தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

$1 பி. சட்டவிரோத பண விவகாரம்; 10 பேருடன் மேலும் பலருக்குத் தொடர்பு

2 mins read
445697d3-a7a3-4f12-886d-411a1c6926d3
சட்டவிரோத பண விவகாரம் தொடர்பில் கைதாகி இருக்கும் 10 பேருடன் தொடர்புடைய பலரையும் பற்றி புலன்விசாரணை அதிகாரிகள் ஆழமாக ஆராய்ந்து வருகிறார்கள். அவர்களில் அந்த 10 பேரின் (படத்தில்) மனைவியரும் அவர்களின் உறவினரும் அடங்குவர் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வரைபடம் 

ஒரு பில்லியன் வெள்ளி சட்டவிரோத பண விவகாரம் தொடர்பில் 10 பேர் பிடிபட்டு இருக்கிறார்கள்.

அவர்களுடன் இன்னும் பெரிய ஒரு கட்டமைப்பு சம்பந்தப்பட்டு இருக்கலாம் என்பது அரசாங்க நீதிமன்றத்தில் தாக்கலான ஆவணங்கள் மூலம் தெரியவந்து இருக்கிறது.

அந்தச் சட்டவிரோத பண மோசடி விவகாரம் தொடர்பிலான சொத்துகளின் மதிப்பு இப்போது $1.8 பில்லியனையும் தாண்டிவிட்டது.

அந்தச் சந்தேகப்பேர்வழிகளில் சிலர் திட்டமிட்டு குற்றச்செயல்களை அரங்கேற்றும் வெளிநாட்டு கும்பல்களுடன் தொடர்புடையவர்கள் என்று தெரியவந்துள்ளது.

அந்தக் கும்பல்கள் இணைய சூதாட்டம், மோசடி நிலையங்களை நிர்வகித்து நடத்துவது, சட்டவிரோத பணப்புழக்கம் ஆகிய காரியங்களில் ஈடுபட்டு வந்துள்ளது.

கைதாகி இருக்கும் 10 பேருக்கும் பிணை அனுமதிக்காமல் அவர்களைத் தொடர்ந்து தடுப்புக்காவலில் வைத்திருக்க வேண்டும் என்று அரசினர் தரப்பு நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டது.

பிடிபட்டு இருப்பவர்கள் ஒருவருக்கொருவர் மட்டுமன்றி சிங்கப்பூரை விட்டு தப்பி ஓடிவிட்ட சந்தேகப்பேர்வழிகளோடும் தொடர்புகளைக் கொண்டிருக்கிறார்கள் என்று அரசினர் தரப்பு வாதிட்டது.

இந்த விவகாரம் தொடர்பில் காவல்துறை ஆகஸ்ட் 15ஆம் தேதி சோதனை நடத்தியது. அதனையடுத்து செப்டம்பர் 1ஆம் தேதி இரண்டாவது சோதனை நடத்தப்பட்டது.

காவல்துறை நீதிமன்றத்தில் இரண்டு பேரை அடையாளம் தெரிவித்து இருக்கிறது. அவர்களில் ஒருவர் சந்தேகநபர் ‘ஒய்’.

இவர் ஏற்கெனவே கைதாகி இருக்கும் சீனாவைச் சேர்ந்த 31 வயது வாங் போசன் என்பவரின் சொந்தக்காரர்.

ஒய் இன்னமும் பிடிபடவில்லை. இவருக்கு சொந்தமான சிங்கப்பூரில் உள்ள $100 மில்லியனுக்கும் மேற்பட்ட மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. அல்லது அவற்றை விற்கவோ, வாங்கவோ தடை விதிக்கப்பட்டு இருக்கிறது என்பது அந்த ஆவணங்கள் மூலம் தெரியவந்தது.

மற்றொரு சந்தேகப்பேர்வழியான ‘எக்ஸ்’ என்பவருக்குச் சொந்தமான $260 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள சொத்துகளையும் காவல்துறை முடக்கி இருக்கிறது.

இவர் யார் என்பது பற்றி காவல்துறை தெரிவிக்கவில்லை. இருந்தாலும் இவர் இப்போது நடந்து வரும் புலன்விசாரணையையொட்டி தேடப்பட்டு வருவதாகவும் சீனாவிலும் இவர் தேடப்பட்டு வருவதாகவும் காவல்துறை தெரிவித்தது.

இதனிடையே, இந்தச் சட்டவிரோத பணப்புழக்க விவகாரத்தில் கைதாகி இருக்கும் அந்த 10 வெளிநாட்டினருடன் தொடர்புடைய மற்றவர்களையும் பற்றி புலன்விசாரணை அதிகாரிகள் ஆழமாக ஆராய்ந்து வருகிறார்கள்.

அப்படி அதிகாரிகள் சந்தேகப்படும் நபர்களில் அந்த 10 பேரில் பலருடைய மனைவியரும் உறவினர்களும் அடங்குவர் என்று நீதிமன்றத்தில் அரசினர் தரப்பு தெரிவித்து உள்ளது.

குறிப்புச் சொற்கள்