இரத்தத்தை விரைவில் உறையச் செய்து இரத்த இழப்பை அதிவேகமாகக் கட்டுப்படுத்தும் கருவிகளைக் கண்டுபிடித்துள்ள ‘எமர்ஸ்டேட்’ (EmerStat).
பாசியை மாற்றுப் புரதம், மாற்றுச் செல்லப்பிராணி உணவுகள் மற்றும் உடல்நலத்திற்கு நன்மை விளைவிக்கும் முக அலங்காரப் பொருள்களாக மாற்றும் ‘டீம் ஆல்க்ரோ’ (Team Algrow).
தொழிற்சாலைகளின் கரிமக் கழிவுகளை எரித்து, சுற்றுப்புறத்தைச் சேதப்படுத்தவிடாமல், அவற்றை எவ்வித நச்சுத்தன்மையும் இல்லாத வேதிப்பொருள்களோடு மின்கலம் போன்ற பயனுள்ள பொருள்களாக மாற்றும் ‘சிபிஇ இக்கோ சொல்யூஷன்ஸ்’ (CBE Eco-Solutions).
இந்தியர்கள் வழிநடத்தும் இந்த நிறுவனங்கள், லீ குவான் இயூ உலகளாவிய வர்த்தகத் திட்டமிடுதல் போட்டியின் ‘பிளேஸ்’ எனும் இறுதிச் சுற்று வாரத்திற்காக சிங்கப்பூருக்கு வந்திருக்கும் அணிகளில் இடம்பெறுகின்றன.
‘அறிவார்ந்த, நிலைத்தன்மைமிக்க மற்றும் மீள்தன்மைமிக்க எதிர்காலத்தை உருவாக்குவது’ என்பது போட்டியின் கருப்பொருள்.
சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம் (‘எஸ்எம்யு’), செப்டம்பர் 11 முதல் 15 வரை 11வது முறையாக நடத்தும் இப்போட்டி 77 நாடுகளிலிருந்து 1100 பல்கலைக் கழகங்களைப் பிரதிநிதிக்கும் 1,000 விண்ணப்பங்களை வரவேற்றது. அவற்றில் தேர்வுசெய்யப்பட்ட 53 குழுக்கள் சிங்கப்பூருக்கு வந்துள்ளன.
செப்டம்பர் 12 நடக்கும் படைப்புப் போட்டியின் முடிவில் அவர்களில் எட்டு அணிகள் மட்டுமே மாபெரும் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறுவர்.
இறுதிச் சுற்று, செப்டம்பர் 14 காலை 10.30 முதல் 4.30 மணி வரை எஸ்எம்யு யோங் புங்க் ஹொவ் சட்டப் பள்ளியில் இடம்பெறும். சிறப்பு அங்கமாக ‘டிக்டாக்’ தலைமை நிர்வாகியுடன் ‘டிக்டாக்’ படைப்பாளர்களும் எஸ்எம்யு மாணவர்களும் கலந்துரையாடவும் செய்வர்.
தொடர்புடைய செய்திகள்
இப்போட்டியின் திறப்புவிழாவில் சிறப்பு விருந்தினராக துணைப் பிரதமரும் பொருளியல் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான ஹெங் சுவீ கியட் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் ‘புரொடெஜெ வென்ச்சர்ஸ்’ (Protégé Ventures) எனும் தென்கிழக்காசியாவின் முதல், மற்றும் சிங்கப்பூரின் ஒரே மாணவர் தலைமைதாங்கும் துணிகர நிதி மற்றும் பயிற்சித் திட்டத்திற்கு $500,000 நன்கொடையை ‘மேட்ரிக்ஸ் பார்ட்னர்ஸ் சீனா’வின் நிறுவன நிர்வாகப் பங்காளரும் ‘எஸ்எம்யு எண்டர்ப்ரைஸ்’ உறுப்பினருமான டேவிட் சு வழங்கினார்.
எஸ்எம்யுவின் லீ கொங் சியன் வர்த்தகப் பள்ளியைச் சார்ந்த மூன்று ஆசிரியர்கள் எஸ்எம்யு ஐஐஇவுடன் இணைந்து எழுதிய பத்தாவது லீ குவான் இயூ உலகளாவிய வர்த்தகத் திட்டமிடுதல் போட்டியின் இறுதி சுற்று தொழில்முனைவர்களின் கதைகளை விவரிக்கும் நூலும் துணைப் பிரதமர் முன்னிலையில் வெளியிடப்பட்டது.
சிங்கப்பூர் எவ்வாறு தன்முனைப்பு வர்த்தகங்களில் தலையாய நாடாக முன்னேறுவது என்ற தலைப்பில் துணைப் பிரதமரும் திரு டேவிட் சுவும் தொழிலதிபர்களோடு கலந்துரையாடினர்.
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அடித்தள, மற்றும் புத்தாக்க ஆராய்ச்சிகளைப் புரிய பல்கலைக்கழகங்களுக்கு அரசாங்கம் நிதியுதவி வழங்குவதாகக் கூறினார் துணைப் பிரதமர்.
அமெரிக்கா, ஜப்பான், சீனா மற்றும் ஆசிய நாடுகளுடனும் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ள சிங்கப்பூர் உலக மையத்தில் பெரும்பங்கை வகிக்கமுடியும் என்றும் அவர் சொன்னார்.
வியாழன் செப்டம்பர் 14, காலை 10.30 மணி முதல் 4.30 மணி வரை எஸ்எம்யு யோங் புங்க் ஹொவ் சட்டப் பள்ளியில் (SMU Yong Pung How School of Law) நடக்கும் மாபெரும் இறுதிச் சுற்றில் பொதுமக்களும் கலந்துகொண்டு போட்டியாளர்களின் உரைகளையும் ‘டிக்டாக்’ தலைமை நிர்வாகியுடனும் தொழில்முனைவர்களுடனும் நடைபெறும் கலந்துரையாடல்களையும் காணலாம்.
அதன் பின்பு மாலை 6.45 மணி முதல் 11 மணி வரை CHIJMES அரங்கில் நடக்கும் ‘BLAZE Mixer’ இரவிலும் கலந்துகொண்டு பொதுமக்கள் முடிவுகளை அறியவும் புதிய தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளவும் செய்யலாம்.

