தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர்-கனடா தோழமை உறவுக்கு மறுஉறுதி

2 mins read
fa76826d-737f-4ee4-abcf-b38284b14403
பிரதமர் லீ சியன் லூங்கும் (வலது), கனடா பிரதமர் ஜஸ்டின் டுரூடோவும் இஸ்தானாவில் வெள்ளிக்கிழமை சந்தித்து பல அம்சங்கள் பற்றி பேச்சு நடத்தினர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் 

சிங்கப்பூரும் கனடாவும் தங்களுடைய இருதரப்பு உறவை வெள்ளிக்கிழமை மறுஉறுதிப்படுத்தின.

கனடா பிரதமர் ஜஸ்டின் டுரூடோ சிங்கப்பூருக்கு மேற்கொண்டிருந்த இரண்டு நாள் வருகையை வெள்ளிக்கிழமை முடித்துக்கொண்டார்.

அவர் முன்னதாக இஸ்தானாவில் பிரதமர் லீ சியன் லூங்கைச் சந்தித்தார்.

கனடா பிரதமர் வியாழன், வெள்ளி இரு நாள்கள் சிங்கப்பூருக்கு வருகை அளித்திருந்தார்.

வெளியுறவு அமைச்சு இந்த விவரங்களை அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

சிங்கப்பூருக்கும் கனடாவுக்கும் இடையில் நிலவும் மனமுவந்த தோழமை உறவை இரு தலைவர்கள் மறுஉறுதிப்படுத்தினர்.

பல தரப்பு வர்த்தக ஏற்பாடு, சட்ட விதிமுறையை நடைமுறைப்படுத்துவது, தாராள வர்த்தகத்தின் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பது போன்ற முக்கியமான அம்சங்களில் இரண்டு நாடுகளும் பொதுவான கருத்தைக் கொண்டிருக்கின்றன.

இதன்மூலம் இரு நாட்டு வலுவான உறவு அமைந்துள்ளது.

இரு தலைவர்களும் அனைத்துலக நிலவரங்கள் பற்றியும் விவாதித்தனர். சட்ட விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட பல தரப்பு ஒழுங்குமுறையை கட்டிக்காக்க சிங்கப்பூர், கனடா போன்ற நாடுகள் எப்படி சேர்ந்து செயல்பட முடியும் என்பது பற்றியும் அவர்கள் விவாதித்தனர்.

தங்கள் நாடுகளின் பொருளியல் வளர்ச்சியை மேம்படுத்துவது பற்றியும் அவர்கள் பேசினர்.

இரு தரப்பு ஒத்துழைப்பு குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்கத்தில் ஒத்துழைப்பை அதிகப்படுத்துவதற்கான வழிகள் பற்றியும் அவர்கள் கலந்து பேசினர்.

தற்காப்புத் துறை தொடர்பான பரிவர்த்தனைகள், ஒத்துழைப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பாதுகாப்பு உடன்பாடு தொடர்பில் சிங்கப்பூரும் கனடாவும் பேச்சுவார்த்தையைத் தொடங்கும் என்றும் வெளியுறவு அமைச்சின் அறிக்கை தெரிவிக்கிறது.

‘கனடா-சிங்கப்பூர் இளையர் வருகை உடன்பாடு’ ஒன்றைக் காணவும் இரு தரப்புகளும் விருப்பம் தெரிவித்தன. இந்த உடன்பாட்டின் மூலம் இளம் சிங்கப்பூரர்களும் கனடா நாட்டினரும் ஒருவர் மற்றொருவரின் நாட்டில் வேலை பார்ப்பதும் பயணம் செய்வதும் எளிதாகும்.

ஆசியான் அமைப்பில் கனடாவின் ஈடுபாடு அதிகரிப்பதை பிரதமர் திரு லீ வரவேற்றார்.

குறிப்புச் சொற்கள்