இந்தியாவில் மும்மடங்கு விரிவடைய டிபிஎஸ் திட்டம்: பியு‌‌ஷ் குப்தா

1 mins read
93b63930-f83a-40c3-8005-e79558dafbe7
சிங்கப்பூரில் நடந்த ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன நிகழ்ச்சியில் உரையாற்றிய டிபிஎஸ் குழுமத்தின் தலைமை நிர்வாகி பியு‌‌ஷ் குப்தா. - படம்: ராய்ட்டர்ஸ்

சீனாவின் பொருளியல் நிலவரம் பற்றி தற்போது பரவலாக நிலவும் அவநம்பிக்கை ‘மிகைப்பட்டதன்று’ என்று டிபிஎஸ் குழுமத்தின் தலைமை நிர்வாகி பியு‌‌ஷ் குப்தா கூறியிருக்கிறார்.

அதே வேளையில், இந்தியா மீதுள்ள நம்பிக்கையால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் டிபிஎஸ் வங்கி அந்நாட்டில் தனது தொழிலை மும்மடங்கு விரிவுபடுத்தத் திட்டமிடுவதாக அவர் தெரிவித்தார்.

“சீனாவில் குறுகியகாலத்தில் உண்மையாகவே ஓரளவு எதிர்க்காற்று வீசுகிறது,” என்று சிங்கப்பூரில் நடந்த ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன நிகழ்ச்சியில் திரு குப்தா கூறினார். கடன் சுமையில் உள்ள சொத்துத் துறையை அவர் சுட்டிக்காட்டினார்.

இருந்தாலும், வலுவான வளர்ச்சி வாய்ப்புகள் உள்ள துறைகள் சீனாவில் இன்னமும் இருப்பதாக அவர் கூறினார். மின்சார வாகனங்கள் அதற்கு ஓர் எடுத்துக்காட்டு. ‌ஷென்ஜென் கிராமப்புற வணிக வங்கியில் உள்ள பங்குகளை அதிகரிக்கவும் டிபிஎஸ் திட்டமிடுகிறது.

இந்நிலையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள தனது வங்கித் தொழிலை மும்மடங்கு விரிவுபடுத்த டிபிஎஸ் திட்டமிடுவதாகத் திரு குப்தா கூறினார்.

டிபிஎஸ் வங்கியின் சொத்து நிர்வாகத் தொழில் சிறப்பாகச் செயல்படுவதாகவும் திரு குப்தா குறிப்பிட்டார். ஆசியா, மத்திய கிழக்கு, ஐரோப்பிய வட்டாரங்களிலிருந்து வரும் பணவரவால் இத்தொழில் பலனடைந்திருப்பதாகவும், பணவரவு தொடர்ந்து வலுவாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்