சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படையின் பொது வரவேற்பு

சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படையின் பொது வரவேற்பு

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

09 Sep 2023 - 11:49 pm

2 mins read

சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படையின் 55வது ஆண்டையொட்டி பாய லேபார் விமானத் தளத்தில் செப்டம்பர் 9, 10ஆம் தேதிகளில் பொது வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.

தற்காப்பு மூத்த துணை அமைச்சர் ஹெங் சீ ஹாவ் அந்த வரவேற்பு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படை அதிநவீன, ஆற்றல்மிக்க, எதிர்காலத்துக்குத் தயாரான விமானப் படையாக உருமாறி இருக்கும் வரலாற்றை அந்தப் பொது வரவேற்பு நிகழ்ச்சி எடுத்துக் காட்டுகிறது.

அந்த நிகழ்ச்சி சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படை தன்னுடைய 55 ஆண்டுகால சேவையைக் குறிக்கும் வகையில் ஏற்பாடு செய்திருக்கும் மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்ச்சி என்று திரு ஹெங் ஊடகத்திடம் தெரிவித்தார்.

பாய லேபார் விமானத் தளத்தில் நடைபெறும் பொது வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற மக்கள்.  
பாய லேபார் விமானத் தளத்தில் நடைபெறும் பொது வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற மக்கள்.   - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அந்தப் பொது வரவேற்பு ஆகாயப் படையின் ஆற்றல்களில் சிலவற்றைப் பொதுமக்கள் கண்டுகொள்ளவதற்கான வாய்ப்பையும் அளிக்கிறது என்றாரவர்.

‘நம்முடைய ஆகாயத்தை தற்காப்போம், எதிர்காலத்தைப் பாதுகாப்போம்’ என்ற கருப்பொருளுடன் சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படை 55வது ஆண்டுகால சேவையைக் கொண்டாடுகிறது.

அதையொட்டி நடைபெறும் பொது வரவேற்பு நிகழ்ச்சிக்குப் பொதுமக்கள் செப்டம்பர் 9, 10 ஆம் தேதிகளில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இலவசமாகச் செல்லலாம்.

மேல் விவரங்களுக்கு https://go.gov.sg/RSAF55OH என்ற இணையத்தளத்தை நாடலாம். அல்லது www.facebook.com/TheRSAF என்ற ஃபேஸ்புக் பக்கத்திற்குச் செல்லலாம்.

www.instagram.com/TheRSAF என்ற இன்ஸ்டகிராம் பக்கத்திற்கும் tiktok.com/@TheRSAF என்ற முகவரியில் டிக்டாக்கிற்கும் செல்லலாம்.

இதனிடையே, சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படை புதிதாக மேம்படுத்தப்பட்ட தன்னுடைய எஃப்16 ரக போர்விமானங்களில் உலகின் ஆக அதிநவீனமான ஏவுகணைகளில் ஒன்றான பைத்தான்-5 ஏவுகணைகள் பொருத்தப்பட்டு இருப்பதாக முதல் முதலாக பகிரங்கமாகத் தெரிவித்து இருக்கிறது.

பாய லேபார் விமானத் தளத்தில் நடக்கும் பொது வரவேற்பு நிகழ்ச்சியில் வைக்கப்பட்டு உள்ள தகவல் பலகை, ஆகாயப் படையின் மேம்படுத்தப்பட்ட லாக்ஹீட் மார்ட்டின் F-16 C/D/D+ போர் விமானம் இப்போது பைத்தான்-5 ஏவுகணைகளைச் சுமந்து செல்ல முடியும் என்பதை காட்டுவதாக ஜேன்ஸ் என்ற பாதுகாப்பு வேவுத்துறை நிறுவனத்தின் அறிக்கை ஒன்று குறிப்பிடுகிறது.

குறிப்புச் சொற்கள்