சிங்கப்பூர் குறைகடத்தித் துறையில் தொடர்ந்து வலுவான, போட்டிமிக்க, துடிப்பான நடுவமாக இருக்கும் என்று துணைப்பிரதமரும் நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
கடினமான போட்டி இருந்தாலும் ‘குளோபல் ஃபவுண்டரிஸ் (ஜிஎஃப்)‘ நிறுவனம் அதன் உற்பத்தித் தளத்தை சிங்கப்பூரில் விரிவுபடுத்தியிருப்பது அதற்கான சான்று என்று திரு வோங் குறிப்பிட்டார்.
அமெரிக்க நிறுவனமான குளோபல் ஃபவுண்டரிஸ், உட்லண்ட்ஸ் பகுதியில் புதிதாக நுண்சில்லுகள் தயாரிக்கும் ஆலையைத் திறந்துள்ளது.
குறைகடத்தி ஆலைகளுக்கு அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம் முதலியவை பெரிய அளவில் மானியங்கள் தருகின்றன. அதற்குப் போட்டியாக சிங்கப்பூரால் பெரிய அளவில் மானியம் தர முடியாது என்று திரு வோங் ஆலைத் திறப்பு விழாவில் கூறினார்.
உலக அளவில் பார்க்கும்போது சிங்கப்பூர் செலவு குறைந்த இடமன்று. இருப்பினும், சிங்கப்பூரிடம் அருமையான இணைப்பு, நம்பகத்தன்மை, நிலையான வணிக கட்டுப்பாடுகள், வடிவமைப்பு, ஆய்வு, உற்பத்தி எனப் பல உள்கட்டமைப்புகளை நிறுவனங்கள் பெறுகின்றன என்றார் அவர்.
“அதேபோல் சிங்கப்பூருக்குப் பெரும்பலமாக இருப்பது மனிதவளம். இங்கு நன்கு படித்த, திறன்மிக்க ஊழியர்கள் இருக்கின்றனர். அது புத்தாக்கத்திற்கும் ஆய்வுகளுக்கும் உதவுகிறது,” என்றார் அவர்.
மேற்கண்ட காரணங்களாலும் சூழலாலும்தான் நிறுவனங்களால் தொடர்ந்து வளர்ச்சியடைய முடிகிறது. அதனால் வேலைவாய்ப்புகளும் உருவாகின்றன என்றார் திரு வோங்.
“அண்மைய ஆண்டுகளாக சிங்கப்பூர் துல்லியமாகவும் சிறப்பாகவும், முக்கியமாக நுண்சில்லுகளைத் தயாரிக்கும் வழிமுறைகளைப் பின்பற்றி வருகிறது, தற்போதைய சூழலில் வாகனத்துறை, 5ஜி தொழில்கட்டமைப்பில் உள்ள கருவிகள் அனைத்திலும் நுண்சில்லுகளுக்கான தேவைகள் அதிகம் உள்ளன.
தொடர்புடைய செய்திகள்
“சிங்கப்பூர் தொடர்ந்து அதன் திறன்களை அதிகரித்து, போட்டிக்கு ஈடுகொடுத்து வலுப்பெறும்,” என்று துணைப் பிரதமர் தெரிவித்தார்.
வரும் நாள்களில் குளோபல் ஃபவுண்டரிஸ் ஆலையில் தொலைபேசிகள், மின்வாகனங்களில் பயன்படுத்தப்படும் காட்சி உணரிகள், ஒலியலை அதிர்வெண் நுண்சில்லுகள் தயாரிக்கப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆலையின் விரிவாக்கத்தால் கிட்டத்தட்ட திறன்மிக்க 1,000 வேலைகள் உருவாகும் என்றும் அவற்றில் பெரும்பாலான வேலைகளைச் சிங்கப்பூரர்கள் பெறுவார்கள் என்றும் திரு வோங் சொன்னார்.
சிங்கப்பூரில் உள்ள குளோபல் ஃபவுண்டரிஸ் நிறுவனத்தில் 4,900க்கும் அதிகமான ஊழியர்கள் உள்ளனர். அதன் நிலையான சொத்து முதலீடு ஐந்து பில்லியன் வெள்ளியாக உள்ளது.

