சிங்கப்பூரின் அறிவார்ந்த தேசம் மற்றும் மின்னிலக்க அரசாங்கக் குழுமம் (எஸ்என்டிஜிஜி) தொடர்பு தகவல் அமைச்சின் மின்னிலக்க மேம்பாட்டு அம்சங்களுடன் இணைக்கப்பட உள்ளது. பெரியதொரு அறிவார்ந்த தேசக் குழுமத்தை உருவாக்குவது அதன் நோக்கம்.
அவ்வாறு விரிவடைந்த, பெரிய குழுமம் பிரதமர் அலுவலகத்தின் ஒரு பகுதியாக இயங்கும் என்றும் தொடர்பு தகவல் அமைச்சு அதனை நிர்வகிக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இது தொடர்பாக அறிவார்ந்த தேசம் மற்றும் மின்னிலக்க அரசாங்கக் குழுமமும் தொடர்பு தகவல் அமைச்சும் கூட்டறிக்கை ஒன்றை செவ்வாய்க்கிழமை வெளியிட்டன.
மின்னிலக்கம் தொடர்பான நடவடிக்கைகளில் முழு அளவில் ஈடுபட அரசாங்கத்திற்கு இந்த இணைப்பு உதவும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தற்போதைய ‘அறிவார்ந்த தேசம் மற்றும் மின்னிலக்க அரசாங்கக் குழுமம்’ என்பது அறிவார்ந்த தேசம் மற்றும் மின்னிலக்க அரசாங்க அலுவலகத்துடன் அதன் அமல்படுத்தும் பிரிவான அரசாங்கத் தொழில்நுட்ப அமைப்பும் இணைந்து அழைக்கப்படுகிறது.
சிங்கப்பூரின் அறிவார்ந்த தேச உத்தி, அரசாங்கச் சேவைகளின் மின்னிலக்கமயம், மின்னிலக்கத் தொழில்நுட்பங்கள் மற்றும் திறன்களின் செயல்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது இந்தக் குழுமம்.
அதேநேரம், அரசாங்கத்தின் தகவல் கொள்கை மற்றும் பொதுத் தொடர்பை ஒருங்கிணைப்பதற்கு அப்பால் மின்னிலக்கப் பொருளியல், மின்னிலக்க ஆயத்தநிலை, மின்னிலக்க உள்கட்டமைப்பு மற்றும் தரவுகளுக்கான ஒழுங்குமுறை, மின்னிலக்க மற்றும் இணையப் பாதுகாப்பு ஆகியவற்றை தொடர்பு தகவல் அமைச்சு கவனித்துக்கொள்கிறது.
இவ்விரு அமைப்புகளும் தேசிய மற்றும் அரசாங்க மின்னிலக்க உத்திகள் தொடர்பாக ஏற்கெனவே அணுக்கமாக இணைந்து பணியாற்றி வருவதாக கூட்டறிக்கை குறிப்பிட்டது. இணைப்பு அக்டோபர் முதல் கட்டம் கட்டமாக நிகழும் என்றும் அது தெரிவித்தது.

