சிங்கப்பூரின் ஆக நீண்டகால நிதி அமைச்சர் ரிச்சர்ட் ஹு காலமானார்

சிங்கப்பூரின் ஆக நீண்டகால நிதி அமைச்சர் ரிச்சர்ட் ஹு காலமானார்

3 mins read
09584074-8eb6-42ff-bf93-c8cc4835190e
2001 அக்டோபர் 10ஆம் தேதி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அப்போதைய நிதி அமைச்சர் ரிச்சர்ட் ஹு. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

சிங்கப்பூரின் நிதி அமைச்சராக ஆக நீண்டகாலம் பதவியிலிருந்த முன்னாள் அமைச்சர் ரிச்சர்ட் ஹு சூ தாவ், வெள்ளிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 96.

டாக்டர் ஹுவின் மறைவு குறித்து ஆழ்ந்த வருத்தமடைவதாகப் பிரதமர் லீ சியன் லூங் கூறியுள்ளார்.

தாங்கள் இருவரும் பல ஆண்டுகால நண்பர்கள் என்று தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்ட திரு லீ, இருவரும் 1984ஆம் ஆண்டு ஒரே நேரத்தில் அரசியலுக்குள் காலடி எடுத்துவைத்ததாகக் கூறினார்.

வர்த்தக, தொழில் அமைச்சிலும் நிதியமைச்சிலும் இருவரும் அணுக்கமாகப் பணியாற்றியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

1984ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கிரேத்தா ஆயர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக டாக்டர் ஹுவும் டெக் கீ தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகத் திரு லீயும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அதையடுத்து, டாக்டர் ஹு, வர்த்தக, தொழில் அமைச்சராக நியமிக்கப்பட்டார். திரு லீ அவ்வமைச்சிற்கும் தற்காப்பு அமைச்சிற்கும் துணையமைச்சராக நியமிக்கப்பட்டார்.

நிதித்துறையிலும் டாக்டர் ஹுவின் பங்களிப்பு மிக முக்கியமானது. அவரது தலைமைத்துவத்தின்கீழ் சிங்கப்பூர் நாணய ஆணையம் நிதித் துறையில் கடுமையான கண்காணிப்பு , விதிமுறைகளையும் வலுவான நாணயக் கொள்கையையும் வகுத்தது என்று திரு லீ தம் பதிவில் குறிப்பிட்டார்.

டாக்டர் ஹுவின் மேற்பார்வையில்தான் 1994ஆம் ஆண்டு பொருள், சேவை வரி அறிமுகம் ஆனது. குடும்பங்களும் வர்த்தகங்களும் அதைச் சமாளிக்க உதவும் விரிவான ஆதரவுத் திட்டங்களையும் அவர் அறிமுகப்படுத்தியதாக திரு லீ கூறினார்.

சிங்கப்பூரின் 16 வரவுசெலவுத் திட்டங்களை டாக்டர் ஹு நாடாளுமன்றத்தில் வெளியிட்டதைச் சுட்டிய பிரதமர், அவரது வாழ்நாள் பங்களிப்பிற்காகவும் நாட்டிற்கு அவர் ஆற்றிய சேவைக்காகவும் சிங்கப்பூரர்கள் அவரை என்றும் நினைவுகூர்வர் என்று கூறினார்.

இதனிடையே, டாக்டர் ஹுவின் மறைவிற்கு முன்னாள் பிரதமர் கோ சோக் டோங் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரின் இரண்டாம் தலைமுறை (2ஜி) தலைமைத்துவக் குழுவில் டாக்டர் ஹு முக்கிய உறுப்பினராகத் திகழ்ந்ததாகத் திரு கோ தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

“மக்கள் செயல் கட்சியில் சேர்ந்து, இரண்டாம் தலைமுறைக் குழுவிற்கு உதவ இணங்கியதற்காக டாக்டர் ஹுவிற்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். அவரை இணங்கச் செய்வதற்கு ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று முறை அவரைச் சந்தித்துப் பேசினேன்,” என்று திரு கோ நினைவுகூர்ந்தார்.

முன்னதாக, டாக்டர் ஹு காலமான செய்தியை துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் வெள்ளிக்கிழமை இரவு வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.

சிங்கப்பூரின் ஆக நீண்டகால நிதி அமைச்சராக டாக்டர் ஹு பதவி வகித்ததாக திரு வோங் குறிப்பிட்டார். 1985 முதல் 2001 வரை டாக்டர் ஹு அப்பதவியில் இருந்தார்.

சிங்கப்பூர் நாணய ஆணையமும் அரசாங்க முதலீட்டு நிறுவனமும் (ஜிஐசி) அமைக்கப்பட்டபோது அவற்றின் இயக்குநர் சபைகளில் டாக்டர் ஹு சேவையாற்றியதை திரு வோங் சுட்டினார். அவ்விரு அமைப்புகளுக்கும் டாக்டர் ஹு உன்னத சேவையாற்றினார்.

1999ல் நிதி அமைச்சில் தாம் சேர்ந்த பிறகு, அப்போதைய நிதி அமைச்சராக இருந்த டாக்டர் ஹுவுடன் வரவுசெலவுத் திட்டம் குறித்து தாம் பணியாற்றியதை திரு வோங் நினைவுகூர்ந்தார்.

இந்நிலையில், நிதி அமைச்சு வெள்ளிக்கிழமை இரவு ஃபேஸ்புக்கில் வெளியிட்ட இரங்கல் பதிவில், “டாக்டர் ஹுவின் விலைமதிப்பற்ற பல பங்களிப்புகளுக்காக நாங்கள் அவரை நினைவில் வைத்திருப்போம்,” என்று கூறியது.

நிதி அமைச்சர் பதவியில் ஆக நீண்டகாலம் இருந்தது ஒருபுறமிருக்க, அமைச்சரவையில் சுகாதார அமைச்சர், தேசிய வளர்ச்சி அமைச்சர் என டாக்டர் ஹு மற்ற முக்கியப் பதவிகளையும் வகித்திருந்தார்.

2001ல் அரசியலில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர், அரசாங்க முதலீட்டு நிறுவனத்தின் இயக்குநர் சபையில் 2009 வரை அவர் தொடர்ந்து சேவையாற்றினார். பின்னர் 2012 வரை ஆலோசகராக அவர் இருந்தார்.

டாக்டர் ஹுவுக்கான தனியார் இறுதிச்சடங்கு மண்டாய் தகனச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படும் என்று சாவ்பாவ் சீன நாளிதழ் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்