தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

$1பி. சட்டவிரோத பணவிவகாரம்: லண்டன் கட்டடங்களில் சந்தேக நபருக்குத் தொடர்பு

2 mins read
1df6493b-1ebd-4204-aabd-432779353723
லண்டனில் உள்ள இரண்டு கட்டடங்கள் $73 மில்லியனுக்கும் அதிக விலைக்கு நியூ யிஹாவ் என்ற நிறுவனத்திற்கு விற்கப்பட்டன. அவற்றில் இந்தக் கட்டடம் ஒன்று. நியூ யிஹாவ் நிறுவனத்தில் சூ ஹாய்ஜின் பங்குதாரராக இருக்கிறார். - படம்: கூகல் வரைபடம் 

சிங்கப்பூரில் விசாரிக்கப்பட்டு வரும் $1 பில்லியன் சட்டவிரோத பண விவகாரம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 10 பேரில் சூ ஹாய்ஜின் என்பவர் ஒருவர்.

அவர் லண்டன் நகரில் இரண்டு கட்டடங்களை வாங்குவதற்காக $73 மில்லியனுக்கும் அதிக தொகையைக் கொடுத்து இருப்பது தெரியவந்து உள்ளதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.

லண்டனில் எண் 283 ஆக்ஸ்ஃபர்ட் ஸ்திரீட், எண் 11 பிரின்சஸ் ஸ்திரீட் என்ற முகவரிகளில் ஒன்றுக்குப் பின் ஒன்றாக அருகருகே அமைந்துள்ள அந்த இரண்டு கட்டடங்களும் 2021 டிசம்பர் 17ஆம் தேதி £43.3 மில்லியன் (S$73.5மி) விலைக்கு நியூ யிஹாவ் என்ற நிறுவனத்திற்கு விற்கப்பட்டதாக பிரிட்டனின் சொத்து ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

நியூ யிஹாவ் நிறுவனம் ஜெர்சி என்ற தீவு நாட்டில் பதியப்பட்டுள்ளது. அது பிரான்சின் வடமேற்கு கடற்கரை அருகே உள்ளது.

அந்தக் கட்டடங்கள் வாங்கப்பட்டதற்கு இரண்டு மாதங்கள் முன்புதான் அந்த நிறுவனம் பதியப்பட்டது.

அந்த நிறுவனத்தைக் கட்டுப்படுத்துகின்ற ஓர் அமைப்பில் சூ ஹாய்ஜின்னுக்கு 25% பாத்தியதை இருக்கிறது.

சூ ஹாய்ஜின், 40, சீனாவில் பிறந்தவர். அவர் சிங்கப்பூரில் இரண்டு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார். அவர் யுஓபி வங்கிக்கணக்கில் $4 மில்லியனுக்கும் அதிக தொகையை வைத்திருக்கிறார். சட்டவிரோதமாக நடத்தப்பட்ட சூதாட்டக் குற்றச்செயல்கள் மூலம் அந்தப் பணம் பெறப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.

சூ ஹாய்ஜின், அவரின் மனைவி இருவரிடம் இருந்தும் $170 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள சொத்துகளை அதிகாரிகள் கைப்பற்றி இருக்கிறார்கள்.

லண்டன் ஆக்ஸ்ஃபர்ட் ஸ்திரீட்டில் உள்ள சொத்தில் சூ ஹாய்ஜின் கொண்டுள்ள பாத்தியதைப் பற்றி புதன்கிழமை நடந்த நீதிமன்ற விசாரணையின்போது தெரிவிக்கப்பட்டது.

அந்த விசாரணையின்போது அவருக்குப் பிணை மறுக்கப்பட்டது.

சூ ஹாய்ஜின் அளித்த வாக்குமூலம் ஒன்றைக் காவல்துறை தாக்கல் செய்துள்ளது. அதைப் பார்க்கையில் தனக்கு வெளிநாடுகளில் 10 சொத்துகள் இருப்பதாக சூ ஹாய்ஜின் ஒப்புக் கொண்டுள்ளளார். அவற்றின் மதிப்பு $14.2 மில்லியனுக்கும் அதிகம்.

சூ ஹாய்ஜின்னிடம் ஐந்து கடவுச்சீட்டுகள் இருந்தன.

குறிப்புச் சொற்கள்