மலேசியர் தவிர்த்து புதிய வேலை அனுமதிச்சீட்டில் சிங்கப்பூருக்கு வரும் ஊழியர்களின் தங்குமிடத் தகவல்களை மனிதவள அமைச்சிடம் முதலாளிகள் சமர்ப்பிக்க வேண்டும்.
இப்புதிய விதிமுறை இம்மாதம் 19ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
கட்டுமானம், கப்பல் பட்டறை, செய்முறைத் தொழில்துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு இப்புதிய விதிமுறை பொருந்தும்.
ஊழியர்கள் சிங்கப்பூருக்கு வரும் முன்னரே அவர்களின் தங்குமிடம் குறித்த தகவல்களை முதலாளிகள் பதிவுசெய்ய வேண்டும்.
தங்குமிடத்திற்கான வாடகை ஆவணங்கள், ஒப்பந்தப் பத்திரங்கள், வாடகைக்கு இடம் தருவோருடனான ஒப்பந்தம் முதலியவற்றை மனிதவள அமைச்சிடம் முதலாளிகள் சமர்ப்பிக்க வேண்டும்.
வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகள், கட்டுமானத் தற்காலிக தங்குமிடங்கள், சொந்தத் தங்குவிடுதிகள் போன்ற இடங்களில் முதலாளிகள் ஊழியர்களைத் தங்க வைக்க விரும்பினால் அதற்கு ஒப்புதல் பெற வேண்டும். இதற்கான ஒப்புதல் ஒரு வாரத்திற்குள் கிடைத்துவிடும்.
தனியார்க் குடியிருப்புக் கட்டடங்கள், ஹோட்டல்கள், தங்குவிடுதிகளில் ஊழியர்களைத் தங்க வைக்க விரும்பினால் அதற்கும் ஒப்புதல் பெற வேண்டும்.
ஆவணங்களைச் சரிபார்க்க கூடுதல் நேரம் தேவைப்படும் என்பதால், இதற்கான ஒப்புதல் கிடைக்க கிட்டத்தட்ட ஆறு வாரங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட நாள்கள் எடுக்கும் என்று அமைச்சு கூறியது.
தொடர்புடைய செய்திகள்
தங்குமிடத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லாமல் ஊழியர்களை சிங்கப்பூருக்குள் வரவழைக்கும் முதலாளிகளின் வேலை அனுமதிச்சீட்டு உரிமைகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படும்.
கட்டுமானம், கப்பல் பட்டறை, செய்முறைத் தொழில்துறைகளில் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கை கொவிட்-19 காலகட்டத்திற்கு முன்னர் இருந்ததைக் காட்டிலும், தற்போது 19 விழுக்காடு அதிகரித்துள்ள நிலையில், புதிய விதிமுறைகள் அமலுக்கு வரவுள்ளன.
கொவிட்-19 காரணமாக கட்டுமானப் பணிகள் தாமதம் அடைந்ததால் அவற்றை விரைவாக முடிக்க ஏதுவாக வெளிநாட்டு ஊழியர்களை நிறுவனங்கள் பணியமர்த்த அமைச்சு வழிவகை செய்து வருகிறது.
இந்நிலையில், வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளில் போதுமான அளவில் படுக்கைகள் இருக்க வேண்டும் என்பதற்காக அரசாங்கம் அத்துறையினருடன் இணைந்து பணியாற்றி வருகிறது.
அவ்வகையில், கடந்த 2022 டிசம்பர் முதல் இப்போதுவரை கிட்டத்தட்ட 17,000 படுக்கைகள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளன.