தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மோசடிகளில் ஏமாந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

3 mins read
32a830df-d39e-4c6e-a418-35f4b39b8a9e
இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூன் வரை 22,339 மோசடிச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் மோசடிகளில் பணத்தை இழந்தோரின் எண்ணிக்கை சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023 முதல் பாதியில் அதிகரித்துள்ளது. ஆனால், பறிபோன தொகை சற்றே குறைந்துள்ளது. மோசடிக்காரர்கள் உத்திகளை மாற்றிவருவதன் அறிகுறியாக இது இருக்கலாம்.

இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூன் வரை மொத்தம் 22,339 மோசடி சம்பவங்கள் புகார் செய்யப்பட்டன. இது சென்ற ஆண்டின் 13,576 சம்பவங்களைவிட 64.5 விழுக்காடு அதிகம்.

இந்த மோசடிகளில் இழக்கப்பட்ட மொத்த தொகை $334.5 மில்லியன். இது சென்ற ஆண்டு முதல் பாதியில் பறிபோன $342.1 மில்லியனைவிடச் சற்றே குறைவு.

சென்ற ஆண்டு முழுவதும் சிங்கப்பூரில் மொத்தம் $660,7 மில்லியன் தொகை மோசடிகளில் இழக்கப்பட்டது. இது 2021ஆம் ஆண்டின் $632 மில்லியனைவிட அதிகம்.

இவ்வாண்டுக்கான அரையாண்டு புள்ளிவிவரங்களின்படி, மோசடிக்கு உள்ளானோரில் 55 விழுக்காட்டினர் $2,000 வரை இழந்ததாகக் காவல்துறை புதன்கிழமை தெரிவித்தது.

ஆகப் பரவலான பத்து வகை மோசடிகளில் ஏழு வகை மோசடிகளில் ஒருவர் சராசரியாக இழந்த தொகை குறைந்துள்ளது.

2023 முதல் பாதியில், வேலை மோசடிகளில் சராசரியாக $13,851 இழக்கப்பட்டது. சென்ற ஆண்டு இதே காலகட்டத்தின் சராசரி இழப்பு $17,532.

இணையவழி விற்பனை மோசடிகளில் இவ்வாண்டு சராசரியாக $1,635 இழக்கப்பட்டது. சென்ற ஆண்டின் சராசரி இழப்பு $3,773.

மோசடிக்காரர்கள் தங்களது உத்திகளை மாற்றியிருக்கக்கூடும் என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் தொழில் பிரிவு பேராசிரியர் லாரன்ஸ் லோ கூறினார்.

ஒருவரது வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் கறப்பதற்காக நிறைய நேரமும் முயற்சியும் எடுப்பதற்குப் பதிலாக, பெரிய வலையாக வீசி, முடிந்தவரை அதிகமானோரை அதில் சிக்கவைத்து, சிறிய தொகைகளை அபகரிக்க மோசடிக்காரர்கள் முயற்சி செய்வதாக அவர் குறிப்பிட்டார்.

“மோசடிக்காரர்கள் ஒருவரிடமிருந்து $100,000 அபகரிப்பதற்குப் பதிலாக 1,000 பேரிடமிருந்து தலா $100 அபகரிக்க முயல்வதைப் புள்ளிவிவரங்கள் காட்டக்கூடும். இதனால், ஒவ்வொரு முறையும் அபகரிக்கப்படும் தொகை சிறியதானாலும், பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்,” என்றார் அவர்.

இவ்வாண்டின் முதல் பாதியில் அரசாங்க அதிகாரிகள்போல் ஆள்மாறாட்டம் செய்யும் மோசடிகளில்தான் ஆக அதிகமாக ஒவ்வொருவரும் சராசரியாக $116,000 இழந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.

முதலீட்டு மோசடிகளில் ஒவ்வொருவரும் சராசரியாக சுமார் $60,000 இழந்தனர்.

வேலை மோசடிகள், இணையவழி விற்பனை மோசடிகள், போலி நண்பர் தொலைபேசி அழைப்பு மோசடிகள், தகவல் திருட்டு மோசடிகள், முதலீட்டு மோசடிகள் ஆகியவையே 2023 முதல் பாதியில் ஐந்து உச்ச மோசடிகளாக இருந்தன. புகார் செய்யப்பட்ட மொத்த மோசடிகளில் இவை 83.8 விழுக்காடு.

மோசடிகளுக்கு இலக்கானோரில் பாதிக்கும் அதிகமானோர் இளவயதினர் என்றும் காவல்துறை தெரிவித்தது. மொத்தம் 50.8 விழுக்காடு மோசடிகளில் 20 வயதுக்கும் 39 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் பணத்தைப் பறிகொடுத்தனர்.

மோசடிக்காரர்கள் தகவல் செயலிகள், சமூக ஊடகத் தளங்கள், இணைய விற்பனைத் தளங்கள் ஆகியவற்றின் மூலமாகவே இவர்களுடன் பெரும்பாலும் தொடர்பு கொண்டனர்.

மோசடிக்கு உள்ளான இளவயதினரில் 33.9 விழுக்காட்டினர் வேலை மோசடிகளில் பணத்தை இழந்தனர்.

மேலும் 23.9 விழுக்காட்டினர் இணையவழி விற்பனை மோசடிகளுக்கு உள்ளாயினர்.

இவ்வாண்டின் முதல் பாதியில் மோசடிக்கு உள்ளானவர்களில் கிட்டத்தட்ட மூவரில் ஒருவர் 40 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்டவர்.

இவர்களில் 24.1 விழுக்காட்டினர் போலி நண்பர் மோசடிக்கும், 19.5 விழுக்காட்டினர் இணையவழி விற்பனை மோசடிக்கும், 18,9 விழுக்காட்டினர் வேலை மோசடிக்கும் உள்ளானார்கள்.

2023 முதல் பாதியில் மோசடிக்கு உள்ளானோரில் 11.7 விழுக்காட்டினர் 60 வயதுக்கு மேற்பட்டோர். இவர்களில் 40.7 விழுக்காட்டினர் போலி நண்பர் மோசடியிலும், 12.5 விழுக்காட்டினர் தகவல் திருட்டு மோசடியிலும் பணத்தை பறிகொடுத்தனர்.

மோசடிக்கு இலக்கானோரில் 5.3 விழுக்காட்டினர் 10 வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். இவர்களில் கிட்டத்தட்ட மூவரில் ஒருவர் வேலை மோசடிக்கும், 28.6 விழுக்காட்டினர் இணையவழி விற்பனை மோசடிக்கும் உள்ளானார்கள்.

குறிப்புச் சொற்கள்