புதிய வெளிநாட்டு ஊழியர்களின் தங்குமிடத்தில் கூட்ட நெரிசல் இல்லையென உறுதிசெய்ய கூடுதல் அவகாசம் தேவை: மனிதவள அமைச்சு

1 mins read
3737d313-6856-41e2-8839-4ba229032492
தங்குவிடுதிக்கு வெளியே புதிய வெளிநாட்டு ஊழியர்களைத் தங்க வைப்பதற்கான ஒப்புதல் வழங்க ஆறு வார காலம் பிடிப்பதாகக் கூறப்படுகிறது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூருக்குப் புதிதாக வரும் வெளிநாட்டு ஊழியர்களை, தங்குவிடுதிகளுக்கு வெளியே வேறு இடங்களில் தங்கவைப்பதற்கான அனுமதியை வழங்குவதற்குக் கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாக மனிதவள அமைச்சு கூறியுள்ளது.

அவர்கள் தங்கும் இடங்களில் கூட்ட நெரிசல் இல்லை என்பதையும் தேவையான ஆவணங்கள் அனைத்தும் முறையாக சமர்ப்பிக்கப்பட்டிருப்பதையும் உறுதிசெய்ய, கூடுதல் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அதனால் இத்தகைய ஒப்புதலை வழங்குவதற்கு ஆறு வார காலம் பிடிக்கிறது என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விக்கு அளித்த பதிலில் மனிதவள அமைச்சு குறிப்பிட்டது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கான தங்குவிடுதிகள், கட்டுமானத் தளங்களில் அமைக்கப்படும் தற்காலிகத் தங்குமிடங்கள் போன்றவற்றில் தங்குவோருக்கு கிட்டத்தட்ட ஒரு வாரத்தில் அனுமதி கிடைத்துவிடுகிறது.

கட்டுமானம், கடல்துறை போன்ற துறைகளில் பணியாற்ற சிங்கப்பூருக்கு வரும் ஊழியர்களின் தங்குமிடத் தகவல்களை முதலாளிகள் சமர்ப்பிக்க வேண்டும் என்று திங்கட்கிழமை அமைச்சு அறிவித்திருந்தது.

இப்புதிய விதிமுறை இம்மாதம் 19ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

ஆனால் மலேசியக் குடியுரிமை வைத்திருப்போருக்கு இது பொருந்தாது.

குறிப்புச் சொற்கள்
மனிதவள அமைச்சுதங்கும் விடுதி