வீடமைப்பு வளர்ச்சிக் கழக மறுவிற்பனை வீட்டு விலை, ஆகஸ்டில் 0.6% கூடியது. அதேவேளையில், குறைந்தபட்சம் $1 மில்லியன் விலை கொடுத்து 54 வீடுகள் வாங்கிக்கொள்ளப்பட்டன.
வீவக மறுவிற்பனை வீட்டு விலை ஜூலையில் 0.3% தான் கூடியது. அதைவிட கொஞ்சம் அதிகமாக ஆகஸ்டில் விலை அதிகரித்தது.
வீவக மறுவிற்பன விலை இத்துடன் தொடர்ந்து நான்காவது மாதமாக 1%க்கும் குறைவாக அதிகரித்து உள்ளது. 99.co என்ற நிலச்சொத்து இணையக் களஞ்சியம், எஸ்ஆர்எக்ஸ் நிறுவனம் ஆகியவற்றின் தகவல்கள் மூலம் இவை தெரியவருகின்றன.
வீவக மறுவிற்பனை விலை உயர்வுக்குப் பெரிய வீடுகளே காரணம். ஐந்தறை வீட்டு விலை 1.5% கூடியது. எக்ஸ்கியூட்டிவ் வீட்டு விலை 1.6% அதிகரித்தது என்று ஆரஞ்ச்& டை நிறுவனத்தின் ஆய்வு, பகுப்பாய்வுத் துறையின் மூத்த துணைத் தலைவர் கிறிஸ்டின் சன் கூறினார்.
கடந்த 2022, 2021ஆம் ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் விலை அதிகரிப்பு மெதுவடைந்து உள்ளதாக அவர் தெரிவித்தார்.
குறைந்தபட்சம் $1 மில்லியன் விலைக்குக் கைமாறிய வீவக மறுவிற்பனை வீடுகளின் எண்ணிக்கை ஆகஸ்டில் சாதனை அளவாக இருந்தது. அது 2022 செப்டம்பரின் சாதனை அளவை (45) விஞ்சியது.
இந்த அளவுக்கு அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட வீடுகளில் பெரும்பாலானவை புக்கிட் மேரா, காலாங்-வாம்போ, அங் மோ கியோ, மத்திய பகுதி போன்ற முதிர்ச்சி அடைந்த பேட்டைகளில் உள்ளவை.
உட்லண்ட்ஸ், ஹவ்காங் ஆகிய இரண்டு முதிர்ச்சி அடையாத பேட்டைகளில் தலா இரண்டு வீடுகள் குறைந்தபட்சம் $1 மில்லியன் விலைக்கு விற்கப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
அதிக விலைக்குக் கைமாறிய 54 வீடுகளில் 16 வீடுகள் நாலறை வீடுகள். 21 வீடுகள் ஐந்தறை, 17 வீடுகள் எக்ஸ்சிகியூட்டிவ் வீடுகள் ஆகும்.
தி பினக்கல்@ டக்ஸ்டனில் 28வது மாடிக்கும் 30வது மாடிக்கும் இடையில் உள்ள 107 சதுர மீட்டர் பரப்புள்ள ஐந்தறை வீடுதான் ஆக அதிக விலைக்குக் கைமாறிய வீவக மறுவிற்பனை வீடு.
அது $1.48 மில்லியன் விலைக்கு விற்கப்பட்டது. ஆகஸ்டில் வேறு ஒரு சாதனையும் இடம்பெற்றது. சதுர அடி விலை சாதனை அளவுக்கு அதிகமாக இருந்தது.
தி பினக்கல்@ டக்ஸ்டனில் 49வது மாடிக்கும் 51வது மாடிக்கும் இடையில் உள்ள 94 சதுர மீட்டர் பரப்புள்ள நாலறை வீடு $1.41 மில்லியன் விலைக்கு வாங்கப்பட்டது. கணக்கிட்டுப் பார்க்கையில் அது சதுர அடி $1,394 விலைக்குக் கைமாறியது.
இன்றைய தேதியில் இதுவரை, வீவக மறுவிற்பனை வீடு எதுவும் சதுர அடி இந்த விலைக்கு விற்கப்பட்டது இல்லை என்று பிராப்நெக்ஸ் ரியால்டி நிறுவனத்தின் ஆய்வுத் துறைத் தலைவர் வோங் சியூ யிங் கூறினார்.
$1மில்லியன் வீடுகளில் 16 வீடுகள் நாலறை வீடுகள். இந்த வகை வீடுகளின் விற்பனையும் புதிய உச்சத்தைத் தொட்டு இருக்கிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.