லாரியில் பசு மாடு; இணையத்தில் பல்வேறு கருத்துகள்

லாரியில் பசு மாடு; இணையத்தில் பல்வேறு கருத்துகள்

2 mins read
eb33e28e-8f36-45f6-8677-b940429e29f0
தீவு விரைவுச் சாலையில் ஆகஸ்ட் 27ஆம் தேதி ஒரு லாரியில் கறுப்பு-வெள்ளை நிற பசு மாடு ஏற்றிச் செல்லப்பட்டதைக் காணொளி ஒன்று காட்டியது. படம்: யூடியூப் - படம்: யூடியூப்

சிங்கப்பூரில் விரைவுச்சாலை ஒன்றில் ஒரு லாரியில் பசு மாடு ஒன்று ஏற்றிச் செல்லப்பட்டதைக் காட்டும் ஒரு காணொளி பற்றி இணையத்தில் அப்படியும் இப்படியுமாக மக்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.

அப்படி லாரியில் பசு மாட்டை ஏற்றிச் செல்வதன் தொடர்பிலான நியதிகள், சட்ட நிலவரங்கள் பற்றி சிலர் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

எஸ்ஜி ரோடு விஜிலெண்டெ என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் அந்தக் காணொளி பதிவேற்றப்பட்டது.

தீவு விரைவுச்சாலையில் ஆகஸ்ட் 27ஆம் தேதி ஒரு லாரியில் பின்பக்கம் நின்றபடி கறுப்பு-வெள்ளை நிற பசு மாடு கொண்டு செல்லப்பட்டதை அந்தக் காணொளி காட்டியது. லாரியின் பின்பக்கம் மூடப்படவில்லை.

இது பற்றி இணையத்தில் கருத்து தெரிவித்த சிலர் வியப்படைந்தனர். மற்றவர்கள் பசு மாட்டுக்கு ஏதாவது ஆபத்து நிகழ்ந்துவிடும் என்று கவலை தெரிவித்தனர்.

இப்படி பசு மாட்டை லாரியில் கொண்டு செல்வது சட்டபூர்வமான ஒன்றுதானா என்றும் சிலர் கேள்வி எழுப்பினர்.

பசு மாட்டை இப்படி கொண்டு செல்வது சரிதானா என்றும் சிலர் கேட்டனர்.

சிங்கப்பூரில் விலங்குகளை வாகனத்தில் ஏற்றிச் செல்வதற்கு விதிமுறை ஏதாவது உண்டா என்று மற்றொருவர் வினவினார்.

காணொளியில் தெரிந்த பசு, லிம் சூ காங்கில் செயல்படும் விக்னேஷ் பால் பண்ணைக்குச் சொந்தமானது என்று அந்தப் பண்ணையின் செயலாளர் கூறினார்.

அவர் தன் பெயரை விக்னேஷ் என்று மட்டும் தெரிவித்துக்கொண்டார்.

வழிபாட்டிற்காக ஒரு கோயிலுக்கு பசு மாடு கொண்டு செல்லப்பட்டதாக திரு விக்னேஷ் கூறினார் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.

அந்தப் பண்ணை, 1900களின் பிற்பகுதியில் இருந்து பல நிகழ்ச்சிகளுக்கும் பசுக்களை அனுப்பி வருகிறது. அவற்றை வாகனங்களில் ஏற்றிச் சென்று வருகிறது.

இதில் அந்தப் பண்ணை உரிமையாளருக்கு 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் உண்டு என்றார் திரு விக்னேஷ்.

பசு மாடு லாரியில் பாதுகாப்பான முறையில் பத்திரமாகக் கட்டி கொண்டு செல்லப்படுகிறது. ஆகையால், பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை. பசு மாட்டை ஏற்றிச் செல்லும் வாகன ஓட்டுநர்களும் பசுமாட்டை கையாளுவோரும் பழுத்த அனுபவசாலிகள் என்றார் அவர்.

இதனிடையே, இது பற்றி கருத்து கூறிய பழுத்த அனுபவமுள்ள வழக்கறிஞரான அமோலாட் சிங், சிங்கப்பூரில் விலங்குகளை வாகனங்களை ஏற்றிச் செல்வதன் தொடர்பான சட்டம் இல்லை என்றார்.

உயிரோடு உள்ள விலங்குகளை வாகனங்களில் கொண்டு செல்லும் பண்ணை உரிமையாளர்கள் எப்போதுமே விலங்குகளை முறையாகக் கட்டுப்படுத்திக் கொண்டு செல்ல வேண்டும் என்று சிங்கப்பூர் உணவு முகவை அமைப்பின் பேச்சாளர் கூறினார்.

காணொளியில் காணப்படுவதைப் போல பசுமாட்டை லாரியில் ஏற்றிச் செல்வது அந்த விலங்கிற்கும் வாகன ஓட்டுநருக்கும் சாலைகளைப் பயன்படுத்தும் மற்றவர்களுக்கும் பாதுகாப்பு அற்றது என்று சிங்கப்பூர் சாலைப் பாதுகாப்பு மன்றத் தலைவர் பெர்னார்ட் டே கூறினார்.

குறிப்புச் சொற்கள்