ஓசிபிசி வங்கிச் செயலியின் புதுப்பிப்பால் குறைந்தது $2மி. சேமிப்பு பாதுகாக்கப்பட்டது

ஓசிபிசி வங்கிச் செயலியின் புதுப்பிப்பால் குறைந்தது $2மி. சேமிப்பு பாதுகாக்கப்பட்டது

2 mins read
7916ced6-b562-43d1-8a44-a20cb4bebfe4
நச்சுநிரலுடன் கைப்பேசிகளின் கட்டுப்பாட்டை வசப்படுத்திக்கொள்ளும் மோசடிக்காரர்களிடமிருந்து பாதுகாப்பதற்காகப் புதிய பாதுகாப்பு அம்சங்களுடனான இயக்கத்தை ஓசிபிசி வங்கி அதன் செயலியில் சேர்த்துள்ளது. - படம்: ஓசிபிசி

நச்சுநிரல் பயன்படுத்தி ஓசிபிசி வங்கியின் 30க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் கைப்பேசிகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த மோசடிக்காரர்கள், குறைந்தது $2 மில்லியன் சேமிப்பைத் திருடவிடாமல் வங்கி தடுத்துவிட்டது.

சந்தேகத்திற்குரிய செயலி இருக்கும்போது வங்கியின் இணைய வங்கிச் சேவைகளைப் பயன்படுத்தவிடாமல் தடுக்கும் புதிய பாதுகாப்பு இயக்கத்தை வெளியிட்டு வாடிக்கையாளர்களின் சேமிப்பை வங்கி பாதுகாத்தது.

ஓசிபிசி வங்கிச் செயலியின் புதிய பாதுகாப்பு இயக்கம் ஆகஸ்ட் 5ஆம் தேதி வெளிவந்ததைத் தொடர்ந்து, அதனைச் செயற்படுத்திய வாடிக்கையாளர்கள் எவரும் நச்சுநிரல் மோசடியில் பணத்தை இழந்ததாகப் புகார் செய்யவில்லை என வங்கி வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

புதிய பாதுகாப்பு இயக்கம், அதிகாரபூர்வமற்ற தளங்களிலிருந்து பதிவிறக்கமான செயலிகளைக் கண்டறிந்தவுடன் வங்கியின் செயலியைப் பயன்படுத்தவிடாமல் முடக்கிவிடும்.

நச்சுநிரலுடன் கைப்பேசிகளின் கட்டுப்பாட்டை வசப்படுத்திக்கொள்ளும் மோசடிக்காரர்களிடமிருந்து பாதுகாப்பதற்காகப் புதிய இயக்கத்தை வங்கி வெளியிட்டது.

அதிகாரபூர்வமற்ற செயலித் தளங்களிலிருந்து தாமாகப் பதிவிறக்கமாகும் செயலிகள் தங்களது ஆண்ட்ராய்ட் கைப்பேசிகளை அத்துமீறி ஊடுருவிவிட்டதாக 30க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வங்கியிடம் புகாரளித்தனர்.

மோசடிக்காரர்கள் கைப்பேசியின் கட்டுப்பாட்டை வசப்படுத்திய போதிலும், ஓசிபிசி செயலி வாயிலாகப் பணத்தை வேறொரு கணக்குக்கு மாற்ற இயலவில்லை என்று வங்கி தெரிவித்தது.

“இந்த வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்குகளில் ஏற்கனவே $2 மில்லியனுக்குமேல் பணமிருந்தாலும், மோசடிக்காரர்களிடம் இழக்கப்பட்டிருக்கக்கூடிய தொகை அதைவிட அதிகமாக இருந்திருக்கும். ஏனெனில், மோசடிக்காரர்கள் இதற்குமுன் நிலைவைப்புகளையும் யூனிட் டிரஸ்டுகளையும் முன்கூட்டியே மீட்டுள்ளனர் அல்லது கடன் அட்டையுடன் முன்பணமும் எடுத்துள்ளனர்.”

புதிய பாதுகாப்பு இயக்கத்தின் காரணமாக, அதிகாரபூர்வமற்ற தளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்த மற்ற செயலிகளைப் பயன்படுத்த இயலவில்லை என்று சிலர் குறை கூறினர்.

ஆனால், இதுபோன்ற சிரமங்கள் புதிய கண்டுபிடிப்புகளின் இயல்பு என்று கூறி வங்கியின் பாதுகாப்பு இயக்கத்திற்கு ஆதரவளித்தது சிங்கப்பூர் நாணய ஆணையம்.

நச்சுநிரல் மோசடிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருக்கும் முதல் உள்ளூர் வங்கிகளில் ஓசிபிசியும் ஒன்று. மற்ற வங்கிகள் எந்த வகையான பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தப் போகிறார்கள் என்பது இன்னும் தெரியவில்லை.

குறிப்புச் சொற்கள்