பொருளியல் வளர்ச்சி மெதுவடைந்த போதிலும், சிங்கப்பூர் செல்வந்தர்களின் மொத்த சொத்து மதிப்பு 8% அதிகரித்து $241.6 பில்லியனை ($177 பில்லியன் அமெரிக்க டாலர்) எட்டியுள்ளது. சென்ற ஆண்டின் மதிப்பு $164 பில்லியன் டாலர்.
ஆனால், 2021ல் நிலவிய $208 பில்லியன் டாலர் நிகர சொத்து மதிப்பை மீண்டும் அவர்கள் இன்னமும் எட்டவில்லை என்று ஃபோர்ப்ஸ் வெளியிட்ட சிங்கப்பூரின் ஆகப்பெரிய 50 செல்வந்தர்களின் பட்டியல் காட்டுகிறது.
வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அந்தப் பட்டியலின் உச்சத்தில் திரு எட்வார்டோ செவரின் புதிதாக இடம்பிடித்திருந்தார்.
மெட்டா நிறுவனத்தின் இணை நிறுவனரான இவரது நிகர சொத்து மதிப்பு 16 பில்லியன் டாலர். சென்ற ஆண்டின் பட்டியலில் அவர் நான்காம் இடத்தில் இருந்தார். அதன்பின்னர் மெட்டா பங்கு மதிப்பு கிட்டத்தட்ட 70 விழுக்காடு அதிகரித்ததால், இவரது சொத்து மதிப்பு 6.4 பில்லியன் டாலர் கூடியது.
பட்டியலின் இரண்டாம் இடத்தை ஃபார் ஈஸ்ட் ஆர்கனைசேஷன் நிறுவனத்தின் ராபர்ட் இங், பிலிப் இங் இருவரும் தக்கவைத்துக் கொண்டனர். இவர்களது சொத்து மதிப்பு சென்ற ஆண்டின் 15.2 பில்லியன் டாலரிலிருந்து சற்று குறைந்து $14.8 பில்லியன் டாலரானது.
பட்டியலின் முதலிடத்தை ஈராண்டுகளாகத் தக்க வைத்திருந்த ஷென்ஜென் மைண்ட்ரே பயோ-மெடிக்கல் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தலைவர் லீ சீடிங், $14 பில்லியன் டாலர் சொத்துகளுடன் மூன்றாம் நிலையில் இருக்கிறார்.
ஜப்பானின் நிப்பான் பெயின்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் திரு கோ செங் லியாங் நான்காம் இடத்திலும், ஹொங் லியோங் குழுமத்தின் நிர்வாகத் தலைவர் குவெக் லெங் பெங் ஐந்தாம் இடத்திலும் வந்தனர்.

