ஆங் ஹியாப் பூன், 51, என்ற ஆடவருக்கு, குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதற்காக 2005ஆம் ஆண்டில் அபராதம் விதிக்கப்பட்டது. அந்த ஆடவர் 2020ல் மீண்டும் குற்றச் செயலில் ஈடுபட்டார்.
உயிர்பலி விபத்தை ஏற்படுத்திவிட்டார். இதற்காக அவருக்கு வியாழக்கிழமை மூன்றாண்டுகள் எட்டு மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
ஆங்கிற்கு வியாழக்கிழமை $16,000 அபராதமும் விதிக்கப்பட்டது. விடுதலை ஆன தேதியில் இருந்து 17 ஆண்டுகளுக்கு எந்த வகை வாகனங்களையும் ஓட்டக் கூடாது என்றும் அவருக்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
போதிய கவனமின்றி, அக்கறையின்றி வாகனம் ஓட்டியது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் பேரில் கடந்த ஜூன் மாதம் ஆங் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
அப்படி வாகனம் ஓட்டி திரு சையது கலீமுல்லா சையது இர்ஃபானுல்லா, 56, என்பவருக்கு மரணத்தை ஏற்படுத்திவிட்டதையும் அவர் ஒப்புக்கொண்டார்.
கடந்த 2020 அக்டோபர் 26ஆம் தேதி இரவு லிட்டில் இந்தியாவுக்கு அருகே உள்ள சையது ஆல்வி ரோட்டில் இருக்கும் ஓர் உணவகத்தில் மதுபானம் அருந்திவிட்டு தன் மனைவியுடன் பிஎம்டபிள்யூ காரை ஆங் ஓட்டிச் சென்றார்.
ஜாலான் புசார் ரோட்டில் சென்ற அவர், இடது புறமாக ஓபிர் ரோட்டில் திரும்பினார். அங்கு ஒரு துணைச்சாலை ஈஸ்ட் கோஸ்ட் பார்க்வே நோக்கிச் செல்கிறது.
அந்தத் துணைச்சாலையில் 50 கி.மீ. வேகத்தில்தான் செல்ல வேண்டும். ஆனால் அதைவிட வேகமாக வாகனத்தை ஓட்டிச் சென்றார் ஆங்.
தொடர்புடைய செய்திகள்
அப்போது வழியில் வேறு ஒரு வெள்ளை நிற பிஎம்டபிள்யூ கார் இயந்திரக் கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டு இருந்தது. அதை ஓட்டி வந்த திரு சையது காருக்குப் பின்புறத்தில் இருந்து நடந்து ஓட்டுநர் இருக்கை பக்கம் சென்றார். அப்போது ஆங் ஓட்டி வந்த கார் அவர் மீது மோதிவிட்டது.
சுயநினைவை இழந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட திரு சையது அங்கு மரணமடைந்துவிட்டார்.
ஆங், திரும்பத் திரும்ப குற்றச்செயல்களில் ஈடுபடுபவர் என்று கருதப்படுகிறது.
சிங்கப்பூரில் போக்குவரத்துச் சட்டம் 2019ல் கடுமையாக்கப்பட்டது. அதனைத் தெடர்ந்து இந்த வகை வழக்குகளில் இவரின் வழக்கே முதலாவது என்று நம்பப்படுகிறது.

