சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் இயூவின் 100வது பிறந்தநாள் கொண்டாட்டத்தையொட்டி அவருடைய வாழ்க்கை வரலாற்றையும் அவரின் உயரிய சாதனைகளையும் விளக்கும் கண்காட்சி ஒன்றை எக்ஸ்3டி என்ற படைப்பாற்றல் மெய்நிகர் தயாரிப்பு நிறுவனத்தை நிறுவிய திருவாட்டி கரண் சியா, கடந்த ஐந்து மாத காலமாக சுமார் 200 பன்னாட்டு திறனாளர்களை ஈடுபடுத்தி உருவாக்கி இருக்கிறார்.
அந்தக் கண்காட்சி இளம் சிங்கப்பூரர்களைக் கவர்ந்து ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது.
இந்த வகை முயற்சிகளில் இதுவே முதல் முயற்சி ஆகும். மெய்நிகர் தயாரிப்பு, இயந்திர மனிதத் தொழில்நுட்பம், சிற்பக் கலை, கட்டடக் கலை, படைப்பாற்றல் கலை, திரைப்படம், இசை ஆகியவற்றைக் கலந்து இந்த முயற்சி இடம்பெறுகிறது.
‘அந்த நேரம் இப்போது இல்லை’ என்ற தலைப்பிலான அந்தக் கண்காட்சி, சிங்கப்பூர் பெரும் முன்னேற்றங்களைச் சாதித்து இருந்தாலும் அந்தச் சாதனைகளே போதும் என்று இருந்து விடுவதற்கான நேரம் இதுவல்ல என்பதைப் புலப்படுத்துவதாக திருவாட்டி சியா தெரிவித்தார்.
கலை, தொழில்நுட்பம், கதை சொல்லும் திறமை ஆகியவற்றை எல்லாம் ஒருங்கிணைத்து கண்காட்சியை உருவாக்கி இருக்கிறோம்.
அது பல்வேறு தலைமுறைகளையும் கவரும். எல்லை கடந்து பலரையும் ஈர்க்கும் என்று நம்புகிறோம் என்றார் அவர்.
பாசிர் பாஞ்சாங்கில் 40,000 சதுர அடி பரப்பளவு உள்ள இடத்தில் கண்காட்சி இடம்பெறுகிறது. அதை முற்றிலும் பார்வையிட சுமார் 30 நிமிடங்கள் பிடிக்கும்.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் எஃப்1 கார் பந்தயம் செப்டம்பர் 15 முதல் 17 வரை சிங்கப்பூரில் நடக்கவிருக்கிறது. அந்த நேரத்தில் கண்காட்சியும் இடம்பெறுகிறது.
தொடர்புடைய செய்திகள்
உள்ளூர் மக்கள் மட்டுமன்றி வெளிநாட்டினருமாக சுமார் 30,000 பேர் 15 நாட்களில் அந்தக் கண்காட்சியைக் காண்பார்கள் என்று ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
அந்தக் கண்காட்சியை செப்டம்பர் 10 முதல் 24ஆம் தேதி வரை எண் 25 பாசிர் பாஞ்சாங் ரோடு முகவரியில் அமைந்துள்ள காட்சிக் கூடத்தில் பொதுமக்கள் அன்றாடம் முற்பகல் 11 மணி முதல் இரவு 8 மணி வரை இலவசமாகப் பார்வையிடலாம்.
வருகையாளர்கள் தங்கள் விருப்பமான நேரத்தைக் குறிப்பிட்டு www.nowisnotthetime.sg என்ற இணையத்தளத்தில் பதிய வேண்டும். பார்வையாளர்கள் குறைந்தபட்சம் 13 வயது நிரம்பியவர்களாக இருக்க வேண்டும்.