ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் புதிய நல்வாழ்வுத் தோட்டம்

ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் புதிய நல்வாழ்வுத் தோட்டம்

2 mins read
b0a2577f-1408-4ead-afe5-dd30db1f9354
புதிய தோட்டத்தில் இயற்கையோடு இயைந்த உடலுறுதி வட்டாரம் ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. அது முதியோருக்கும் வயது வந்தோருக்கும் பொருத்தமானது. பல உயரங்களில் உள்ள மரக்கட்டைகளில் தாண்டி தாண்டி சென்று உடலின் சமநிலைத் திறனைப் பலப்படுத்திக் கொள்ளலாம். - படம்: தேசிய பூங்காக் கழகம்/ஃபேஸ்புக்  
multi-img1 of 2

ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவுக்குச் செல்வோர் இப்போது புதிய உடல்நல நல்வாழ்வு வசதிகள் மூலம் பலனடைய முடியும்.

அந்த இடத்தில் உடலுறுதி பயிற்சிகளில் ஈடுபடலாம். விளையாடியும் மகிழலாம்.

அந்தப் பூங்காவின் முதலாவது மன, உடல்நல தோட்டத்தின் மூலம் அவர்கள் பலனடையலாம்.

கேபிஎம்ஜி உடல்நல தோட்டம் என்ற 1.1 ஹெக்டர் பரப்பில் அமைந்துள்ள புதிய தோட்டத்தில் பல வசதிகளை தேசிய பூங்காக் கழகமும் கேபிஎம்ஜி நிபுணத்துவச் சேவைகள் நிறுவனமும் திறந்து இருக்கின்றன.

அந்தத் தோட்டத்தில் மன, உடல்நல தோட்டம், விளையாட்டுத் தோட்டம், பசுமை சூழ்ந்த உடலுறுதிப் பகுதி, குட்டை மகிழ்உலா ஆகிய பலவும் இடம்பெற்று இருக்கின்றன.

இவை எல்லாம் இளையோரையும் முதியோரையும் கவரும் வகையில் உள்ளன.

மன, உடல்நல தோட்டத்தில் இயற்கையோடு இயைந்து மக்கள் கலந்துறவாடி உடலுக்கும் மனதுக்கும் ஏற்ற சூழலை அனுபவிக்கலாம்.

ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா டி- வட்டாரத்தில் அமைந்து இருக்கும் அந்தத் தோட்டம் காற்பந்துத் திடலைப் போல ஒன்றரை மடங்கு பெரிதாக இருக்கிறது.

அதை அமைத்து முடிக்க ஈராண்டு காலம் பிடித்தது.

புதிய தோட்டம் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா கலந்துகொண்டு சிறப்பித்தார்.

அந்தத் தோட்டம் பல தலைமுறையினருக்கும் இடமளிக்கும் வகையில், உடற்குறையாளர்கள் உட்பட அனைத்து வயதினரையும் கவரும் வகையில் அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது என்று அமைச்சர் தெரிவித்தார்.

தங்கு தடையில்லாத வழிகள், மக்கள் ஓய்வெடுக்க இடங்கள், இருக்கைகளுடன் கூடிய இடங்கள் எல்லாம் அங்கு இருக்கின்றன.

அரசாங்கமும் நிறுவனங்களும் சேர்ந்து செயல்பட்டால் பொதுமக்களுக்கு எந்த அளவுக்கு நன்மைகளைச் செய்ய முடியும் என்பதற்கு இந்தத் தோட்டம் மிகப் பெரிய எடுத்துக்காட்டாக இருக்கிறது என்று குமாரி இந்திராணி கூறினார்.

சிங்கப்பூரைப் பசுமை வளத்திற்கு நடுவே உள்ள ஒரு நகராக உருமாற்ற நாம் முயல்கிறோம். இந்த நிலையில், இந்தப் புதிய தோட்டம் மக்களை இயற்கையோடு இயைந்த வாழ்வை மேற்கொள்ள உதவும் என்றாரவர்.

சிங்கப்பூரில் உள்ள பூங்காக்களில் 10 மன, உடல்நல தோட்டங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. அவற்றில் இந்தப் புதிய தோட்டமும் ஒன்று.

சிங்கப்பூரில் உள்ள பூங்காக்களில் 2030ஆவது ஆண்டுவாக்கில் 30 மன, உடல்நல தோட்டங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்பது தேசிய பூங்காக் கழகத்தின் இலக்காக இருக்கிறது.

புதிய தோட்டத்தை அமைப்பதற்கு ஆன செலவு பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.

அந்தத் தோட்டத்தில் 2024 தொடங்கி ஐந்தாண்டு காலத்திற்கு மன, உடல்நல தோட்டக்கலை செயல்திட்டங்கள் இடம்பெற தொடர்ந்து நிதி ஆதரவு அளிக்கப்போவதாக சிங்கப்பூரில் உள்ள கேபிஎம்ஜி நிர்வாகப் பங்காளியான ஓங் பாங் தை கூறினார்.

குறிப்புச் சொற்கள்