சட்டவிரோதப் பண விவகாரம்: குற்றஞ்சாட்டப்பட்டவர் நாட்டை விட்டு வெளியேறும் சாத்தியம் அதிகம்

சட்டவிரோதப் பண விவகாரம்: குற்றஞ்சாட்டப்பட்டவர் நாட்டை விட்டு வெளியேறும் சாத்தியம் அதிகம்

1 mins read
b01800eb-cb3c-43f5-b4d7-caf2de058c83
தனது புக்கிட் தீமா வீட்டின் இரண்டாவது மாடி பால்கனியிலிருந்து ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று சூ ஹைய்ஜின் குதித்ததில் அவரின் கை கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர்

பில்லியன் கணக்கில் கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் விவகாரம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட பத்து பேரில் ஒருவரான சூ ஹைய்ஜின், ஐந்து நாடுகளின் கடப்பிதழ்களை வைத்திருக்கலாம் என்பதன் அடிப்படையில் அவர் நாட்டை விட்டு வெளியேறும் அபாயம் அதிகம் உண்டு என்று அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் நேற்று குறிப்பிட்டார்.

சைப்ரஸ், சீனா ஆகிய நாடுகளுக்கான கடப்பிதழ்களைத் தவிர கம்போடியா, துருக்கி நாடுகளுக்கான கடப்பிதழ்களையும் சூ ஹைய்ஜின் வைத்திருக்கும் நிலையில் அவற்றைக் காவல் துறையினர் இன்னமும் கைப்பற்றவில்லை என்று வழக்கறிஞர் தெரிவித்தார்.

சிறு தீவு நாடான செயிண்ட் லூசியாவுக்கான கடப்பிதழைக் காட்டும் புகைப்படம் ஒன்றை சூ ஹைய்ஜினின் கைப்பேசியில் காவல் அதிகாரிகள் ‘சூ ஜுன்ஜியெ’ என்ற பெயரின்கீழ் கண்டுபிடித்ததையும் வழக்கறிஞர் சுட்டினார்.

சிங்கப்பூரை விட்டு சூ ஹைய்ஜின் மிக எளிதில் வெளியேறிவிடலாம் என்பதை இந்தக் கடப்பிதழ்கள் குறிக்கின்றன என்றார் அரசுத் தரப்பு வழக்கறிஞர்.

கள்ளப் பணத்தை நல்லப் பணமாக்கும் விவகாரம் தொடர்பில் ஒரு குற்றச்சாட்டையும் கைதாவதை எதிர்த்ததற்கு ஒரு குற்றச்சாட்டையும் 40 வயது சைப்ரஸ் நாட்டவரான சூ ஹைய்ஜின் எதிர்நோக்குகிறார்.

ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் சூ ஹைய்ஜின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். சாங்கி மருத்துவ மையத்திலிருந்து புதன்கிழமையன்று காணொளி இணைப்பின்வழி நீதிமன்றத்தில் முன்னிலையானார் சூ ஹைய்ஜின். இதற்கிடையே, பிணையில் வெளிவர அவர் புதன்கிழமை விண்ணப்பித்திருந்தார். ஆனால் அவரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்