தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பதவி ஓய்வு பெறுகிறார் நாட்டின் முதல் பெண் அதிபர்

2 mins read
d5aad2c5-6a74-4e43-8194-12b2c63d0e69
திருவாட்டி ஹலிமா யாக்கோப், 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி, சிங்கப்பூரின் முதல் பெண் அதிபராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
2019ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி ரேஸ் கோர்ஸ் ரோட்டில் நடைபெற்ற தீபாவளி ஒளியூட்டு விழாவின்போது அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் உலா வந்த அதிபர் ஹலிமா யாக்கோப் (இளஞ்சிவப்பு உடையில் கையசைத்தபடி)
2019ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி ரேஸ் கோர்ஸ் ரோட்டில் நடைபெற்ற தீபாவளி ஒளியூட்டு விழாவின்போது அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் உலா வந்த அதிபர் ஹலிமா யாக்கோப் (இளஞ்சிவப்பு உடையில் கையசைத்தபடி) - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் எட்டாவது அதிபராகவும் முதல் பெண் அதிபராகவும் பதவி வகிக்கும் ஹலிமா யாக்கோப் செப்டம்பர் 13ஆம் தேதி பதவி ஓய்வுபெறுகிறார்.

அதிபராகப் பதவி வகித்த ஆறு ஆண்டுகளில் சமூகநலன் சார்ந்த பல்வேறு அம்சங்களில் கவனம் செலுத்தியதுடன் உடற்குறையுள்ளோர், முதிய ஊழியர்கள் போன்ற எளிதில் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்காக அவர் குரல்கொடுத்தார்.

பாலின சமத்துவத்தை வலியுறுத்தி வந்துள்ள அவர், பதவியில் இருந்தபோது வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டில் சிறிது காலம் வசித்த அதிபர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் பாதுகாப்புக் காரணங்களுக்காக அவர் பின்னர் அதிபர் மாளிகையான இஸ்தானாவில் குடிபுகுந்தார்.

முதிய ஊழியர்களின் பாதுகாப்பு அவசியம் என்பதை வலியுறுத்திய திருவாட்டி ஹலிமா, ஓய்வு, மறுவேலைவாய்ப்பு தொடர்பான சட்டத்தில் திருத்தம் செய்யப்படும்போது வயதின் அடிப்படையில் ஊழியர்கள் வேலையிலிருந்து நீக்கப்படுவதற்கு எதிரான பாதுகாப்பு கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும் என்று கூறினார்.

50 வயதைக் கடந்த ஆண்களுக்கு, பிரம்படியில் இருந்து விலக்கு அளிக்கப்பட வகைசெய்யும் சட்டத்தை மறுஆய்வு செய்யவேண்டும் என்று கூறிய அவர், பாதிக்கப்பட்டோருக்காக அவ்வாறு குரல் கொடுத்தார்.

நீண்டகாலமாகவே சமயங்களுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்தவும் கலாசாரங்களுக்கு இடையே வெளிப்படையான, மரியாதைக்குரிய முறையில் கருத்துப் பரிமாற்றம் தேவை என்றும் திருவாட்டி ஹலிமா கூறிவந்துள்ளார்.

அவரது பதவிக்காலத்தில் அதிபர் சவால் நிகழ்ச்சிகள், உடற்குறையுள்ளோர் மேம்பாடு, அனைவரையும் உள்ளடக்கிய மின்னிலக்கச் சமுதாயத்தை உருவாக்குதல், பராமரிப்பாளர்களுக்கு ஆதரவு போன்ற அம்சங்களில் கவனம் செலுத்தின.

பல்வேறு சமூக சேவை அமைப்புகளுக்கும் லாப நோக்கமற்ற அமைப்புகளுக்கும் நேரில் செல்வதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

அதிபர் மாளிகையான இஸ்தானாவை அனைவரும் அணுகுவதற்கு எளிதான இடமாக வைத்திருப்பதில் அவர் ஆர்வம் கொண்டிருந்தார்.

சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்துவோரும் உடற்குறையுள்ளோரும் எளிதில் வந்துசெல்லக்கூடிய வகையில் இஸ்தானாவில் 2021ஆம் ஆண்டு ஒரு தோட்டத்தை அமைத்தார்.

இஸ்தானாவின் வரலாற்றைப் பிள்ளைகள் அறிந்துகொள்ள உதவும் சிறுவர் நூல் ஒன்று 2022ல் வெளியானது.

திருவாட்டி ஹலிமாவை அடுத்து நாட்டின் ஒன்பதாவது அதிபராக அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு தர்மன் சண்முகரத்னம் செப்டம்பர் 14ஆம் தேதி பதவியேற்றுக்கொள்வார்.

குறிப்புச் சொற்கள்