சிங்கப்பூர் சமூகத்தில் மனநலப் பயிலரங்குகள் முன்னோடித் திட்டமாக இடம்பெறவிருக்கின்றன.
தொடக்கமாக பொங்கோல் வெஸ்ட்டிலும் புக்கிட் பாத்தோக் ஈஸ்ட்டிலும் அவை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மனநலப் பிரச்சினைகளுடன் கூடிய மக்களுக்குச் சமூக ஆதரவைத் திரட்டவும் உதவி நாடும்படி அவர்களுக்கு ஊக்கமூட்டவும் ஆண்டுதோறும் ‘முத்திரைக்கு அப்பாலும்’ (‘Beyond The Label’) என்ற விழா நடந்து வருகிறது.
‘பிடிஎல் கலெக்டிவ்’ என்ற குழுமம் ஏற்பாடு செய்யும் இவ்விழா, வெள்ளிக்கிழமை செப்டம்பர் 8 ஜூவல் சாங்கி விமான நிலையத்தில் நடந்தது.
தேசிய சமூகச் சேவை மன்றமும் ‘டச் கம்யூனிட்டி சர்வீசஸ்’ (‘TOUCH Community Services’) என்ற அமைப்பும் அந்த விழாவுக்குத் தலைமை ஏற்கின்றன.
‘மனநலம் நம் அனைவரோடும் தொடங்குகிறது’ என்ற கருப்பொருளில் விழா, மனநலப் பயிலரங்குகளையும் பள்ளிகளின் சமூகப் படைப்புகளையும் வழங்கியது. மனநல அமைப்புகளும் தங்கள் சேவைகளை மக்களுக்கு விவரித்தன.
பிடிஎல் கலெக்டிவ் குழுமம் மனநலப் புரிந்துணர்வை மேம்படுத்துவதில் சென்ற ஆண்டு ஒருமித்த கவனம் செலுத்தியது. அதோடு மட்டுமன்றி, இளம் மக்களுக்கு ஆதரவு அளிக்கவும் செய்தது.
இப்போது அது அக்கம்பக்கங்களில் உரை நிகழ்ச்சிகளுக்கும் பயிலரங்குகளுக்கும் ஏற்பாடு செய்கிறது.
தொடர்புடைய செய்திகள்
இவற்றின் மூலம் மனநலப் பிரச்சினை உள்ளவர்களை அடையாளம் காண்பதற்குத் தேவைப்படக்கூடிய அடிப்படை அறிவையும் தேர்ச்சிகளையும் மேலும் பலர் பெற முடியும் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா கூறினார். இவர் விழாவில் உரை நிகழ்த்தினார்.
பொங்கோல் வெஸ்ட், புக்கிட் பாத்தோக் ஈஸ்ட் ஆகிய வட்டாரங்களில் முன்னோடித் திட்டமாக இவை இடம்பெறும் என்றும் திரு சுவா குறிப்பிட்டார்.
அதிபர் ஹலிமா யாக்கோப்பும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
இந்த முன்னோடித் திட்டத்தின்படி அக்கம்பக்கத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் பயிற்சி பெற்று மனநல ஆதரவை வழங்கும் வகையில் நம்பிக்கையைப் பெறுவார்கள்.
அக்கம்பக்கத்தில் உள்ளவர்களின் நலனை கவனிப்பார்கள் என்று கூறிய திரு சுவா, நகர் ஒவ்வொன்றுக்கும் குறைந்தபட்சம் 1,000 பேரை எட்டுவது இதன் இலக்கு என்றார்.
அதிபர் பதவி காலத்தின்போது மக்களின் மனநலனுக்காக பாடுபட்டதற்காக அதிபர் ஹலிமாவுக்கு அவர் நன்றியும் தெரிவித்தார்.
விழாவைக் காண வந்த ‘டுகேதர் ஃபோர் குட்’ (‘Togather For Good’) மனநல அமைப்பு நிறுவனர் நவநீதா, மனநலம் சார்ந்து தான் நடத்தும் உரையாடல்களுக்கு விழாவில் கற்றவை பெரிதும் உதவும், என்றார்.
“அழகான இடமான ஜூவலில் விழா நடைபெறுகிறது. இந்த நிகழ்வு பல்வேறு அமைப்புகளையும் அனுபவங்களையும் ஒன்றிணைக்கிறது,” என்றும் கூறினார் நவநீதா.
விழாவிற்கு வந்திருந்த குவோ சுவான் பிரஸ்பெட்டேரியன் உயர்நிலை மாணவி ராம்தாஸ் பாபு சந்தனா, 13, தன் பள்ளியில் மனநலப் பிரச்சினைகளுக்கு உள்ளாகும் சக மாணவர்களுக்கு உதவியாளராக பொறுப்பேற்கவிருப்பதாகவும் கூறினார்.
தற்போது 31 பங்காளிகளைக் கொண்ட பிடிஎல் கலெக்டிவ் குழுமம் சென்ற அக்டோபரில் தொடங்கப்பட்டது. தொடங்கியதன் முதல் 45,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கும் சமூகத்தில் 10,000 பேருக்கும் மனநல நிலவரங்கள் பற்றி போதித்து இருக்கிறது.
43 பள்ளிகளில் உயிரோவிய காணொளிகளின் மூலம் மனநலம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ள குழுமம், அடுத்த ஆண்டு 10 தொடக்கப்பள்ளிகளில் மேலும் பல வளங்களை ஒதுக்கி மாணவர்கள் இளம் வயதில் இருந்தே தங்களுடைய மனநலனைப் பாதுகாப்பது எப்படி என்பதைக் கற்றுக்கொள்ள உதவும்.
மனநலப் பிரச்சினைகளை எதிர்நோக்குவோருக்கு மேலும் சமூக ஆதரவு கிடைக்கும் வகையில், அக்டோபரில் வடக்கு-தெற்கு வழித்தடத்தில் உள்ள 27 ரயில் நிலையங்களில் பிடிஎல் கோட்பாட்டு ரயில் தொடங்கப்படும். மின்னிலக்க தளங்களோடு இணைந்து 432,000 பயணிகளைச் சென்றடையும்.
‘ஜூவல்’, ‘வெஸ்ட்கேட்’, ‘வாட்டர்வே பாய்ண்ட்’ போன்ற அங்காடிகளிலும் இடம்பெயரும் ‘பிடிஎல்’ கண்காட்சிகள் இடம்பெறும்.

