சிங்கப்பூரில் மின்சிகரெட்டுகளைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், இங்குள்ள தன்னாட்சி பெற்ற மூன்று பல்கலைக்கழகங்களின் விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களும் அதிக அளவில் மின்சிகரெட் பயன்படுத்துவதாகத் தெரியவந்துள்ளது.
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் (என்யுஎஸ்), நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (என்டியு), சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம் (எஸ்எம்யு) ஆகியவற்றின் மாணவர்கள் தங்கள் பல்கலைக்கழக விடுதிகளில் உள்ள மாணவர்கள் மின்சிகரெட்டுகளை மறுவிற்பனை செய்வதாகக் கூறியுள்ளனர்.
விற்பனையாளர்களிடம் மொத்தமாக வாங்கி அவர்கள் அவ்வாறு மறுவிற்பனை செய்வதாகத் தெரிகிறது.
தேசியப் பல்கலைக்கழக மாணவர் ஒருவர், அங்குள்ள விடுதிகளில் பத்தில் நான்கு மாணவர்கள் மின்சிகரெட் பயன்படுத்துவதாகக் கூறினார்.
மூன்று பல்கலைக்கழகங்களிலும் பயிலும் 16 மாணவர்களிடம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நேர்காணல் நடத்தியது. அவர்கள் அனைவரும் அந்தக் கருத்தை ஒப்புக்கொண்டனர்.
மாணவர்களுக்கு விடுதி அறையில் கிடைக்கும் தனிப்பட்ட சுதந்திரம் மின்சிகரெட்டைப் பயன்படுத்திப் பார்க்க ஒரு வாய்ப்பாகக் கருதப்படுகிறது.
மொத்தமாக வாங்கி மறுவிற்பனை செய்வதன் மூலம் விடுதி மாணவர்கள் வருவாய் ஈட்டுவதும் தெரியவந்துள்ளது.
என்யுஎஸ், என்டியு, எஸ்எம்யு என மூன்று பல்கலைக்கழகங்களின் விடுதிகளிலும் மொத்தம் கிட்டத்தட்ட 24,600 மாணவர்கள் தங்கியுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகத்தில் (எஸ்யுடிடி) ஏறக்குறைய 1,500 மாணவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் விடுதியில் தங்கியுள்ளனர்.
மின்சிகரெட் பயன்படுத்தியதற்காகப் பிடிபட்ட மாணவர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்த கேள்விகளுக்கு இந்த நான்கு பல்கலைக்கழகங்களும் பதிலளிக்கவில்லை.
மின்சிகரெட்டுகள் தொடர்பான சிங்கப்பூர் சட்ட, விதிமுறைகளை மதித்து நடப்பதாக அவை தெரிவித்தன.
எஸ்எம்யு, எஸ்யுடிடி, என்யுஎஸ் மூன்றும் அவற்றின் வளாகங்கள் புகைபிடிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டவை என்று கூறுகின்றன. என்டியு வெளிப்புறங்களில் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் புகைபிடித்தலை அனுமதிக்கிறது.
சிங்கப்பூரில் 2018ஆம் ஆண்டு முதல் மின்சிகரெட்டுகளை வாங்குதல், வைத்திருத்தல், பயன்படுத்துதல் ஆகியவை சட்டப்படி குற்றமாகும். இணையம் மூலம் வெளிநாடுகளில் இருந்து தருவிக்கப்படும் மின்சிகரெட்டுகளுக்கும் இது பொருந்தும்.
மாணவர்களிடையே மின்சிகரெட்டின் தீங்குகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க, சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களுடன் அணுக்கமாகப் பணியாற்றி வருவதாகக் கல்வி அமைச்சு தெரிவித்தது.


