சிங்கப்பூரில் புதிய ஆய்வுப் பயிலகம் தொடங்கப்பட்டு இருக்கிறது.
கரையோரக் கடல் பகுதிகளைப் பாதுகாக்கவும் வெள்ள நிலவரங்களைத் திறம்பட சமாளிக்கவும் தேவைப்படும் ஆற்றல் நிறைந்த உள்ளூர் வல்லுநர்கள் வளத்தை அந்தப் பயிலகம் பலப்படுத்தும்.
பருவநிலை காரணமாக கடல் மட்டம் உயர்வதால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளைச் சிங்கப்பூர் சமாளிக்க அது உதவும்.
கடல் மட்டம் 2100 ஆம் ஆண்டு வாக்கில் சராசரியாக 1மீட்டர் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூரின் நிலப் பகுதியில் ஏறக்குறைய 30 விழுக்காடு, சராசரி கடல் மட்டத்தில் இருந்து ஐந்து மீட்டர் உயரம்கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
‘சிங்கப்பூர் கடலோரப் பாதுகாப்பு, வெள்ள மீள்திறன் பயிலகம்’ (சிஎஃப்ஐ) என்ற அந்தப் புதிய பயிலகத்தைப் பொதுப் பயனீட்டுக் கழகமும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகமும் தொடங்கி உள்ளன.
பல்வேறு உள்ளூர் பல்கலைக்கழகங்கள், ஆய்வு நிலையங்கள், இந்தத் தொழில்துறையினரின் ஆற்றலை ஒருங்கே கொணர்ந்து கரையோர கடற்பகுதிகளைப் பாதுகாப்பதற்கான புத்தாக்கத் தீர்வுகளைப் புதிய பயிலகம் கண்டுபிடிக்கும்.
புதிய பயிலகத்தின் தொடக்க நிகழ்ச்சி சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் நடந்தது. அதையொட்டி கலந்துரையாடல் இடம்பெற்றது.
தொடர்புடைய செய்திகள்
நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ அதில் கலந்துகொண்டார்.
பருவநிலை மாற்றங்கள் காரணமாக சிங்கப்பூரில் ஏற்படக்கூடிய தாக்கங்களை அளவிடுவதில் நிச்சயமில்லாத நிலவரங்கள் ஏராளம் என்று அமைச்சர் கூறினார்.
தொடக்க நிகழ்ச்சியில் பேசிய பொதுப் பயனீட்டுக் கழகத்தின் தலைமை நிர்வாகி கோ ஸி ஹாவ், கழகம் $125 மில்லியன் செலவில் கடலோரப் பாதுகாப்பு, உணவு நிர்வாக ஆய்வுச் செயல்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தி வருவதாகவும் அதன் இதயம் போன்ற மையமாக புதிய பயிலகம் இருப்பதாகவும் தெரிவித்தார்.
கரையோரக் கடற்பகுதிகளைப் பாதுகாப்பதில் ஓர் ஒட்டுமொத்த ஆய்வு ஏற்பாட்டு முறை வலுவடைந்து வளர்ச்சி அடைய உதவும் மையமாக புதிய பயிலகம் செயல்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
புதிய பயிலகம், நான்கு துறைகளில் ஒன்பது ஆய்வுத் திட்டங்கள் தொடர்பில் பணிகளைத் தொடங்கி இருக்கிறது.
கரையோர கடற்பகுதி அறிவியல் ஆய்வு; கடலோரச் சூழல் கண்காணிப்பு, கணிப்பு, மின்னிலக்கமயம்; புத்தாக்கப் பொறியியல் தீர்வுகள்; ஒருங்கிணைந்த இயற்கை அடிப்படையிலான தீர்வுகள் ஆகியவை அந்த நான்கு துறைகள்.
இதன் தொடர்பில் கருத்து கூறிய பொதுப் பயனீட்டுக் கழகத்தின் கடலோரப் பாதுகாப்புத்துறை இயக்குநர் திருவாட்டி ஹேசல் கூ, சிங்கப்பூரின் கடலோரப் பகுதிகள் ஒவ்வொன்றிலும் வெவ்வேறான பாதுகாப்புத் தீர்வுகள் கட்டம்கட்டமாக அமலாகும் என்றார்.
சிட்டி ஈஸ்ட் கோஸ்ட் கடலோரப் பகுதியில் தொடங்கி, சாங்கி விமானப் போக்குவரத்து மையம், ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் உள்ள பொழுதுபோக்கு இடம், பெரிய தென் நீர்முகப்புப் பகுதி ஆகியவை உள்ளிட்ட இடங்களில் தீர்வுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.