சிங்கப்பூரின் அதிபராக பதவி வகித்தபோது அதிபர் ஹலிமா யாக்கோப் சிங்கப்பூரர்களை ஐக்கியப்படுத்த முயன்று இருக்கிறார்.
நாட்டின் சேமிப்பை மிகவும் எச்சரிக்கையுடன் இருந்து பாதுகாத்து இருக்கிறார். எல்லாரையும் உள்ளடக்கிய சமூகத்தைப் பலப்படுத்தி இருக்கிறார் என்று பிரதமர் லீ சியன் லூங் பாராட்டினார்.
சிங்கப்பூருக்கு ஆற்றிய சேவைக்காக திருவாட்டி ஹலிமா யாக்கோப்புக்கு புதன்கிழமை இஸ்தானாவில் பிரிவு உபசார நிகழ்ச்சி நடந்தது. அதில் பிரதமர் உரையாற்றினார்.
திருவாட்டி ஹலிமா அனைத்து சிங்கப்பூரர்களுக்கும் உரிய ஐக்கியத்தின் சக்தி வாய்ந்த அடையாளம் என்று திரு லீ வர்ணித்தார்.
சிங்கப்பூரின் எட்டாவது அதிபர் என்ற முறையில் அவர் தம்முடைய கடமைகளை நிறைவேற்றிய பாங்கும் சிங்கப்பூருக்குத் தலைமையேற்ற விதமும் இதை எடுத்துக்காட்டுவதாக திரு லீ கூறினார்.
முக்கியமான காலகட்டத்தில் திருவாட்டி ஹலிமா வழிகாட்டி உதவி இருக்கிறார். கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசியை முதன்முதலாகப் போட்டுக்கொண்டு தொற்றுக் காலத்தின்போது பல இடங்களுக்கும் சென்று முன்களப்பணியினரைச் சந்தித்தார்.
முன்களப்பணியாளரின் தியாகத்தை அங்கீகரிக்கும் வகையில் இஸ்தானாவில் அவர்களை வரவேற்று உபசரித்து அவர்களுக்குத் திருவாட்டி ஹலிமா நன்றி கூறியதை திரு லீ சுட்டிக்காட்டினார்.
சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த, எளிமையான பின்னணியைக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மாது அதிபராக உயர்ந்ததை குறிப்பிட்ட திரு லீ, தகுதிக்கு முன்னுரிமை என்ற சிங்கப்பூரின் முறை நன்கு செயல்படுகிறது என்பதையே திருவாட்டி ஹலிமாவின் வரலாறு காட்டுகிறது என்று தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
திருவாட்டி ஹலிமா எட்டு வயதுச் சிறுமியாக இருந்தபோது அவருடைய தந்தை மாண்டுவிட்டார். அந்தத் தந்தை ஒரு காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
ஐந்து பிள்ளைகளில் கடைசி குழந்தையான திருவாட்டி ஹலிமா, நாசி படாங் விற்றுவந்த தன்னுடைய தாயாருக்குச் சிறுவயதிலேயே உதவினார்.
துணிமணிகளைத் துவைப்பது, மேசை, நாற்காலிகளைத் துடைப்பது, வாடிக்கையாளர்களுக்கு உணவுப்பொருள்களைக் கொடுத்து சேவையாற்றுவது போன்ற வேலைகளில் தாயாருக்குத் திருவாட்டி ஹலிமா சிறுவயதிலேயே உதவி வந்தார்.
சிங்கப்பூர் சீன மகளிர் பள்ளி, தஞ்சோங் காத்தோங் மகளிர் பள்ளியில் படித்த அவர், சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் படித்து பட்டம் பெற்றார்.
திருவாட்டி ஹலிமா 1978ல் தேசிய தொழிற்சங்கக் காங்கிரசில் சட்டத்துறை அதிகாரியாகச் சேர்ந்தார். பிறகு அரசியலில் ஈடுபட்டார்.
2011ல் சமூக வளர்ச்சி, இளையர் விளையாட்டுத் துறை துணை அமைச்சரானார். இரண்டாண்டு கழித்து சிங்கப்பூர் நாடாளுமன்ற நாயகராக அவர் பொறுப்பேற்றார்.
அத்தகைய பொறுப்பேற்ற முதல் பெண்மணி என்ற சாதனையை நிகழ்த்தினார். 2017ல் சிங்கப்பூரின் முதல் பெண் அதிபரானார்.
அதிபர் பதவி வகித்தபோது திருவாட்டி ஹலிமா கடுமையாகப் பாடுபட்டு பல்வேறு சமூகக் குழுக்களுக்கு இடையில் பரஸ்பர புரிந்துணர்வு, நம்பிக்கை, மரியாதையைப் பலப்படுத்தினார் என்று தெரிவித்த பிரதமர், திருவாட்டி ஹலிமா ஒருமித்த கவனம் செலுத்தி பாடுபட்ட நான்கு முக்கிய துறைகளைப் பற்றி குறிப்பிட்டார்.
ஆண்-பெண்ணுக்கு இடையில் சமத்துவத்தைச் சாதிப்பது, உடற்குறையாளர்களை ஒருங்கிணைப்பது, மனநலப் பிரச்சினைகள், ஊழியர்களின் நலன்கள் ஆகியவை அந்த நான்கு அம்சங்கள் என்றாரவர்.
உலகளவில் சிங்கப்பூரை பிரதிநிதிக்க திருவாட்டி ஹலிமா மேற்கொண்ட முயற்சிகளைச் சுட்டிக்காட்டி திரு லீ, பல நாடுகளுடன் சிங்கப்பூரின் உறவையும் தோழமையையும் திருவாட்டி ஹலிமா பலப்படுத்தியதாகக் கூறினார்.
தொற்று காலத்தில் எல்லைகள் அடைபட்டு இருந்தாலும்கூட திருவாட்டி ஹலிமா சாதித்தார்.
பல தலைவர்களை வரவேற்று உபசரித்தார். உலகின் பல நாடுகளுக்கும் பயணங்களை மேற்கொண்டு சிங்கப்பூரைப் பற்றி சிறந்த முறையில் மற்ற நாடுகள் புரிந்துகொள்ள உதவினார்.
சிங்கப்பூருக்கு புதிய வர்த்தக வாய்ப்புகள் கிடைக்க பாடுபட்டார். வெளிநாட்டில் வாழும் சிங்கப்பூரர்கள் சிங்கப்பூருடன் தொடர்புகொண்டிருக்க ஊக்குவித்தார்.
சிங்கப்பூரின் தலைசிறந்த அரசதந்திரி என்று திருவாட்டி ஹலிமாவை திரு லீ வர்ணித்தார்.
கண்ணியத்தோடும் கருணையோடும் இந்தப் பணிகளைத் திருவாட்டி ஹலிமா நிறைவேற்றி இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
அதிபராக பணியாற்றிய காலத்தில் திருவாட்டி ஹலிமாவுக்கு ஆதரவு அளித்து உதவிய அவருடைய கணவர் திரு முகம்மது அப்துல்லா அல்காப்ஷிக்கும் பிரதமர் பாராட்டும் நன்றியும் தெரிவித்துக்கொண்டார்.
நம் சமூகத்தை மேம்படுத்த நீங்கள் கொண்டிருந்த உறுதிப்பாடும் ஒவ்வொரு சிங்கப்பூரரிடத்திலும் நீங்கள் கொண்டிருந்த அக்கறையும் தொடர்ந்து சிங்கப்பூரர்களுக்கு வழிகாட்டும் என்று திரு லீ நம்பிக்கைத் தெரிவித்தார்.

