வெளிநாடுகளில் 76.16% சிங்கப்பூரர்கள் தர்மனுக்கு வாக்கு

வெளிநாடுகளில் 76.16% சிங்கப்பூரர்கள் தர்மனுக்கு வாக்கு

2 mins read
dbd6458d-4c55-43cd-8a71-37693782ae8a
வெளிநாடுகளில் பதிவான வாக்குகள் அடங்கிய பெட்டிகள் நொவினா ரைஸில் உள்ள தேர்தல் துறையில் செவ்வாய்க்கிழமை வாக்கு எண்ணிக்கைக்குத் தயாராக வைக்கப்பட்டு இருந்தன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நடந்து முடிந்த அதிபர் தேர்தலில், வெளிநாட்டில் வசிக்கும் சிங்கப்பூரர்களில் 76 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் தர்மன் சண்முகரத்னத்துக்கு வாக்களித்து உள்ளனர்.

இது உள்ளூரில் திரு தர்மனுக்குக் கிடைத்த வாக்கு விகிதத்தைவிட சற்று அதிகம்.

செப்டம்பர் 1ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் திரு தர்மன், 66, மகத்தான வெற்றி பெற்றார். அவருக்கு உள்ளூரில் 70.4 விழுக்காடு வாக்குகள் கிடைத்தன.

வெளிநாடுகளில் அளிக்கப்பட்ட வாக்குகள் வந்து சேர செப்டம்பர் 11ஆம் தேதி இறுதி நாள். அதன்படி வந்து சேர்ந்த வாக்குகள் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 12) தேர்தல் துறையின் வாக்கு எண்ணிக்கை மையத்தில் எண்ணப்பட்டன.

இந்த வாக்குகளையும் சேர்த்தால் 2023 அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகளின் மொத்த எண்ணிக்கை (செல்லாத வாக்குகள் உட்பட) 2,534,711 ஆகும்.

வாக்களிக்கத் தகுதி உள்ள 2,709,407 சிங்கப்பூரர்களில் இது 93.55 விழுக்காடு.

வெளிநாடுகளில் 6,649 பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 3,432 பேர் அஞ்சல் வழியாகவும் 3,217 பேர் நேரடியாக வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்றும் வாக்களித்தனர்.

இந்த அதிபர் தேர்தலில்தான் அஞ்சல் வழி வாக்கு முறை முதன்முறையாக அறிமுகம் கண்டுள்ளது.

பெய்ஜிங், ஷாங்காய், கேன்பரா, துபாய், ஹாங்காங், லண்டன், நியூயார்க், சான் ஃபிரான்சிஸ்கோ, தோக்கியோ, வாஷிங்டன் ஆகிய 10 வாக்களிப்பு நிலையங்களில் மட்டும் 2,454 சிங்கப்பூரர்கள் வாக்களித்தனர்.

செல்லுபடியான 3,721 வாக்குகளில் 2,834 வாக்குகள் (76.16 விழுக்காடு) திரு தர்மனுக்கும் 595 வாக்குகள் (15.99 விழுக்காடு) திரு இங் கொக் சொங்கிற்கும் 292 வாக்குகள் (7.85 விழுக்காடு) டான் கின் லியானுக்கும் கிடைத்துள்ளன.

திரு தர்மன் சிங்கப்பூரின் புதிய அதிபராக வரும் வியாழக்கிழமை 14ஆம் தேதி இஸ்தானாவில் பதவி ஏற்க உள்ளார்.

குறிப்புச் சொற்கள்