தனது விமானம் சிங்கப்பூரில் அவசரமாகத் தரையிறங்கியதற்கு இயந்திரக் கோளாறு காரணமாக இருந்திருக்கலாம் என்று ஏர் சைனா தெரிவித்து உள்ளது.
சீனாவின் சிச்சுவான் மாநிலத்தில் உள்ள செங்குடு நகரத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை புறப்பட்டு வானில் பறந்துகொண்டு இருந்த ஏர் சைனா விமானத்தின் சரக்குப் பகுதியிலும் கழிவறைப் பகுதியிலும் இருந்து திடீரென புகை கிளம்பியது. தீ எரிவதும் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து விமானிகள் இருவரும் அவசரநிலையை அறிவித்து சிங்கப்பூரின் சாங்கி விமானத்தில் அவசரமாகத் தரை இறங்க அனுமதி கோரினர். அனுமதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து மாலை 4.15 மணியளவில் விமானம் தரை இறங்கியது.
அதில் இருந்து 146 பயணிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
இச்சம்பவத்தை, விமானத்தில் இருந்த ஒன்பது விமானப் பணியாளர்களும் சட்டவிதிகளுக்கு இணங்க சரியாகக் கையாண்டதாக ஏர் சைனா தெரிவித்தது.
மேலும், விமானத்தின் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டு இருக்கலாம் என்று ஆரம்பகட்ட விசாரணை தெரிவிப்பதாகவும் விசாரணை நீடிப்பதாகவும் அது சீனாவின் சமூக ஊடகத்தளமான வெய்போவில் திங்கட்கிழமை அதிகாலை 1 மணியளவில் பதிவு ஒன்றை வெளியிட்டது.