$68 பில்லியன் வெளிநாட்டு மோசடி: ஒலாம் குழுமம் மறுப்பு

$68 பில்லியன் வெளிநாட்டு மோசடி: ஒலாம் குழுமம் மறுப்பு

2 mins read
bb4ab916-9a3c-4dae-a8de-c02912e49745
$68 பில்லியன் மோசடி என இரு இணையச் செய்திகள் தெரிவித்து இருப்பதற்கு ஒலாம் குழுமம் மறுப்பு தெரிவித்து உள்ளது. - படம்: பிஸ்னஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் உள்ள ஒலாம் குழுமம் தனது நைஜீரியப் பிரிவான ஒலாம் நைஜீரியா பல பில்லியன் டாலர் மோசடியில் சிக்கியதாக வெளியான அண்மைய ஊடகத் தகவல்களை திட்டவட்டமாக மறுத்து உள்ளது.

ஊடகத் தகவல் வெளியானதன் காரணமாக திங்கட்கிழமை பிற்பகல் 2.06 மணிக்கு சிங்கப்பூர் பங்குச் சந்தையில் ஒலாமின் மதிப்பு 8.6 விழுக்காடு இறங்கி $1.17 ஆக வர்த்தகமானது.

உணவு மற்றும் வேளாண் வர்த்தகப் பெருநிறுவனமான ஒலாம் மோசடியில் ஈடுபட்டு இருப்பதாக கடந்த வாரம் டெய்லி நைஜீரியா மற்றும் பிரைம்பிஸ்னெஸ் ஆப்பிரிக்கா போன்றவற்றின் இணையச் செய்திகள் குறிப்பிட்டு இருந்தன.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக திங்கட்கிழமை அறிக்கை வெளியிட்ட ஒலாம், அடிப்படையற்ற, எரிச்சல் அளிக்கக்கூடிய குற்றச்சாட்டுகளை மறுப்பதாகத் தெரிவித்து உள்ளது.

இருப்பினும், மோசடி என்று தகவல் வெளியாகிவிட்டதால் இது குறித்து மறுஆய்வு செய்யுமாறு தணிக்கைக் குழுவுக்கு ஒலாமின் இயக்குநரவை உத்தரவிட்டுள்ளது.

ஒலாம் நைஜீரியா, ஒலாம் குழுமம் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் US$50 பில்லியன் (S$68 பில்லியன்) மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக நைஜீரிய அரசாங்கம் விசாரணை நடத்தி வருவதாக இரு இணையச் செய்திகளும் தெரிவித்து இருந்தன.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகள் தவறாக வழிநடத்தும் வகையில் புனையப்பட்டு உள்ளதாக ஒலாம் கூறியுள்ளது.

மேலும், டெய்லி நைஜீரியா குறிப்பிட்டதுபோல, கற்பனை இயக்குநர்கள் எவரும் தனது நைஜீரிய கிளையில் கிடையாது என்றும் பிரைம்பிஸ்னெஸ் ஆப்பிரிக்கா தெரிவித்திருப்பதுபோல போலி நிறுவனக் கட்டமைப்பு எதனையும் தனது குழுமம் உருவாக்கவில்லை என்றும் ஒலாம் மறுத்து உள்ளது.

“ஒலாம் குழுமம் தனது வர்த்தக நடவடிக்கைகளில் நடைமுறைக்கு இணங்கி நடப்பதை மேலும் வலுவாக்குவதில் தொடர்ந்து கவனம் செலுத்தும்,” என்று அறிக்கை தெரிவித்து உள்ளது.

குறிப்புச் சொற்கள்