உலகப் பொருளியல் நிச்சயமற்றதாக நீடிக்கிறபோதிலும் சிங்கப்பூரில் வேலைவாய்ப்பு நிலவரம் நல்லநிலையில் உள்ளது. வேலைக்கு ஆள்களை நியமிப்பதை இவ்வாண்டின் கடைசிக் காலாண்டிலும் தொடரத் திட்டமிட்டுள்ளதாக இங்குள்ள முதலாளிகள் தெரிவித்து உள்ளனர்.
‘மேன்பவர் குரூப்’ என்னும் வேலைவாய்ப்பு நிறுவனம் ஜூலை மாதம் நடத்திய ஆய்வில் அவர்கள் இந்தக் கருத்தை வெளிப்படுத்தினர். பொது மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த 510 நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆய்வில் பங்கேற்றனர்.
நான்காம் காலாண்டில் பணியாளர் எண்ணிக்கையை அதிகரிக்கப்போவதாக ஆய்வில் பங்கேற்றவர்களில் 48 விழுக்காட்டினர் கூறினர். இருப்பினும், தங்களது நிறுவனங்களில் ஆட்குறைப்பு இருக்கலாம் என 12 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.
இப்போதுள்ள பணியாளர் எண்ணிக்கையில் மாற்றம் செய்யும் திட்டம் எதுவுமில்லை என 38 விழுக்காட்டு முதலாளிகள் குறிப்பிட்டனர்.
இந்தக் கருத்துகளின் அடிப்படையில் நான்காம் காலாண்டிற்கான வேலை நிலவர விழுக்காடு 36 விழுக்காட்டுக்கு அதிகரிக்கும். கடந்த காலாண்டுடன் ஒப்பிடுகையில் இது 2 விழுக்காடு அதிகம்.
மொத்தத்தில், ஆய்வில் பங்கேற்ற எல்லா ஒன்பது துறையினரும் தங்களது பணியாளர் எண்ணிக்கையை உயர்த்த இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
சுகாதாரப் பராமரிப்பு, தொடர்புச் சேவைகள் மற்றும் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்டவை ஆய்வில் பங்கேற்ற துறைகளில் அடங்கும்.
ஆய்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன.