உலகின் ஆக நீளமான ஆழ்கடல் கம்பிவடங்களின்மூலம் சிங்கப்பூருக்கு சூரிய மின்சக்தி ஏற்றுமதி செய்யும் பல பில்லியன் வெள்ளித் திட்டம் ஈடேற மீண்டும் வாய்ப்பு எழுந்துள்ளது.
இந்த முயற்சியை முதன்முதலில் மேற்கொண்ட சன் கேபல் நிறுவனம் ஜனவரியில் நொடித்துப்போனதைத் தொடர்ந்து, அதனைத் தொடர்வதா இல்லையா என்பது பற்றி ஆஸ்திரேலியத் தொழிலதிபர் மைக் கேனன்-புரூக்ஸ் என்பவருக்கும் மற்றொரு தொழிலதிபர் திரு ஆண்ட்ரூ ஃபாரஸ்ட் என்பவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு எழுந்தது.
இந்நிலையில், சன் கேபல் நிறுவனத்தின் சொத்துகள் அனைத்தும் திரு கேனன்-புரூக்ஸ் நடத்தும் தனியார் முதலீட்டு நிறுவனத்திடம் விற்கப்பட்டுவிட்டது. இவரும் கூட்டு முதலீட்டாளரான குயின்புரூக் இன்ஃபிராஸ்ட்ரக்சர் பார்ட்னர்ஸ் நிறுவனமும் சன் கேபல் நிறுவனத்தின் உரிமையாளர்களாகப் பொறுப்பேற்றுள்ளனர்.
சன் கேபலை வாங்கிய திரு கேனன்-புரூக்சின் குரோக் வென்சர்ஸ் நிறுவனம், சிங்கப்பூரில் மின்சக்தி இறக்குமதி செய்வதற்கான நிபந்தனைக்குட்பட்ட உரிமம் பெற செப்டம்பர் மாதப் பிற்பகுதியில் எரிசக்தி சந்தை ஆணையத்திடம் விண்ணப்பம் செய்யவிருப்பதாக வியாழக்கிழமை தெரிவித்தது.
இந்தோனீசியக் கடல்வழி 4,200 கிலோமீட்டர் நீளத்திற்குக் கம்பிவடங்கள் அமைத்து சிங்கப்பூருக்கு மின்சக்தி ஏற்றுமதி செய்ய நிறுவனம் திட்டமிடுகிறது.
முதல் கட்டமாக, இந்நிறுவனம் ஆஸ்திரேலியாவில் 900 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும். சிங்கப்பூருக்கு 1.75 கிகாவாட்டுக்கும் அதிகமான மின்சாரம் ஏற்றுமதி செய்யப்படும்.
அதனைத் தொடர்ந்து, டார்வினில் உள்ள வாடிக்கையாளர்களுக்காக மேலும் 3 கிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய நிறுவனம் திட்டமிடுகிறது.

