஊடகத்தில் அவர் முன்னதாகத் தெரிவித்து இருந்தார்.

அதைத் தொடர்ந்து தாங்களும் சட்டாம்பிள்ளைத்தனம், பாரபட்சத்தை அனுபவித்ததாக சிங்கப்பூர் காவல்துறையில் முன்பு பணியாற்றிய இதர சில அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் தொடர்பில் கேட்கப்பட்டதற்கு அமைச்சர் விளக்கம் அளித்தார்.

பாரபட்ச நடைமுறைகளுக்கு எதிராக நடப்பில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள், சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பான சூழலை எப்படி உருவாக்க முடியும் என்பதன் தொடர்பில் அமைச்சர் கருத்து கூறினார். இது தொடர்பான தனது அணுகுமுறையில் இரண்டு அம்சங்கள் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

ஒன்று நிர்வாக முறை என்று தெரிவித்த அவர், பாரபட்சம் என்பது நிர்வாக முறையின் ஒரு பகுதியாக இருக்கக்கூடாது என்றார். இதற்கான பொறுப்பு அமைச்சரில் இருந்து தொடங்கி அனைவருக்கும் இருக்கிறது என்றும் அமைச்சர் சண்முகம் குறிப்பிட்டார்.

பயிற்சியின் ஒரு பகுதியாக எல்லாருக்கும் இது போதிக்கப்படுகிறது. இனவாதியாகவோ, பாரபட்சம் காட்டுபவராகவோ யாரும் இருக்கக்கூடாது என்பது அனைவருக்கும் போதிக்கப்படுகிறது.

அடுத்ததாக மனித இயல்பு என்று ஒன்று இருக்கிறது. இனவாத போக்குடைய தனிப்பட்டவர்களும் இருக்கக்கூடும். அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

இவை ஒருபுறம் இருக்க, அனாமதேய ஆய்வுகளையும் காலக்கிரம முறைப்படி நடத்தி வருவதாக அமைச்சர் கூறினார். ஆண்டுக்கு இரண்டு முறை கண்ணோட்டமிடும் வகையில் ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. ஊழியர்களை ஈடுபடுத்தும் ஆய்வுகளும் மூத்த அதிகாரிகளை உள்ளடக்கி இளம் அதிகாரிகள் நடத்தும் ஆய்வுகளும் உள்ளடங்கும்.

2019 ஜனவரி முதல் ஐந்தாண்டு காலத்தில் பார்க்கையில் இப்போது வரை 310 புகார்கள் தெரிவிக்கப்பட்டு இருக்கின்றன. உள்துறைக் குழுவில் 29,000 அதிகாரிகள் இருக்கிறார்கள். கணக்கிட்டுப் பார்க்கையில் புகார்களின் அளவு 1.1% தான்.

அந்தப் புகார்களில் ஆறு புகார்கள் இன பாரபட்சம் தொடர்பானவை. அவை விசாரிக்கப்பட்டு மூன்று புகார்களின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டன. இதர மூன்று புகார்களுக்கு ஆதாரம் இல்லை.

நடத்தப்பட்ட ஆய்வுகள் மூலம் பெரிய விவகாரம் ஒன்றும் தெரியவரவில்லை. இருந்தாலும் இதுவே போதும் என்று இருந்துவிட முடியாது. பாரபட்சம் இடம்பெறவில்லை என்பதைத் தொடர்ந்து உறுதிப்படுத்தி வரவேண்டும் என்று அமைச்சர் கூறினார்.

ஆய்வுகளுக்கு அப்பாலும் புகார் செய்வதற்கான உரிமை இருக்க வேண்டும். புகார்கள் ரகசியமாக வைக்கப்பட வேண்டும். ஊழியர்கள் எந்தவொரு நிலை அதிகாரிகளிடத்திலும் புகார் செய்யலாம். முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கருதினால் உள்துறை அமைச்சின் மனிதவளப் பிரிவிடம் முறையிடலாம். அதுவும் போதவில்லை என்று கருதினால் பொதுச் சேவைத் தலைமையிடம் முறையிட முடியும்.

உள்துறை அமைச்சர் என்ற முறையில் சுதந்திரமான மறுபரிசீலனைக் குழுக்களை அமைத்து ஏதாவது தவறு நடந்திருக்கிறதா என்பதைக் கண்டறிய முடியும். ஆகையால், புகார்களைத் தெரிவிக்க, அவை தொடர்பான விசாரணை நடத்த பல வழிகள் இருக்கின்றன என்றார் அமைச்சர்.

குறிப்புச் சொற்கள்