404 கலைப் புரவலர்களைக் கெளரவித்த தேசியக் கலை மன்றம்

404 கலைப் புரவலர்களைக் கெளரவித்த தேசியக் கலை மன்றம்

2 mins read
1f9d1966-736b-4b18-a604-dc7a64e07d61
கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சரும் இரண்டாம் சட்ட அமைச்சருமான எட்வின் டோங்குடன் எஸ்பிஎச் மீடியா நிறுவனத்தின் தலைமை நிர்வாகி டியோ லே லிம் (வலது). - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கலைப் புரவலர்களை ஊக்குவிக்கும் வண்ணம் தேசியக் கலை மன்றம் 404 விருதுகளை அண்மையில் வழங்கி சிறப்பித்துள்ளது. விருதுபெற்ற கலைத் துறையைச் சார்ந்த 313 தனிநபர்களும் 91 நிறுவனங்களும்  2022ஆம் ஆண்டு மொத்தம் 45.06 மில்லியன் வெள்ளி மதிப்பிலான பங்களிப்பை அளித்துள்ளனர்.

 இந்தத் தொகை 2021ஆம் ஆண்டின் 32.1 மில்லியன் வெள்ளி, 2020ஆம் ஆண்டின் 39.1 மில்லியன் வெள்ளி மதிப்பிலான பங்களிப்புத் தொகைகளை விடவும் கணிசமான உயர்வைக் கண்டுள்ளது. மேலும் 2021ஆம் ஆண்டை விட விருது பெற்றோரின் எண்ணிக்கையும் 25 விழுக்காடு உயர்ந்துள்ளது. அதேபோல் 100,000 வெள்ளிக்கும் மேல் நன்கொடை அளித்த தனிப்பட்ட புரவலர்கள் 2021ஆம் ஆண்டில் 26ஆக இருந்தது. அது 2022ஆம் ஆண்டில் 34 ஆக அதிகரித்தது. 

தேசியக் கலை மன்றத்தினால் 1983ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த கலைப் புரவலர் விருதளிப்பு நிகழ்ச்சி, 40ஆவது ஆண்டாக இவ்வாண்டு கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சி செப்டம்பர் 12ஆம் தேதி மாலை 6 மணிக்கு செந்தோசா கேட்வேயில் உள்ள ஈக்வாரியஸ் ஹோட்டல் உள்ளரங்கில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விருதுகளை வழங்கிய கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சரும் இரண்டாம் சட்ட அமைச்சருமான எட்வின் டோங், “இவ்விருதளிப்பு தொடங்கப்பட்ட முதல் ஆண்டில் நான்கு விருதுகள் மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், இவ்வாண்டு 400க்கும் மேற்பட்டோர் விருதுகளை பெற்றிருப்பதைப் பார்க்கையில் பெருமையாக உள்ளது. கலைக்காக ஏறத்தாழ மொத்தம் 45 மில்லியன் வெள்ளி மதிப்பிலான பங்களிப்புகள் வழங்கப்பட்டுள்ளது மிகுந்த பெருமிதத்தையும் அளிக்கிறது,” என்று கூறினார். 

மேலும் இந்நிகழ்ச்சியில் புதிதாக ‘கெளரவ கலைப் புரவலர் விருது’ பிரிவினை அறிமுகப்படுத்திய அமைச்சர், இவ்வாண்டு இவ்விருதினைப் பெறும் யூஓபி வங்கிக்கும் எஸ்பிஎச் மீடியாவிற்கும் விருதுகளை வழங்கி சிறப்பித்தார். 

பல ஆண்டுகளாக கலைத் துறையில் தொண்டாற்றி வருபவர்களுக்கும் குறைந்தது 20 முறையாவது ‘கலையின் கௌரவப் புரவலர்’ விருதினை வென்றவர்களுக்கும் இவ்வாண்டு முதல் இந்த புதிய பிரிவில் விருதுகள் தொடர்ந்து வழங்கப்படவுள்ளன. 

மேலும் கலை மேம்பாட்டிற்கான முழுமையான அணுகுமுறையைக் கையாள செப்டம்பர் 5ஆம் தேதி தொடங்கப்பட்ட ‘அவர் எஸ்ஜி ஆர்ட்ஸ் திட்டத்தை(2023-2027)’ குறிப்பிட்ட இவர், அடுத்த தலைமுறைக் கலைஞர்களையும் பார்வையாளர்களையும் வளர்ப்பதற்கு கலைகளின் மேல் கூடுதல் அக்கறை செலுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பாக கலைக் கல்வி மற்றும் சிறு கலை அமைப்புகளைப் பேணிப் பாதுகாப்பது அவசியம் என்றும் தெரிவித்தார். 

குறிப்புச் சொற்கள்