ஆசிய மாதர் சங்கத்தின் ‘பெண் சிங்கம்’ மறைவு

2 mins read
58e7693b-a79e-455d-8536-2355310d7fb5
திருவாட்டி லீனா தம்பையா சமூகத் தொண்டர். ஆசிய மாதர் நல்வாழ்வுச் சங்கத்தில் அவர் உடற்குறையாளருக்காக அரும்பாடுபட்டவர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப்படம் 

சிங்கப்பூரில் பல குறைபாடுடன் கூடிய சிறாருக்கான முதலாவது பள்ளியைத் தொடங்கிய திருவாட்டி லீனா தம்பையா (படம்) தமது 86வது வயதில் வெள்ளிக்கிழமை மரணமடைந்தார்.

அவர் ஆசிய மாதர் நல்வாழ்வுச் சங்கத்தின் ‘பெண் சிங்கம்’ என்று வர்ணிக்கப்பட்டவர்.

திருவாட்டி தம்பையா ஒரு சமூகத்தொண்டர். ஆசிய மாதர் நல்வாழ்வுச் சங்கத்தில் அவர் உடற்குறையுள்ள மக்களுக்குப் பெரும் சேவை புரிந்தவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

பள்ளி செல்லாத பல்வேறு உடற்குறையுடன் கூடிய பிள்ளைகளுக்காக 1979ல் திருவாட்டி தம்பையா விளையாட்டுக் குழு ஒன்றைத் தொடங்கினார்.

ஏழு பிள்ளைகளுடன் செயின்ட் இக்னேஷியஸ் தேவாலயத்தில் தொடங்கிய உடற்குறையுள்ள சிறார்கள் விளையாட்டுக் குழு என்ற அந்த அமைப்பு 1983ல் ஐநா உன்னதச் சமூக விருதைப் பெற்றது.

பிறகு அந்தக் குழு ஆசிய மாதர் நல்வாழ்வுச் சங்கப் பள்ளிக்கூடம் என்று உருமாறியது.

இந்தப் பள்ளி ஏறக்குறைய 400 மாணவர்களுக்கு உதவுகிறது.

திருவாட்டி தம்பையா 1994ல் ஹர் வேர்ல்ட் சஞ்சிகையின் ஆண்டின் தலைசிறந்த மாது என்று பெயர் குறிப்பிடப்பட்டார்.

திருவாட்டி தம்பையாவின் புதல்வர் பால் தம்பையா ஒரு மருத்துவர். தொற்றுநோய்த் துறை பேராசிரியர். சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் தலைவர்.

தன்னுடைய தாயார் தன்னையும் தன்னுடைய சகோதரியான மாலினியையும் சிறு வயதில் இருந்தே தொண்டூழியத்தில் ஈடுபடுத்தியதாக டாக்டர் தம்பையா குறிப்பிட்டார்.

திருவாட்டி தம்பையா மறைவு தொடர்பில் ஃபேஸ்புக்கில் கருத்து கூறிய கல்வி அமைச்சர் சான் சுன் சிங், சமூகச் சேவைத் துறையில் திருவாட்டி தம்பையா முன்னணி ஒளிவிளக்காகத் திகழ்ந்தார் என்று கூறினார்.

குறிப்புச் சொற்கள்